» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் கோவிலில் ஐப்பசி திருக்கல்யாண திருவிழா தேரோட்டம்!
சனி 26, அக்டோபர் 2024 12:10:03 PM (IST)
கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் கோவிலில் ஐப்பசி திருக்கல்யாண திருவிழா தேரோட்டம் இன்று காலை வெகு விமர்சையாக நடைபெற்றது.
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் உடனுறை பூவனநாதசுவாமி கோவிலில் ஆண்டுதோறும் ஐப்பசி திருக்கல்யாண திருவிழா 12 நாட்கள் விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டுக்கான திருவிழா கடந்த 18ஆம் தேதி காலையில் கொடியேற்றத்துடன் தொடங்கியது.
விழா நாட்களில் தினமும் மண்டகப்படிதாரர்கள் சார்பில் சிறப்பு பூஜைகளும், காலையில் பல்லக்கிலும், மாலையில் பல்வேறு வாகனங்கள், சப்பரங்களில் அம்மன் எழுந்தருளி வீதி உலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். விழாவின் 9-ம் நாளான இன்று (26-ந்தேதி) காலை 8 மணிக்கு தேரோட்டம் நடைபெற்றது.
முன்னதாக அதிகாலை கோவில் நடை திறக்கப்பட்டு தொடர்ந்து பல்வேறு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. பின்னர் அம்பாள் அன்ன வாகனத்தில் எழுந்தருளி 4 ரத வீதிகளையும் சுற்றி வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தார். தேராட்டம் நிகழ்ச்சியில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். வரும் 29-ந் தேதி இரவு திருக்கல்யாண வைபவம் நடைபெறுகிறது.