» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
குமரி மாவட்டத்தில் வளர்ச்சி திட்டப்பணிகள்: ஆட்சியர் ஆர்.அழகுமீனா ஆலோசனை
சனி 26, அக்டோபர் 2024 5:43:05 PM (IST)
கன்னியாகுமரியில் சுற்றுலா வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்து துறை அலுவலர்களுடன் மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகுமீனா ஆலோசனை நடத்தினார்.
கன்னியாகுமரி மாவட்டம் கன்னியாகுமரி பேரூராட்சிக்குட்பட்ட அரசு விருந்தினர் மாளிகையில் மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகுமீனா, துறை அலுவலர்களுடன் இன்று கலந்தாலோசனை மேற்கொண்டு தெரிவிக்கையில்- கன்னியாகுமரி சிறப்புநிலை பேரூராட்சியானது இந்தியாவின் தென்கோடியில் அமைந்துள்ள முக்கடலும் சங்கமிக்கும் ஒரு பிரசித்தி பெற்ற சர்வதேச சுற்றுலாதளமாகும்.
முன்னாள் முதலமைச்சர் முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் சீரிய முயற்சியினால் கடலின் நடுவில் அய்யன் திருவள்ளுவர் சிலை அமைக்கப்பட்டு, உலகத்தமிழர்களால் போற்றப்பட்டு வருவதோடு, அய்யன் திருவள்ளுவர் சிலைக்கு சென்று வர பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகம் மூலம் படகு வசதி உள்ளதால் சுற்றுலா பயணிகளிடம் மேலும் சிறப்பு பெற்றுள்ளது.
மேலும் கன்னியாகுமரி கடற்கரை பகுதியில் அமைந்துள்ள காந்தி நினைவு மண்டபம், காமராஜர் மணிமண்டபம் ஆகிய மண்டபங்களை சீர்படுத்திட பொதுப்பணித்துறை மற்றும் செய்தி மக்கள் தொடர்பு துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தபட்டது.
கன்னியாகுமரிக்கு வரும் வெளிநாடு, வெளிமாநிலம் வெளிமாவட்டம் மற்றும் உள்ளுர் சுற்றுலா பயணிகள் காலை சூரிய உதயம், மாலை சூரியன் மறைவு ஆகியவற்றை கண்டு களிப்பதற்கு அப்பகுதிகளில் இருக்கை வசதிகள் ஏற்படுத்தி கொடுக்கவும், பாதுகாப்பான சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதிகளை ஏற்படுத்திடவும், கழிப்பறைகளை சுகாதாரமாக பேணிடவும், கடற்கரை திரிவேணி சங்கமம் பகுதிகள், நீச்சல் குளம் அமைந்துள்ள பகுதிகளில் நிழற்குடைகள் அமைத்தும், குறிப்பாக சுற்றுலா வரும் குழந்தைகளுக்கு விளையாட்டு பூங்கா, சிறுவர் பூங்கா, சுனாமி பூங்கா ஆகியவற்றினை சீரமைத்து, பொழுதுபோக்கு விளையாட்டு பொருட்கள் அமைத்து பராமரித்திட உரிய நடவடிக்கை மேற்கொள்ள துறைசார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டதோடு, பூங்கா பகுதிகளை வண்ண செடி கொடிகளால் அழகுப்படுத்திடவும், மலர் கண்காட்சிகள் நடத்திடவும் தோட்டகலைத்துறையினருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும் கன்னியாகுமரி ரவுண்டான முதல் காந்தி மண்டபம் வரையும், ரவுண்டா முதல் சன்செட் பாயிண்ட் வரையும், ரவுண்டான முதல் சீரோ பாயிண்ட் வரையும், காந்தி மண்டபம் முதல் சன்செட் பாயிண்ட வரையும், ரவுண்டான முதல் பகவதியம்மன் கோவில் வரையும், ரவுண்டான முதல் விவேகானந்தபுரம் வரையும், விவேகானந்தபுரம் முதல் பழத்தோட்டம் வரைக்கும் எல்.இ.டி தெருவிளக்கு அமைத்தும், உயர்கோபுரவிளக்குகள் அமைத்து சுற்றுலா தளத்தினை மெருகூட்டிட உரிய நடவடிக்கை மேற்கொள்ள துறை சாரந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.
