» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

கருப்பட்டி மோசடி: சீனி கலந்து விற்று வரி ஏய்ப்பு செய்த 5 வியாபாரிகளுக்கு ரூ.38 கோடி அபராதம்!

திங்கள் 20, ஜூலை 2026 8:05:49 AM (IST)

கடந்த 6 ஆண்டுகளாக உடன்குடி கருப்பட்டியில் சர்க்கரை (சீனி) கலந்து விற்று வரி ஏய்ப்பு மோசடியில் ஈடுபட்ட 5 வியாபாரிகளுக்கு மொத்தம் 38 கோடி ரூபாய் அபராதம் விதித்து நெல்லை ஜி.எஸ்.டி. அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளனர்.

‘கற்பகதரு’ என்று அழைக்கப்படும் பனை மரத்தில் இருந்து கிடைக்கப்பெறும் பதநீரைக் காய்ச்சி கருப்பட்டி தயாரிக்கப்படுகிறது. பனை மரங்கள் நிறைந்த தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி பகுதியில் தயாரிக்கப்படும் கருப்பட்டிக்கு விசேஷ புவிசார் குறியீடு கிடைத்துள்ளது. இதனால் உடன்குடி பகுதியில் பலரும் பனைத்தொழிலில் ஆர்வமுடன் ஈடுபட்டு, கருப்பட்டி தயாரித்து விற்பனை செய்து வருகின்றனர்.

பனை தொழிலாளர்களை ஊக்குவிக்கும் வகையில், பதநீரில் இருந்து நேரடியாகத் தயாரிக்கப்படும் அசல் கருப்பட்டி, கற்கண்டு ஆகியவற்றுக்கு மத்திய அரசு ஜி.எஸ்.டி. வரி விலக்கு அளித்துள்ளது. எனினும், அவற்றை வணிக ரீதியாகக் கடைகள், சூப்பர் மார்க்கெட்டுகளில் விற்பனை செய்யும்போது 5 சதவீத ஜி.எஸ்.டி. விதிக்கப்படுகிறது.

பதநீரில் 75 சதவீதத்திற்கும் அதிகமாகச் சர்க்கரை கலந்து கருப்பட்டி, கற்கண்டு போன்றவை தயாரித்தால், அவற்றிற்கு 18 சதவீத வரி விதிக்கப்படும் சட்டம் உள்ளது. இந்த நிலையில், தமிழகத்திலேயே உடன்குடி பகுதியில்தான் சர்க்கரை மூட்டைகளை வியாபாரிகள் வழக்கத்திற்கு மாறாக அதிகளவில் கொள்முதல் செய்வதாக நெல்லை ஜி.எஸ்.டி. அதிகாரிகளுக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இத்தகவலின் அடிப்படையில் அதிகாரிகள் உடன்குடி பகுதியில் தீவிர ஆய்வு நடத்தினர்.

இவ்ஆய்வில், உடன்குடி பகுதியில் கடந்த சில வாரங்களில் மட்டும் 5 கோடி ரூபாய் மதிப்பிலான சர்க்கரை மூட்டைகளை வியாபாரிகள் கொள்முதல் செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. பதநீரில் 60 முதல் 70 சதவீதம் வரை சர்க்கரையைக் கலந்து கருப்பட்டி தயாரித்து, அதனை அசல் கருப்பட்டி என்று கூறி 6 கோடி ரூபாய் வரை விற்று மோசடியில் ஈடுபட்டது உறுதியானது.

சர்க்கரை கலந்து தயாரிக்கப்பட்ட கருப்பட்டிக்கு 18 சதவீத ஜி.எஸ்.டி. செலுத்தாமல், அசல் கருப்பட்டி எனக் கூறி வெறும் 5 சதவீத வரியை மட்டுமே செலுத்தி கடந்த 6 ஆண்டுகளாகப் பல்வேறு முறைகேடுகளைச் செய்து ஜி.எஸ்.டி. வரி ஏய்ப்பில் ஈடுபட்டு வந்துள்ளனர்.

முறைகேடுகள் முழுமையாகக் கண்டறியப்பட்டதை அடுத்து, இந்த மோசடியில் தொடர்புடைய உடன்குடி பகுதியைச் சேர்ந்த 5 கருப்பட்டி வியாபாரிகளுக்கு மொத்தம் 38 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக ஜி.எஸ்.டி. அதிகாரிகள் அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் மாவட்ட விநியோகஸ்தர்கள் மற்றும் வணிகர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


மக்கள் கருத்து

adapJul 20, 2026 - 10:02:41 PM | Posted IP 162.1*****

paavigala

naan thaanJul 20, 2026 - 02:28:56 PM | Posted IP 104.2*****

இந்த ஊடகம் அந்த 5 வியாபாரிகளின் பெயர்களை கூட இதில் குறிப்பிடவில்லை, அது இவர்களுக்கு இடையே உள்ள வியாபாரமாக இருக்கலாம் ...

உண்மJul 20, 2026 - 10:08:04 AM | Posted IP 172.7*****

எல்லாரும் பிராடுகள்

kaleelrahumanJul 20, 2026 - 09:55:53 AM | Posted IP 172.7*****

இவர்களைப் போன்று நபர்களுக்கு அடுத்து ஜிஎஸ்டியை கேன்சல் செய்வது மட்டுமல்லாமல் இந்த தொழில்களை அவர்கள் அடுத்து செய்யாமல் தடுத்து பாதுகாப்பது நல்லது ஏனென்றால் தமிழ்நாட்டில் அதிகமாக சுகர் பேஷண்ட் இருக்கிறார்கள் அவர்களுக்கு நம்ம தமிழ்நாட்டில் கிடைக்கும் கருப்பட்டி ஒரு வரப்பிரசாதம் அதையும் இவர்களைப் போன்ற ஏமாற்றுக்காரர்கள் இருப்பதனால் ஒரு சில நல்ல வியாபாரிகளுக்கும் தொழில்கள் பாதிக்கப்படுகின்றன தமிழ்நாட்டில் பணம் மரம் ஏறி கஷ்டப்படும் தொழிலாளிகளுக்கு ஒரு நல்ல வியாபாரம் அமைந்து அவர்கள் எந்த ஒரு கலப்படமும் இல்லாமல் தமிழ்நாட்டு மக்களுக்கு நல்ல முறையில் ஒரிஜினல் பனை கருப்பட்டி வழங்குமாறு மிகத் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன் ஏனென்றால் நம்ம சம்பாதிக்கும் முறை நியாயமான முறையில் இல்லை என்றால் அதனால் பாதிக்கப்படுவது நம்ம சந்ததிகள் நம்ம குடும்பத்தார்கள் மட்டுமே இதை மனதில் கொண்டு நல்ல முறையில் பனை கருப்பட்டி மட்டுமல்லாமல் எந்த ஒரு வியாபாரம் செய்தாலும் ஊழல் இல்லாமல் ஒழுங்கு முறை இல்லாமல் செய்வது நம்ம தமிழ்நாட்டுக்கும் தமிழ்நாட்டு மக்களுக்கும் நம்ம குடும்பத்தார்களுக்கும் நல்லது வாழ்க தமிழ்

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Tirunelveli Business Directory