» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
திருச்செந்தூர் கந்த சஷ்டி திருவிழா பாதுகாப்பு ஏற்பாடுகள்: எஸ்பி ஆல்பர்ட் ஜான் ஆய்வு!
சனி 26, அக்டோபர் 2024 12:49:56 PM (IST)
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் கந்த சஷ்டி திருவிழாவை முன்னிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து எஸ்பி ஆல்பர்ட் ஜான் ஆய்வு செய்தார்.
திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் கந்த சஷ்டி திருவிழா இவ்வாண்டு வருகின்ற 02.11.2024 அன்று தொடங்கி 08.11.2024 அன்று வரை நடைபெற உள்ளது. இதில் பொதுமக்கள் அதிகம் கூடும் முக்கிய திருவிழா நாட்களான 07.11.2024 அன்று சூரசம்கார நிகழ்வும், 08.11.2024 அன்று திருக்கல்யாண வைபவமும் நடைபெற உள்ளது.
இந்த கந்த சஷ்டி திருவிழாவை முன்னிட்டு நேற்று (25.10.2024) திருச்செந்தூர் உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் முகாம் அலுவலகத்தில் வைத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் தலைமையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அதையடுத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சூரசம்காரம் நடைபெறும் திருச்செந்தூர் கோவில் கடற்கரை பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டு, பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் போக்குவரத்து மாற்றங்கள் குறித்து காவல்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார்.
மேலும், போக்குவரத்து மாற்றங்கள் உள்ள சாலைகள் மற்றும் வாகன நிறுத்தும் இடங்கள் உள்ள பகுதிகளில், அது குறித்த அறிவிப்பு பலகைகள் வைக்கவும், பொதுமக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளுக்கான ஏற்பாடுகள் செய்யவும், மேலும் தற்போது கோவிலில் கட்டுமான பணிகள் நடைபெறுவதால் பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கூட்ட நெரிசல் இல்லாமல் சூரசம்காரம் நிகழ்ச்சியை கண்டுகளிப்பதற்கான இடங்களை வான்வழி கண்காணிப்பு மூலம் ஆய்வு செய்ய காவல்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.