கன்னியாகுமரிக்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கு அவசரகால உதவிகள் குறித்து விபரங்களையும், வழிகாட்டி பதாகைகள் அமைத்திட வேண்டும். கன்னியாகுமரி மாவட்டத்திற்குட்பட்ட அனைத்து சுற்றுலா தளங்கள் குறித்த விவரங்களையும் கன்னியாகுமரியிலிருந்து அந்தந்த சுற்றுலா தளங்களுக்கு செல்லுவதற்கான வழித்தடம் மற்றும் பயண நேரம் குறித்த அறிவிப்பு பலகைகள் சுற்றுலா அலுவலகம் மற்றும் முக்கியமான இடங்களில் அமைத்திட வேண்டுமெனவும் அறிவுறுத்தப்பட்டது.
மேலும் கன்னியாகுமரிக்குட்பட்ட அனைத்து சுற்றுலா பகுதிகளிலும், குப்பைகள் தேங்காத வண்ணம் அவ்வப்போது தூய்மை பணியாளர்களை கொண்டு சுத்தம் செய்திடவும், தெருநாய்களை கட்டுப்படுத்திட பேரூராட்சி செயல் அலுவலருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. முதலமைச்சரின் காலை உணவு சமையலறைகள், பள்ளி மற்றும் அங்கன்வாடி கட்டிடங்கள் பழுதுகள் நீக்கி சீரமைத்திடவும், சாலைகள் மற்றும் கட்டுமான பணிகளை போர்கால அடிப்படையில் தரமானதாகவும், உறுதித்தன்மையுடனும் அமைத்திட துறை சார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.
சுற்றுலா தளத்தில் உள்ள அனைத்து உணவங்கள், சிற்றுண்டி கடைகள், தங்கும் விடுதிகள் மற்றும் விற்பனை நிலையங்களில் இருப்பு வைக்கப்பட்டுள்ள பொருட்களின் காலவாதி தேதி, தரம், அவற்றில் சேர்க்கப்பட்டுள்ள பொருட்களின் விவரங்களையும், தயாரிக்கப்படும் உணவுகளின் தரத்தினையும் சுகாதாரத்தினையும் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் ஆய்வு செய்து, உறுதி செய்திட வேண்டுமென அறிவுறுத்தப்பட்டது.
கப்பல் போக்குவரத்து கழக வளாகத்தில் அமைக்கப்பட்டள்ள லேசர் ஒளி விளக்கு, கேலரி பணிகளை விரைந்து முடித்து சுற்றுலா பயணிகள் அமர்ந்து அய்யன் திருவள்ளுவர் சிலையினை கண்டு களிக்க துரித நடவடிக்கை மேற்கொள்ள சுற்றுலா அலுவலருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தொடர்ந்து சின்னமுட்டம் மீன்பிடித்துறைமுகத்தில் அமைந்துள்ள கட்டுப்பாட்டு அலுவலகத்தினை சீரமைத்தும், துறைமுக வளாகத்தில் சுகாதாரமாக வைத்திட துறை சார்ந்த அலுவலருக்கு அறிவுறுத்தப்பட்டதோடு, அதனைத்தொடர்ந்து கப்பல் போக்குவரத்து கழக வளாகத்தில் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை சார்பில் ரூ.7 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள படகு அணையும் தளத்தினை ஆய்வு மேற்கொண்டதோடு, அவற்றில் சில சீரமைப்பு பணிகள் மேற்கொள்ள துறை சார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. இவ்வாறு மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.
அதனைத்தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் அய்யன் திருவள்ளுவர் சிலை மற்றும் விவேகனாந்தர் பாறையை இணைக்கும் கடல்சார் கண்ணாடி கூண்டுபாலம் அமைக்கும் பணியினை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். மேலும் பணிகளை விரைந்து முடித்திட துறைசார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்கள்.
கூட்டத்தில் நாகர்கோவில் வருவாய் கோட்டாட்சியர் எஸ்.காளீஸ்வரி, உதவி இயக்குநர் (பேரூராட்சிகள்) சத்தியமூர்த்தி, கன்னியாகுமரி பேரூராட்சி தலைவர் குமரி ஸ்டீபன், நெடுஞ்சாலை துறை செயற்பொறியாளர் சத்தியமூர்த்தி, பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியளார் முருகேசன், மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் ஜாண் ஜெகத் பிரைட், மாவட்ட சுற்றுலா அலுவலர் காமராஜ், உதவி இயக்குநர் (மீன்வளம்) தீபா, கன்னியாகுமரி துணை காவல் கண்காணிப்பாளர் மகேஷ் குமார், அகஸ்தீஸ்வரம் வட்டாட்சியர் முருகன், துறை அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.