» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

அங்கன்வாடி வேலை வாங்கித் தருவதாக ரூ.4.5 லட்சம் மோசடி: பெண் கைது - இளம்பெண் தற்கொலை முயற்சி!

வெள்ளி 8, மே 2026 8:22:20 AM (IST)

அங்கன்வாடி பணியாளர் வேலை வாங்கித் தருவதாகக் கூறி பலரிடம் லட்சக்கணக்கில் பணம் வசூலித்து மோசடி செய்த பெண்ணை நெல்லை போலீசார் கைது செய்துள்ளனர். இந்த மோசடியால் பாதிக்கப்பட்ட இளம்பெண் ஒருவர் மனமுடைந்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நெல்லை மேலப்பாளையம் முருகன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் முருகன். இவரது மகள் அஜிதா, பொறியியல் முடித்துவிட்டு தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். அஜிதாவிற்கு அவருடன் படித்த தோழி மூலமாக நீலாவதி, ஜான்சிராணி உள்ளிட்ட சிலர் அறிமுகமாகியுள்ளனர். அவர்கள் அஜிதாவிற்கு அரசு அங்கன்வாடி பணியாளர் வேலை வாங்கித் தருவதாக ஆசை வார்த்தை கூறியுள்ளனர்.

இதனை நம்பிய அஜிதா, தனது வேலைக்காகவும் மற்றும் தனது உறவினர்கள் சிலரது வேலைக்காகவும் சேர்த்து மொத்தம் ரூ.4 லட்சத்து 50 ஆயிரம் பணத்தை ஜான்சிராணி மற்றும் அவரது கூட்டாளிகளிடம் கொடுத்துள்ளார். ஆனால், நீண்ட நாட்களாகியும் வேலை வாங்கித் தராமலும், வாங்கிய பணத்தைத் திருப்பித் தராமலும் அவர்கள் மோசடி செய்ததாகக் கூறப்படுகிறது.

தான் கொடுத்த பணம் ஏமாற்றப்பட்டதை அறிந்த அஜிதா கடும் மன உளைச்சலுக்கு ஆளானார். இதனால் விரக்தியடைந்த அவர், கடந்த சில நாட்களுக்கு முன்பு விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார். உயிருக்கு ஆபத்தான நிலையில் மீட்கப்பட்ட அவர், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சைக்குப் பின் உயிர் தப்பினார்.

இது குறித்து அளிக்கப்பட்ட புகாரின் பேரில், பாளையங்கோட்டை தாலுகா போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நஸ்ரின் இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினார். தீவிரத் தேடுதல் வேட்டைக்குப் பிறகு, இந்த மோசடியில் தொடர்புடைய ஜான்சிராணி என்பவரை நேற்று முன்தினம் போலீசார் கைது செய்தனர். மேலும், தலைமறைவாக உள்ள நீலாவதி உள்ளிட்ட சிலரை போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Tirunelveli Business Directory