» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற கொலை கைதி தப்பி ஓட்டம்!

திங்கள் 28, அக்டோபர் 2024 8:13:11 AM (IST)

ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற நெல்லையை சேர்ந்த கொலை கைதி தப்பிய ஓடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

நெல்லை மாவட்டம் களக்காடு சிதம்பரபுரத்தை சேர்ந்தவர் சதீஷ் (29). இவர் கடந்த 2023-ம் ஆண்டு ஜூலை மாதம் குளச்சல் பகுதியில் உள்ள ஒரு கோவிலில் திருட முயன்றார். அப்போது அங்கிருந்த காவலாளி கணேசன், சதீசை தடுத்துள்ளார். இதில் ஆத்திரம் அடைந்த சதீஷ் அந்த காவலாளியை கொடூரமாக தாக்கிவிட்டு தப்பிச் சென்றார். இந்த தாக்குதலில் படுகாயம் அடைந்த கணேசன் பரிதாபமாக இறந்தார்.

இந்த சம்பவம் குறித்து குளச்சல் போலீசார் வழக்குப்பதிவு செய்து சதீசை கைது செய்து நாகர்கோவில் சிைறயில் அடைத்தனர். முன்னதாக அவரிடம் நடத்திய விசாரணையில் அவர் மீது பல திருட்டு வழக்குகள் இருப்பது தெரியவந்தது.

நேற்று முன்தினம் மாலையில் சிறையில் இருந்த சதீசுக்கு திடீரென உடல் நலம் பாதிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து அவரை சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு போலீசார் அழைத்துச் சென்றனர். அங்கு சதீஷ் உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். அவரது பாதுகாப்புக்காக 3 போலீசார் நியமிக்கப்பட்டு இருந்தனர்.

இந்தநிலையில் நேற்று அதிகாலை 5 மணி அளவில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சதீசை திடீரென காணவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த போலீசார் அவரை மருத்துவமனை கழிவறை உள்ளிட்ட பல இடங்களில் தேடினர். எனினும் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை.

அதன்பிறகு தான் சதீஷ் போலீசுக்கு டிமிக்கி கொடுத்துவிட்டு தப்பிச் சென்றது தெரியவந்தது. பின்னர் இதுகுறித்து உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு போலீசார் உஷார்படுத்தப்பட்டனர். பின்னர் ரோந்து போலீசார் பஸ் நிலையங்கள் மற்றும் ரெயில் நிலையங்களில் சதீசை தேடினர். எனினும் சதீஷ் சிக்கவில்லை.

எனவே ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் இருந்து வடசேரி பஸ் நிலையம் வரையும், ரெயில் நிலையம் வரையும் உள்ள நூற்றுக்கணக்கான கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்யும் பணியில் போலீசார் இறங்கியுள்ளனர். இதற்கிடையே கைதியை தப்ப விட்ட 3 போலீசார் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட கொலை கைதி போலீசாரிடம் இருந்து தப்பிச் சென்ற சம்பவம் நாகர்கோவிலில் பரபரப்பை ஏற்படுத்தியது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Tirunelveli Business Directory