» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

சிறையில் ஆயுள் தண்டனை கைதி சித்ரவதை: பெண் டிஐஜி உட்பட 3 பேர் சஸ்பெண்ட்

வியாழன் 24, அக்டோபர் 2024 10:49:26 AM (IST)

ஆயுள் தண்டனை கைதி சித்ரவதை செய்யப்பட்ட குற்றச்சாட்டில் சிக்கிய பெண் டிஐஜி, ஏடிஎஸ்பி உட்பட சிறைத்துறை அதிகாரிகள் 3 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் மாணிக்கம் கோட்டை பகுதியைச் சேர்ந்தவர் சிவக்குமார் (30). இவர் கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். இந்நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு வேலூர் சரக சிறைத்துறை டிஐஜி ராஜலட்சுமி வீட்டு வேலைகளை செய்வதற்காக வேலூர் மத்திய சிறையில் இருந்து சிவக்குமாரை, சிறைத்துறை வார்டன்கள் அழைத்துச் சென்றுள்ளனர்.

அப்போது அவர், வீட்டில் இருந்த ரூ.4.25 லட்சம் பணம் மற்றும் வெள்ளி பொருட்களை திருடியதாக கூறி சிறை வார்டன்கள், காவலர்கள் சிறையில் தனி அறையில் அடைத்து சிவக்குமாரை சித்ரவதை செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பாக சிவக்குமாரின் தாயார் கலாவதி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அதனை விசாரித்த நீதிபதிகள் இதுதொடர்பாக சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட்டனர்.

அதன்பேரில் சிபிசிஐடி போலீஸார் வேலூர் சரக சிறைத்துறை டிஐஜி ராஜலட்சுமி, வேலூர் மத்திய சிறை கூடுதல் கண்காணிப்பாளர் (ஏடிஎஸ்பி) அப்துல் ரகுமான், ஜெயிலர் அருள்குமரன் உள்பட 14 பேர் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிந்து விசாரணை நடத்தினர். இதில், ஆயுள்தண்டனை கைதி சிவக்குமார் தாக்கப்பட்டது உறுதி செய்யப்பட்டதால், அவர் சேலம் மத்திய சிறைக்கு மாற்றப்பட்டார்.

இதற்கிடையே வேலூர் சரக டிஐஜி ராஜலட்சுமி காத்திருப்போர் பட்டியலுக்கும், சிறை கண்காணிப்பாளர் அப்துல் ரகுமான் சென்னை புழல்-2 சிறைக்கும் மாற்றப்பட்டனர். இந்நிலையில், இவ்வழக்கு கடந்த 21-ம் தேதி உயர் நீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, நீதிபதிகள் இந்த வழக்கில் உயர் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்காதது ஏன் என்று கேள்வி எழுப்பினர். இந்நிலையில் டிஐஜி ராஜலட்சுமி, ஏடிஎஸ்பி அப்துல் ரகுமான், ஜெயிலர் அருள்குமரன் ஆகிய 3 சிறைத்துறை அதிகாரிகள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக சிறைத்துறை அதிகாரிகள் தெவித்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Tirunelveli Business Directory