» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

பஸ் நிலையத்தில் காண்டிராக்டரை கொல்ல முயற்சி: கள்ளக்காதலி கைது

புதன் 13, நவம்பர் 2024 8:28:34 AM (IST)

நாகர்கோவில் பஸ் நிலையத்தில் காண்டிராக்டரை கொலை செய்ய முயன்ற நெல்லையைச் சேர்ந்த கள்ளக்காதலியை போலீசார் கைது செய்தனர். மேலும் 2 பேரை வலைவீசி தேடி வருகிறார்கள்.

குமரி மாவட்டம் ராஜாக்கமங்கலம் அருகே உள்ள பருத்திவிளை புல்லுவிளையை சேர்ந்தவர் ஈஸ்வரன் (வயது 40), கட்டிட காண்டிராக்டர். இவர் நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் கட்டிட பணிகளை செய்து வந்தார். அப்போது இவருக்கும் நெல்லை மாவட்டம் முக்கூடல் அண்ணா நகரை சேர்ந்த கருப்பசாமி மனைவி பழனியாச்சி (38) என்பவருக்கும் இடையே கள்ளத்தொடர்பு ஏற்பட்டது.

இருவரும் தங்களது குடும்பத்தினரை உதறி தள்ளிவிட்டு, தூத்துக்குடியில் வாடகைக்கு வீடு எடுத்து குடும்பம் நடத்தி வந்தனர். இந்தநிலையில் ஈஸ்வரன் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பழனியாச்சியை பிரிந்து மீண்டும் நாகர்கோவிலுக்கு வந்து வடக்குகோணத்தில் உள்ள தாயார் வீட்டில் வசித்து வந்தார். அவரை மீண்டும் தன்னுடன் சேர்ந்து வாழ வருமாறு பழனியாச்சி அழைத்ததாகவும், இதற்கு ஈஸ்வரன் மறுப்பு தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது.

இதனால் ஈஸ்வரனை தீர்த்துக்கட்ட பழனியாச்சி முடிவு செய்தார். சம்பவத்தன்று நாகர்கோவிலுக்கு வந்த பழனியாச்சி ஈஸ்வரனை தொடர்பு கொண்டு வடசேரி பஸ் நிலையத்திற்கு வருமாறு அழைத்தார். அங்கு வந்த ஈஸ்வரனை இரண்டு வாலிபர்கள் சரமாரியாக வெட்டினர். இதில் ஈஸ்வரனுக்கு தலை மற்றும் கையில் பலத்த வெட்டுக்காயம் ஏற்பட்டது. அவரை போலீசார் மீட்டு சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பெற்று வருகிறார். இதற்கிடையே பழனியாச்சியும், ஈஸ்வரனை அரிவாளால் வெட்டிய 2 பேரும் தப்பி ஓடி தலைமறைவாகி விட்டனர்.

இதுகுறித்து ஈஸ்வரனின் மனைவி மகேஸ்வரி கொடுத்த புகார் பேரில் பழனியாச்சி உள்பட 3 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அவர்களை பிடிக்க 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. அவர்கள் நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வந்தனர். இந்தநிலையில் அவர்கள் கோர்ட்டில் சரண் அடைய திட்டமிட்டு இருப்பதாக கிடைத்த தகவலைத் தொடர்ந்து மேலும் ஒரு தனிப்படை அமைத்து தேடுதல் வேட்டையை தீவிரப்படுத்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுந்தரவதனம் உத்தரவிட்டார்.

அதைத்தொடர்ந்து கூடுதலாக ஒரு தனிப்படை அமைக்கப்பட்டது. அந்த தனிப்படை போலீசார், பழனியாச்சி உள்ளிட்ட 3 பேரையும் தேடி வந்த நிலையில் பாபநாசம் பகுதியில் பழனியாச்சி பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அவரை நேற்று முன்தினம் இரவு தனிப்படை போலீசார் சுற்றிவளைத்து பிடித்தனர். பின்னர் பழனியாச்சியை அங்கிருந்து நாகர்கோவிலுக்கு நேற்று காலையில் அழைத்து வந்தனர். அவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.

விசாரணையில், பழனியாச்சி தனது மகன் மற்றும் அவருடைய நண்பர் ஆகியோர் மூலம் ஈஸ்வரனை தீர்த்துக் கட்ட முடிவு செய்ததும், அதன்படி சம்பவத்தன்று அவர்கள் 2 பேரும் சேர்ந்து ஈஸ்வரனை அரிவாளால் வெட்டியதும் தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் பழனியாச்சியை கைது செய்தனர். தலைமறைவாக உள்ள பழனியாச்சியின் மகன் உள்பட 2 பேரை போலீசார் தேடி வருகிறார்கள்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Tirunelveli Business Directory