» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
சாலைகளில் கால்நடைகள் திரிவதை தடை செய்ய வேண்டும் : தமிழக முதல்வருக்கு கோரிக்கை!
வியாழன் 24, அக்டோபர் 2024 8:48:41 AM (IST)
சாலைகளில் கால்நடைகள் சுற்றித் திரிவதை உடனடியாக தடை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எம்பவர் இந்தியா நுகர்வோர் ரூ சுற்றுச்சூழல் கல்வி மற்றும் ஆராய்ச்சி நடுவம் கௌரவ செயலாளர் ஆ. சங்கர் கோரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பாக அவர் தமிழக முதல்வருக்கு அனுப்பியுள்ள மனுவில், "தமிழ்நாடு முழுவதும் சாலைகளில் கால்நடைகள் நடமாடுகின்றன. இதனால் சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் மீது மோதி உயிர்ச் சேதம் மற்றும் பொருள் சேதம் ஏற்படுகின்றது. மாடுகள் முட்டி உயிரிழந்தோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவது மிகவும் கவலைக்குரிய விஷயமாகும்.
உள்ளாட்சி அமைப்புகளின் மூலம் அபராதம் விதிப்பதால் மட்டுமே இந்த பிரச்சினையை முடிவுக்கு கொண்டு வர இயலாது. அனைத்து உள்ளாட்சி அமைப்புகளிலும் இது போன்று சாலைகளில் சுற்றித் திரியும் கால்நடைகளை பிரத்யேகமான வாகனங்கள் மூலம் உடனடியாக சாலைகளில் இருந்து அப்புறப்படுத்தினால் மட்டுமே பொதுமக்கள் எவ்வித அச்ச உணர்வும் இன்றி சாலைகளில் செல்ல முடியும்.
23.10.2024 அன்று காலை தூய சவேரியார் கல்லூரியில் மூன்றாமாண்டு பயிலும் திருநெல்வேலி திருமால் நகர் பகுதியைச் சார்ந்த சுவாதிகா என்ற கல்லூரி மாணவி மாடு முட்டி பலத்த காயத்துக்கு உள்ளாகியுள்ளார். இது போன்ற சம்பவங்கள் தமிழகம் முழுவதும் தினந்தோறும் நடந்து வருகின்றது. இதனால் பொதுமக்களின் உயிருக்கும், உடமைக்கும் பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
ஆகவே தமிழ்நாடு முழுவதும் சாலைகளில் கால்நடைகள் சுற்றித் திரிவதை உடனடியாக தடை செய்வதற்கான உரிய நடவடிக்கை எடுக்க ஆணையிட வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.
shafiOct 24, 2024 - 09:15:51 AM | Posted IP 162.1*****