» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

விதைகள் விலை தாறுமாறாக உயர்வு : விவசாயிகள் கவலை!

புதன் 18, செப்டம்பர் 2024 3:14:56 PM (IST)



தூத்துக்குடி மாவட்டத்தில் விதைகள் விலை தாறுமாறாக உயர்ந்துள்ளதால் விவசாயிகள் மிகவும் கவலையடைந்துள்ளனர்.

தூத்துக்குடி மாவட்டத்தில் சுமார் ஒரு லட்சத்து 70 ஆயிரம் ஹெக்டேர் விவசாய நிலங்கள் உள்ளன. பெரும்பாலான நிலங்கள் வானம் பார்த்த பூமி ஆகும். ஆண்டுக்கு ஒரு முறை பெய்யக்கூடிய மழையை நம்பி இந்நிலங்களில் விவசாயம் செய்யப்படுகிறது. இந் நிலங்களில் உழுந்து, பாசி ,கம்பு, மக்காச்சோளம் வெள்ளைச் சோளம், மிளகாய், வெங்காயம் கொத்தமல்லி சூரியகாந்தி, பருத்தி போன்றவைகள் பயிரிடப்படுகிறது 

வரக்கூடிய புரட்டாசி பட்டத்திற்கு விவசாயிகள் தங்கள் நிலங்களில் விதைப்பு செய்ய தயார் படுத்தி வைத்திருக்கின்றனர் இன்னும் புரட்டாசி பருவத்திற்கு சுமார் 20 நாட்களே உள்ளன. விவசாயிகள் தங்கள் நிலங்களில் திரட்சியாக விளைந்த கதிர்களை பதப்படுத்தி எடுத்து வைத்து அதையே விதைகளாக பயன்படுத்தி வந்தனர்.அவ் விதைகள் அனைத்தும் நாட்டு ரக விதைகள் ஆகும். 

இவ் விதைகள் குறைந்த அளவு மகசூல் மட்டுமே கிடைப்பதால் தற்போது உள்ள சூழ்நிலைக்கேற்பவும். தொழில்நுட்ப மாற்றத்திற்கு ஏற்பவும்வீரிய ஒட்டு ரக விதைகளை பயன்படுத்தி அதிகமாக விளைச்சலை தற்போது பெற்று வருகின்றனர். வீரிய ஒட்டு ரக விதைகள் அனைத்தும் தனியார் விதை கடைகளில் விவசாயிகள் விலைக்கு வாங்குகின்றனர்.

இவ் விதைகள் கடந்த இரண்டு ஆண்டுகளாக விலை சராசரியாக இருந்தது . கடந்த ஆண்டு மக்காச்சோளம் விதை மூன்று அரை கிலோ பை சுமார் 1300 வரை விற்பனை செய்யப்பட்டது இந்த ஆண்டு அதே மக்காச்சோள பை விதை 1900 ஆக விற்கப்படுகிறது. வெள்ளைச்சோளம் மூன்று கிலோ கொண்ட பை கடந்தாண்டு ரூபாய் எழுநூற்று ஐம்பது இந்தாண்டு ரூபாய் தொள்ளாயிரம், பருத்தி விதை கடந்தாண்டை காட்டிலும் ரூபாய் நானூறு உயர்வு, உளுந்து, பாசி விதை ஐந்து கிலோ பை ரூபாய் நானூறு உயர்வு. அதே போல் சூரிய காந்தி, கம்பு விதைகள் தாறுமாறாக விலை உயர்ந்துள்ளது.

இதனால் விவசாயிகள் மிகவும் கவலடைந்துள்ளனர். மக்காச்சோளம் பருத்தி உளுந்து பாசி கம்பு வெள்ளச் சோளம் போன்ற விதைகள் அனைத்தும் வெளி மாநிலங்களான கர்நாடகா ஆந்திரா தெலுங்கானா மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களில் இருந்து கொள்முதல் செய்யப்படுகிறது. 

