» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
நடிகர் விஜயின் அரசியல் மாநாட்டுக்கு எடப்பாடி கே. பழனிசாமி வாழ்த்து
புதன் 23, அக்டோபர் 2024 5:34:59 PM (IST)
நடிகர் விஜயின் அரசியல் கட்சி மாநாட்டுக்கு எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையில் வாழ்த்துகளைத் தெரிவிப்பதாக எடப்பாடி பழனிச்சாமி பேசினார்.
சேலம் மாவட்டம், பேரூர் அ.தி.மு.க., நிர்வாகிகள் கூட்டம் நேற்று நடந்தது. அதில் பொதுச்செயலர், பழனிசாமி பேசியதாவது: விஜய் மக்களால் நேசிக்கப்படும் நடிகராக இருக்கிறார். அவர், தமிழகத்தில் நல்ல மாற்றத்தைக் கொண்டு வரும் நோக்கத்துடன் கட்சி துவங்கி இருக்கிறார். அக்கட்சிக்கான முதல் மாநாட்டை விக்கிரவாண்டியில் நடத்துகிறார்.
அவருடைய கட்சிக்கும் மாநாட்டுக்கும் எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையில் என்னுடைய வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். நல்ல எண்ணத்தோடு யார் அரசியலுக்கு வந்தாலும், திறந்த மனதோடு அ.தி.மு.க., வரவேற்கும். தேர்தலுக்குள் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம்; சொல்கிறார் இ.பி.எஸ்., தி.மு.க.,வுக்கு என்று தனி பலம் இல்லை; கூட்டணி பலத்தையே நம்புகிறது. கூட்டணி கட்சிகள் கைவிட்டால், தி.மு.க., மீண்டும் ஆட்சிக்கு வரமுடியாது.
அ.தி.மு.க., அப்படி அல்ல. மக்கள், லோக்சபா தேர்தலுக்கு ஒரு மாதிரி, சட்டசபை தேர்தலுக்கு ஒரு மாதிரி ஓட்டு போடுகின்றனர். எந்த கட்சிக்கும் நிரந்தர தோல்வியோ, வெற்றியோ கிடையாது. வரும் சட்டசபை தேர்தல் தான் உண்மையானது. இறுதிப்போட்டியில் அ.தி.மு.க., தான் வெற்றி பெறும் என்றார்.