» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
காமராஜர், எம்ஜிஆர் படங்களுடன் விஜய் கட்சி மாநாடு போஸ்டர் : தூத்துக்குடியில் பரபரப்பு
சனி 26, அக்டோபர் 2024 11:18:23 AM (IST)
தமிழக வெற்றிக் கழகம் மாநாட்டை முன்னிட்டு தூத்துக்குடியில் காமராஜர், எம்ஜிஆர் படங்களுடன் விஜய் கட்சியினர் போஸ்டர் ஒட்டியுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகரான விஜய், தமிழக வெற்றிக் கழகம் என்ற புதிய அரசியல் கட்சியை தொடங்கியுள்ளார். அவரது கட்சியின் முதல் மாநில மாநாடு விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அடுத்த வி.சாலையில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறுகிறது. மாநாட்டு திடலில் பெரியார், காமராஜர், அம்பேத்கர், சுதந்திரப் போராட்ட தியாகிகள் வேலு நாச்சியார், கடலூர் மாவட்டத்தை சேர்ந்த அஞ்சலை அம்மாள் ஆகியோரது கட்-அவுட்கள் இடம் பெற்றுள்ளது.
விக்கிரவாண்டி மாநில மாநாட்டிற்கு தூத்துக்குடி மாவட்டத்தில் இருந்து தமிழக வெற்றிக் கழகம் மாவட்ட பொறுப்பாளர் அஜிதா ஆக்னஸ் தலைமையில் 5ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொள்ள உள்ளனர். இதற்காக வேன், கார், பஸ் போன்ற 100க்கும் மேற்பட்ட வாகனங்களில் நிர்வாகிகள் இன்று மாலை புறப்படுகின்றனர்.
இந்நிலையில் தூத்துக்குடியில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் பல்வேறு பகுதிகளில் மாநாட்டு போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது. அதில் முன்னாள் முதல்வர்களான காமராஜர், எம்ஜிஆர் படங்கள் இடம்பெற்றுள்ளது. மேலும், "காமராஜர், எம்ஜிஆர் வழித்தோன்றல் புரட்சி தளபதி அழைக்கிறார்" போன்ற வாசகங்கள் இடம்பெற்றுள்ளது. இந்த போஸ்டர்கள் பலரது கவனத்தையும் ஈர்த்து வருகிறது. மேலும், காங்கிரஸ் மற்றும் அதிமுகவினர் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.