தமிழகத்தில் எந்த ஒரு வீரிய ஒட்டுரக விதைகளும் உற்பத்தி செய்யப்படவில்லை. விதைப்பண்ணைகள் அமைக்க அம்மாநில அரசுகள் போதிய கட்டமைப்பு வசதிகளை தனியார் விதை நிறுவனங்களுக்கு ஏற்படுத்தி கொடுப்பதால் விதைகள் அதிகளவில் உற்பத்தி செய்யப்படுகின்றன. தமிழகத்தில் சிறுதானிய விதைப்பண்ணைகள் கிடையாது .இதனால் வெளிமாநிலங்கள் விதைகளை நம்பியே விதைப்பு செய்ய வேண்டிய உள்ளது 

தமிழக அரசு இந் நிலையை கருத்தில் கொண்டு வருங்காலத்தில் வீரிய ஒட்டுரக விதைகளான மக்காச்சோளம் வெள்ளைச் சோளம் உளுந்து பாசி கம்பு சூரியகாந்தி போன்ற விதைகளை பெருமளவில் விதைப் பண்ணைகள் அமைத்து உற்பத்தி செய்து விவசாயிகளுக்கு மானிய விலையில் கொடுத்து உதவ வேண்டும். கடந்த காலங்களில் 50 கிலோ டி ஏபி உரம் மூட்டை ரூபாய் 1300 க்கு விற்பனை செய்யப்பட்டது இந்தாண்டு விலை உயர்வு இல்லை என்றாலும் உற்பத்தி குறைவு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

டிஏபி அடி உரம் விவசாயிகளுக்கு தாராளமாக கிடைப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.தூத்துக்குடி மாவட்டத்தில் உற்பத்தி செய்யப்படுகின்ற ஸ்பிக் உரத்திற்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளையும் மாவட்ட நிர்வாகம் செய்து கொடுத்து வருகிறது. இந்நிலையில் தூத்துக்குடி மாவட்ட விவசாயிகளுக்கு உற்பத்தி செய்யப்படுகின்ற ஸ்பிக் டிஏபி உரம் சொந்த மாவட்ட விவசாயிகளுக்கு முன்னுரிமை கொடுக்காமல் வெளி மாவட்டங்களுக்கு கொடுப்பதால் தூத்துக்குடி மாவட்ட விவசாயிகள் மிகவும் பாதிக்கப்படுகின்றனர். 

அதனால் தூத்துக்குடி மாவட்டத்தில் உற்பத்தி செய்யப்படுகின்ற ஸ்பிக் டி ஏ பி உரம் தூத்துக்குடி மாவட்ட விவசாயிகளின் தேவைக்கு பின்னரே மற்ற மாவட்ட விவசாயிகளுக்கு கொடுக்க வேண்டும் தவிர இப்கோ மங்கள் கிரிப் கோ போன்ற பல்வேறு டிஏபி அடி உரங்கள் உற்பத்தி செய்யப்பட்டாலும் தூத்துக்குடி மாவட்ட விவசாயிகள் ஸ்பிக் உரத்தையே விரும்புகின்றனர். இதற்கு ஏற்ப தூத்துக்குடி மாவட்ட விவசாயிகளுக்கு ஸ்பிக் உரம் கிடைப்பதற்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் தவிர இன்னும் 20 நாட்களே உள்ள நிலையில் பருவமழை துவங்க உள்ளது. 

கடந்த ஆண்டு விதைகள் விலை ஓரளவு கட்டுப்பாட்டில் இருந்தது இந்த ஆண்டு அனைத்து விதைகளும் விலை உயர்வு ஏற்பட்டுள்ளது இதனால் விவசாயிகள் மிகவும் கவலை அடைந்துள்ளனர். வேளாண்மை அலுவலகங்களில் மானியத்தில் வழங்கப்படும் விதைகளை விவசாயிகள் விரும்பக்கூடிய விதைகளான அட்வான்ட்டா ,டாடா,மைகோ, நிர்மல் போன்ற தனியார் பண்ணைய விதைகளை அரசு கொள்முதல் செய்து விவசாயிகளுக்கு மானிய விலையில் கொடுப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கரிசல் பூமி விவசாயிகள் சங்க தலைவர் வரதராஜன் உட்பட விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Tirunelveli Business Directory