» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

9 உயிர்களைப் பலிவாங்கிய தண்ணீர்ப் பிரச்சினை: நெல்லை கொடூரக் கொலைகளின் பின்னணி!

சனி 4, ஜூலை 2026 9:10:52 PM (IST)

திருநெல்வேலி கல்லிடைக்குறிச்சி அருகே மூலச்சி கிராமத்தில் நிகழ்ந்த தந்தை-மகன் படுகொலை வழக்கில் 11 பேர் மீது வழக்குப் பதிவு செய்துள்ள போலீசார், தலைமறைவாக இருந்த 3 பேரை அதிரடியாகக் கைது செய்துள்ளனர்.

மூலச்சி கிராமத்தைச் சேர்ந்த விவசாயி சித்திரபுத்திரன் மகன் காளிமுத்து. இவர் நேற்று முன்தினம் மாலையில் தனது மகன்கள் சின்னத்துரை, ஜெயராஜ் ஆகியோருடன் இருசக்கர வாகனத்தில் ரெட்டியார்புரத்தில் இருந்து மூலச்சி நோக்கிச் சென்று கொண்டிருந்தார். மாதுடையார்குளம் அருகில் சென்றபோது, கார் மற்றும் 3 இருசக்கர வாகனங்களில் பின்தொடர்ந்த மர்ம கும்பல், காளிமுத்துவின் வாகனத்தின் மீது காரை பயங்கரமாக மோதியது.

இதில் தூக்கி வீசப்பட்டதில் பலத்த காயமடைந்த 5 வயது சிறுவன் ஜெயராஜ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தான். உயிருக்கு விபரீதமாகப் போராடிய காளிமுத்துவை அந்த கும்பல் அரிவாளால் வெட்டி, தலையைத் துண்டித்துக் கொடூரமாகப் படுகொலை செய்தது. மற்றொரு சிறுவன் சின்னத்துரையின் காலில் வெட்டிவிட்டு, காளிமுத்துவின் துண்டிக்கப்பட்ட தலையைக் கல்லிடைக்குறிச்சி அருகே கரம்பை முக்கியச் சாலையில் வீசிவிட்டு அந்தக் கும்பல் தப்பியோடியது.

இந்த இரட்டைக்கொலை குறித்து வீரவநல்லூர் போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். கொலையாளிகளைப் பிடிக்க மாவட்ட போலீஸ் அதிகாரி விஷ்வேஷ் பா.சாஸ்திரி உத்தரவின்பேரில் 9 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. இந்த நிலையில், இக்கொலை தொடர்பாக மூலச்சி கிராமத்தைச் சேர்ந்த மகேந்திரன், குமார் மற்றும் ஊர்காடு பகுதியைச் சேர்ந்த முத்துச்செல்வன் ஆகிய 3 பேரைப் போலீசார் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். 

மேலும், இந்த வழக்கில் தொடர்புடைய மகேஷ், மணிகண்டன், கிருஷ்ணன், அருள், மணி, பட்டுராஜா, சுபாஷ், தங்கதுரை, கந்தன், ராஜதுரை உள்ளிட்ட 11 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு, தலைமறைவாக உள்ள மற்றவர்களைப் பிடிக்கத் தேடுதல் வேட்டை முடுக்கிவிடப்பட்டுள்ளது.

9 உயிர்களைப் பலிவாங்கிய தண்ணீர்ப் பிரச்சினை:

போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், கடந்த 2006-ம் ஆண்டு தெருக்குழாயில் தண்ணீர் பிடிப்பதில் உறவினர்களான சித்திரபுத்திரன் மற்றும் பெருமாள்பாண்டியன் குடும்பத்துத் பெண்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலே இந்தத் தொடர் கொலைகளுக்குக் காரணம் எனத் தெரியவந்துள்ளது.

2007-2008: பெருமாள்பாண்டியன் தரப்பினர் சித்திரபுத்திரன் மகன் சுப்பிரமணியனைக் கொலை செய்தனர். அதன் தொடர்ச்சியாகச் சாத்தான்குளத்தில் பாபநாசம், பெருமாள் ஆகிய இருவர் படுகொலை செய்யப்பட்டனர். இதற்குப் பழிக்குப்பழியாகக் காளிமுத்து தரப்பினர் சுப்பையா என்பவரை வெட்டிக்கொலை செய்தனர்.

2009-2010: திருப்பூர் பல்லடத்தில் சின்னதம்பியும், பின்னர் பெருமாள்பாண்டியனும் தலைதுண்டிக்கப்பட்டுக் கொல்லப்பட்டனர். அதே ஆண்டு திண்டுக்கல்லில் சித்திரபுத்திரன் தரப்பு குமார் என்பவரும் படுகொலை செய்யப்பட்டார்.

இதன் மூலம் கடந்த 20 ஆண்டுகளில் இருதரப்பிலும் மொத்தம் 9 உயிர்கள் பறிபோயுள்ளன. கடந்த 2010-ம் ஆண்டு பெருமாள்பாண்டியன் மீது எந்த இடத்தில் காரை மோதி, தலை துண்டிக்கப்பட்டுக் கொலை செய்யப்பட்டாரோ, அதே கரம்பை பகுதியிலேயே தற்போது காளிமுத்துவின் தலையை வீசியுள்ளனர். மேலும், அன்றைய சம்பவத்தைப் போன்றே பழைய மாடல் கார் ஒன்றை விலைக்கு வாங்கி இந்த இரட்டைக்கொலையை அரங்கேற்றியுள்ளனர் என்பதும் போலீஸ் விசாரணையில் அம்பலமாகியுள்ளது. அசம்பாவிதங்களைத் தவிர்க்க மூலச்சி கிராமத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Tirunelveli Business Directory