» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

தெலுங்குப் பெண்கள் பற்றி சர்ச்சைப் பேச்சு : நடிகை கஸ்தூரி ஐதராபாத்தில் கைது

ஞாயிறு 17, நவம்பர் 2024 9:58:56 AM (IST)

தெலுங்குப் பெண்கள் பற்றி சர்ச்சைப் பேச்சு விவகாரத்தில் நடிகை கஸ்தூரி ஐதராபாத்தில் கைது செய்யப்பட்டார். பட அதிபர் வீட்டில் தங்கியிருந்த அவரை போலீசார் சென்னைக்கு அழைத்து வந்தனர்.

நடிகை கஸ்தூரி சமீப காலமாக அரசியல் மற்றும் சமூகம் சார்ந்த கருத்துகளை வெளியிட்டு பொதுமக்களின் கவனம் ஈர்த்து வந்தார். மேலும் அரசுக்கு எதிரான கருத்துகளை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு சர்ச்சைகளிலும் சிக்கி வந்தார். இதன் தொடர்ச்சியாக சென்னையில் கடந்த 3-ந் தேதி பிராமணர் சமூகத்தினர் சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் அவர் பேசிய உரை, மக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி இருந்தது.

அந்த நிகழ்ச்சியில் அவர் தெலுங்கு மக்கள் குறித்து அவதூறாக பேசியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதைத்தொடர்ந்து அவர் தனது கருத்துக்கு வருத்தம் தெரிவித்தார். ஆனாலும், நடிகை கஸ்தூரிக்கு எதிராக நாயுடு மகாஜன சங்கத்தினர் மதுரை திருநகர் போலீசில் புகார் அளித்தனர். இதைப்போல சென்னை உள்ளிட்ட பல இடங்களிலும் புகார் அளிக்கப்பட்டது. அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர்.

இதைத்தொடர்ந்து அவர் முன்ஜாமீன் கேட்டு மதுரை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவை நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் விசாரித்தார். அப்போது தெலுங்கு பெண்கள் குறித்த கஸ்தூரியின் பேச்சுக்கு கடும் அதிருப்தி வெளியிட்ட நீதிபதி, அவருக்கு முன்ஜாமீன் வழங்க மறுத்து கடந்த 14-ந் தேதி உத்தரவிட்டார்.

நடிகை கஸ்தூரியின் பேச்சு மக்களிடையே வெறுப்பை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளதாக கூறிய நீதிபதி, தமிழ்-தெலுங்கு பேசுபவர்களிடையே வன்முறையை ஏற்படுத்த காத்திருக்கும் வெடிகுண்டு போல இருப்பதாகவும் தெரிவித்தார். நடிகை கஸ்தூரியின் முன்ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டதை தொடர்ந்து அவர் தலைமறைவானார். அவரை கைது செய்ய போலீசார் தீவிர நடவடிக்கை மேற்கொண்டனர்.

மேலும் அவரை கைது செய்வதற்காக தனிப்படைகளும் அமைக்கப்பட்டன. இந்த போலீசார் தமிழ்நாடு மற்றும் ஆந்திரா, தெலுங்கானா உள்ளிட்ட அண்டை மாநிலங்களிலும் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். நடிகை கஸ்தூரி டெல்லியில் இருக்கலாம் என்ற தகவல் அடிப்படையில் ஒரு தனிப்படை போலீசார் அங்கு விரைந்து முகாமிட்டு தேடி வந்தனர். 

இந்த நிலையில் சென்னை தனிப்படை போலீசாருக்கு நடிகை கஸ்தூரி தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் அருகே உள்ள பப்பலக்குடா பகுதியில் சினிமா தயாரிப்பாளர் ஹரிகிருஷ்ணனின் பங்களா வீட்டில் பதுங்கி இருக்கும் தகவல் கிடைத்தது. அதன்பேரில் தனிப்படை போலீசார் அங்கு சென்று நடிகை கஸ்தூரியை கைது செய்தனர். பின்னர் அவர், போலீஸ் வாகனத்தில் சென்னை அழைத்து வந்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Tirunelveli Business Directory