» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

இழப்பீட்டு தொகையை திருப்பி அளித்த மீனவரை தாக்குவதா? அண்ணாமலை கண்டனம்!

திங்கள் 4, மார்ச் 2024 5:26:15 PM (IST)



"குறைவாகக் கொடுத்ததால் திமுக அரசு வழங்கிய இழப்பீடுத் தொகையை திருப்பியளித்த மீனவர் ரமேஷைத் தாக்கிய திமுக குண்டர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில், "இயற்கைச் சீற்றங்களால் பாதிக்கப்பட்டு, பயன்படுத்த இயலாத நிலையில் உள்ள விசைப்படகு உரிமையாளர்களுக்கு, தலா 5 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என்று கடந்த 2022 ஆம் ஆண்டு, முதல்வர் ஸ்டாலின் அறிவித்திருந்தார். இந்த நிலையில், இன்று மயிலாடுதுறையில் நடைபெற்ற விழாவில், இழப்பீடாக வெறும் 2 லட்சத்துக்கான காசோலை மட்டுமே வழங்கியதால் மீனவப் பெருமக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.

இந்த நிலையில் பூம்புகாரைச் சேர்ந்த மீனவர் ரமேஷ், விழா மேடையிலேயே முதல்வர் ஸ்டாலினிடம் இது குறித்துப் புகார் அளித்ததும், பின்னர், தனக்கு வழங்கப்பட்ட காசோலையை, அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரனிடம் மேடையிலேயே திருப்பிக் கொடுத்தததையும், விழா காணொளியில் காண முடிகிறது. இதனை அடுத்து, மீனவர், ரமேஷை, அங்கேயிருந்த திமுகவினர் தாக்கியுள்ளதாகவும் இதனைப் பதிவு செய்த தனியார் செய்தித் தொலைக்காட்சியின் காணொளிகளும், திமுகவினரால் அழிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

மத்தியில், திமுக காங்கிரஸ் கூட்டணி ஆட்சியின்போது, தமிழக மீனவர்கள், இலங்கை அரசால் கொல்லப்படுவதைக் கண்டும் காணாமல் இருந்த திமுக, தற்போது, திமுக அரசு வழங்குவதாகக் கூறிய இழப்பீடுத் தொகையைக் குறைவாகக் கொடுத்ததைக் கேள்வி கேட்ட மீனவர் மீது தாக்குதலும் நடத்தியிருப்பது, வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. தொடர்ந்து தமிழக மீனவ சமுதாய மக்களுக்கு எதிராகவே செயல்பட்டு வருகிறது திமுக.

உடனடியாக, மீனவர் ரமேஷைத் தாக்கிய திமுக குண்டர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், மீனவ சமூக மக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்றும், அவர்களுக்கு வழங்குவதாக உறுதி அளித்த ரூ.5 லட்சம் இழப்பீடை வழங்க வேண்டும் என்றும், திமுக அரசை வலியுறுத்துகிறேன்” என்று அவர் பதிவிட்டுள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Tirunelveli Business Directory