» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

ஜெயராஜ் - பென்னிக்ஸ் கொலையை மூடிமறைக்க முயன்றவர் இபிஎஸ் : கனிமொழி எம்.பி. சாடல்

செவ்வாய் 21, ஏப்ரல் 2026 12:02:16 PM (IST)

"சாத்தான்குளத்தில் தந்தை - மகன் கொல்லப்பட்ட சம்பவத்தை அப்போதைய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மூடிமறைக்க முயன்றார்" என்று திமுக துணைப் பொதுச் செயலாளரும், எம்.பி.யுமான கனிமொழி கருணாநிதி குற்றம் சாட்டியுள்ளார்.

தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் சட்டமன்றத் தொகுதியில் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் சார்பில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் ஊர்வசி அமிர்தராஜை ஆதரித்து, சாத்தான்குளம் காமராஜர் சிலை அருகில் கனிமொழி கருணாநிதி தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். 

அப்போது அவர் 'கை' சின்னத்திற்கு வாக்கு சேகரித்துப் பேசியதாவது: "சாத்தான்குளத்தில் ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் ஆகியோர் காவல் நிலையத்தில் அநியாயமாகத் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டபோது, அந்தச் சம்பவத்தை அப்போதைய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மூடிமறைக்கவே முயன்றார். நாம் அனைவரும் ஒன்றாக இணைந்து அந்த அநீதிக்கு எதிராகப் போராடினோம்.

'பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு நீதி கிடைக்கவில்லை என்றால் திமுக சார்பில் வழக்கு தொடர்வோம்' என்று தலைவர் மு.க.ஸ்டாலின் எச்சரித்த பிறகுதான், அந்த வழக்கு சிபிஐ விசாரணைக்கு மாற்றப்பட்டது. அதுவரை, குற்றச்சாட்டுக்கு உள்ளானவர்களைப் பாதுகாப்பதிலேயே அரசு குறியாக இருந்தது.பொள்ளாச்சியில் பெண்களுக்கு எதிராகக் கொடூரமான குற்றங்கள் நடந்தபோதும், எடப்பாடி பழனிசாமி குற்றவாளிகளைக் காப்பாற்றவே பாடுபட்டார்.

தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் பலர் கொல்லப்பட்டபோது, முதலமைச்சராக இருந்த அவர், 'எனக்குத் தெரியாது; தொலைக்காட்சியைப் பார்த்துதான் தெரிந்துகொண்டேன்' என்று பொறுப்பற்ற முறையில் பதிலளித்தார். காவல்துறை அவர் கட்டுப்பாட்டில் இருந்தும் இத்தகைய பதிலைச் சொன்னவர் அவர். "மக்களுக்குப் பாதுகாப்பாக இல்லாத, அநீதி இழைப்பவர்களுக்குத் துணையாக நிற்கும் இத்தகைய நபர்களை நாம் சரியாகப் புரிந்துகொண்டு வாக்களிக்க வேண்டும்," என்று கனிமொழி கருணாநிதி பேசினார்.

முன்னதாக அவர் திருச்செந்தூர் சட்டமன்றத் தொகுதியில், போட்டியிடும், தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக செயலாளரும், வேட்பாளருமான அனிதா ராதாகிருஷ்ணனை ஆதரித்து, திருச்செந்தூர் காமராஜர் சிலை அருகில், திமுக துணைப் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற திமுக குழுத் தலைவருமான கனிமொழி கருணாநிதி தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டு, பொதுமக்களிடம் உதயசூரியன் சின்னத்திற்கு வாக்குகள் சேகரித்தார்.


மக்கள் கருத்து

மக்களின் ஒருவன்Apr 21, 2026 - 12:40:12 PM | Posted IP 162.1*****

சரி, அந்த 9 குற்றவாளிகளை உருப்படியாக தூக்குல போட்டால்தான் நம்புவோம்.

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads



Tirunelveli Business Directory