» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயனுக்கு ஆகஸ்ட் 3 வரை காவல்: தூத்துக்குடி நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
திங்கள் 20, ஜூலை 2026 10:02:16 PM (IST)

தமிழக முதல்வர் குறித்து மிரட்டல் விடுத்துப் பேசிய வழக்கில் கைது செய்யப்பட்ட விளாத்திகுளம் திமுக சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயனுக்கு ஆகஸ்ட் 3-ஆம் தேதி வரை 14 நாட்கள் நீதிமன்றக் காவல் விதித்துத் தூத்துக்குடி குற்றவியல் நடுவர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
கோவில்பட்டியில் கடந்த சனிக்கிழமை இரவு திமுக சார்பில் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் பொதுக்கூட்டம் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கருணாநிதி தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பேசிய விளாத்திகுளம் சட்டப்பேரவை உறுப்பினர் மார்க்கண்டேயன், முதலமைச்சர் விஜய், தவெக கட்சி குறித்து மிரட்டல் விடுக்கும் வகையில் சர்ச்சையாகப் பேசினார்.
இது தொடர்பாகத் தூத்துக்குடி தவெக வடக்கு மாவட்டச் செயலாளர் பாலசுப்ரமணியன் கொடுத்த புகாரின் பேரில், முதலமைச்சரை மிரட்டியதாக 3 பிரிவுகளில் போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். இன்று காலை மார்க்கண்டேயனின் இல்லத்திற்குச் சென்ற காவல்துறையினர் உங்களைக் கைது செய்ய வந்துள்ளதாகத் தெரிவித்தனர். "சபாநாயகர் அனுமதி இல்லாமல் எம்எல்ஏவைக் கைது செய்ய முடியாது" எனக் காவல்துறையினரிடம் மார்க்கண்டேயன் வாதிட்டார். தகவல் பரவியதும் ஏராளமான திமுக தொண்டர்கள் வீட்டின் முன்பு திரண்டு போலீசாருக்கு எதிராகக் கோஷமிட்டனர். எனினும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு மார்க்கண்டேயன் காவல் வாகனத்தில் அழைத்துச் செல்லப்பட்டார்.
கைது செய்யப்பட்ட எம்எல்ஏ தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் (எஸ்பி) அலுவலகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு, அங்கு சுமார் 11 மணி நேரத்திற்கும் மேலாகத் தீவிர விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார். எஸ்பி அலுவலகப் பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
அங்கு மார்க்கண்டேயனைச் சந்திக்க வந்த முன்னாள் அமைச்சர் கீதா ஜீவன், எம்எல்ஏ அனிதா ராதாகிருஷ்ணன் ஆகியோருக்கு அனுமதி மறுக்கப்பட்டதால் காவல்துறையினருடன் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. திமுகவினரை போலீசார் அப்புறப்படுத்த முயன்ற போது, எஸ்பி அலுவலகம் முன்பு திடீர் சாலை மறியலில் ஈடுபட்ட முன்னாள் அமைச்சர் கீதா ஜீவன் உட்பட நூற்றுக்கும் மேற்பட்ட திமுகவினர் அதிரடியாகக் கைது செய்யப்பட்டனர்.
விசாரணைக்குப் பின், பலத்த பாதுகாப்புடன் தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டு அங்கு ஒரு மணி நேரம் மார்க்கண்டேயனுக்கு உடல் பரிசோதனை நடைபெற்றது. தொடர்ந்து, தூத்துக்குடி குற்றவியல் நீதித்துறை நடுவர் எண் 1 நீதிமன்ற நடுவர் சுமதி முன்னிலையில் அவர் ஆஜர்படுத்தப்பட்டார்.
வழக்கு விசாரணையின் போது திமுக தரப்பில் வழக்கறிஞர்கள் ஜான் அலெக்சாண்டர், பாபு, செல்வகுமார் ஆகியோரும், அரசு தரப்பில் வழக்கறிஞர் கண்ணனும் ஆஜராகித் தங்களது வாதங்களை எடுத்து வைத்தனர். இரு தரப்பு வாதங்களையும் கேட்ட மேஜிஸ்ட்ரேட் சுமதி, தமிழக முதல்வர் குறித்து மிரட்டல் விடுக்கும் வகையில் பேசிய குற்றச்சாட்டிற்காக விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயனுக்கு 14 நாட்கள் நீதிமன்றக் காவல் விதித்து, மீண்டும் 03-08-2026 அன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உத்தரவிட்டார்
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

திருநெல்வேலி மாவட்டத்தில் வளர்ச்சித் திட்டப் பணிகள் : அமைச்சர் மரிய வில்சன் ஆய்வு!
சனி 18, ஜூலை 2026 5:27:03 PM (IST)

எல் நினோ தாக்கம்: நெல், வாழை பயிர்களுக்குக் காப்பீடு செய்ய ஆட்சியர் அறிவுறுத்தல்!
வெள்ளி 17, ஜூலை 2026 3:56:03 PM (IST)

கூடங்குளம் அணுமின் நிலையத் தகவல்கள் கசிவுப் புகார்: இந்திய அணுசக்தி கழகம் மறுப்பு!
வியாழன் 16, ஜூலை 2026 3:55:08 PM (IST)

உயர்நீதிமன்ற உத்தரவு எதிரொலி: தாமிரபரணியை பாதுகாக்க ஆலோசனை - ஆட்சியர் அழைப்பு!
செவ்வாய் 14, ஜூலை 2026 4:38:54 PM (IST)

நெல்லையில் 17ஆம் தேதி விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்: ஆட்சியர் ஆனந்த் மோகன் அறிவிப்பு
செவ்வாய் 14, ஜூலை 2026 11:18:16 AM (IST)

உலக மக்கள் தொகை தினம் விழிப்புணர்வு பேரணி: ஆட்சியர் ஆனந்த் மோகன் துவக்கி வைத்தார்!
திங்கள் 13, ஜூலை 2026 12:43:35 PM (IST)


