» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

மாணவி கொலை வழக்கில் குற்றவாளி சிக்கியது எப்படி? தூத்துக்குடி எஸ்பி மதன் பேட்டி!

வியாழன் 19, மார்ச் 2026 7:59:06 PM (IST)



வேடநத்தம் கிராமத்தில் பிளஸ்-2 மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்ட வழக்கில், அறிவியல் பூர்வமான ஆதாரங்களின் அடிப்படையில் ஒரு நபர் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் மதன் தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள வேடநத்தம் கிராமத்தைச் சேர்ந்த 12-ஆம் வகுப்பு மாணவி, கடந்த 11-ஆம் தேதி பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டு கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டுக் கிடந்தார். இந்தச் சம்பவம் தமிழகம் மட்டுமன்றி நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. பல்வேறு அரசியல் கட்சிகளும் அமைப்புகளும் இதற்கு கடும் கண்டனம் தெரிவித்தன. சம்பவம் நடந்து 9 நாட்கள் ஆகியும் குற்றவாளி கைது செய்யப்படாதது குறித்துப் பல்வேறு தரப்பினரும் கேள்வி எழுப்பி வந்தனர்.

இந்நிலையில், இன்று மாலை செய்தியாளர்களைச் சந்தித்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் மதன், வழக்கு விசாரணை குறித்து விரிவான தகவல்களைப் பகிர்ந்து கொண்டார்: குளத்தூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட இந்தச் சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த 4 டி.எஸ்.பி-க்கள், 6 ஆய்வாளர்கள் உட்பட 150 காவலர்கள் கொண்ட 10 தனிப்படைகள் அமைக்கப்பட்டன.

சம்பவ இடத்தில் சிசிடிவி கேமராக்கள் இல்லாத போதிலும், அப்பகுதியைச் சுற்றியுள்ள 98 இடங்களில் இருந்த கண்காணிப்பு கேமராக்கள் ஆய்வு செய்யப்பட்டன. மேலும், 2,514 தொலைபேசி அழைப்பு விவரங்கள் மற்றும் டிஜிட்டல் ஆவணங்கள் சேகரிக்கப்பட்டன. சுமார் 800-க்கும் மேற்பட்டவர்களிடம் நேரடி விசாரணை நடத்தப்பட்டது. இதில் சந்தேகத்திற்குரிய 461 நபர்களிடம் டிஜிட்டல் மற்றும் நேரடி முறையிலான தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

கிராம மக்களிடம் பெறப்பட்ட தகவல்கள், டிஜிட்டல் ஆவணங்கள் மற்றும் அறிவியல் பூர்வமான ஆதாரங்களின் அடிப்படையில், இந்தச் சம்பவத்தில் தொடர்புடைய ஒரு நபரைத் தனிப்படையினர் இன்று கைது செய்துள்ளனர். எவ்வித அழுத்தத்திற்கும் இடம் கொடுக்காமல், உயர் நீதிமன்றத்தின் கண்காணிப்பின் கீழ் இந்த விசாரணை நேர்மையாக நடத்தப்பட்டுள்ளதாக எஸ்பி தெரிவித்தார்.



பாதிக்கப்பட்ட சிறுமியின் பெயரையோ அல்லது புகைப்படத்தையோ சமூக வலைதளங்களில் பயன்படுத்துவது சட்டப்படி குற்றமாகும். இதுவரை அவ்வாறு பயன்படுத்திய 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இனிமேல் யாராவது சிறுமியின் அடையாளத்தை வெளியிட்டால், அவர்கள் மீது பிரிவு 23-ன் கீழ் (POCSO Act) எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டு கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எஸ்பி எச்சரித்துள்ளார்.

இச்சம்பவத்தைத் தொடர்ந்து, ஒவ்வொரு கிராமத்திலும் தலா 10 சிசிடிவி கேமராக்கள் பொருத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும், பெண் காவலர்கள் மூலம் கிராமங்களில் ரோந்துப் பணிகளைத் தீவிரப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.


மக்கள் கருத்து

shafiMar 20, 2026 - 09:21:44 AM | Posted IP 172.7*****

First arrange rest room for every house

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads



Tirunelveli Business Directory