» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
அரையாண்டுத் தேர்வு திட்டமிட்டபடி நடைபெறும்? அமைச்சர் அன்பில் மகேஷ் விளக்கம்
புதன் 4, டிசம்பர் 2024 4:29:57 PM (IST)
வெள்ளம் அதிகம் பாதித்த மாவட்டங்களைத் தவிர பிற மாவட்டங்களில் அரையாண்டுத் தேர்வு திட்டமிட்டபடி நடைபெறும் என அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்தார்..
சென்னையில், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது: வெள்ளம் அதிகம் பாதித்த மாவட்டங்களில் உள்ள மாணவர்கள் அரையாண்டு தேர்வு எழுத முடியாத நிலை இருந்தால் ஜனவரி மாதம் தேர்வு நடத்தப்படும். மற்ற இடங்களில் அரையாண்டுத் தேர்வு திட்டமிட்டபடி வரும் 9-ம் தேதி முதல் நடைபெறும். 9-ம் தேதிக்குள் நிலைமை சீரடையாவிட்டால், தொடர்ந்து நீர் தேங்கியிருந்தால் ஜனவரி மாதம் தேர்வு நடத்தப்படும்.
அதிக வெள்ள பாதிப்பு உள்ள பள்ளியின் தலைமை ஆசிரியர்கள், கல்வி அலுவலர்களிடம் ஆலோசித்து வருகிறோம். தலைமையாசிரியர் அலுவலகம், சான்றிதழ்கள் வைத்திருக்கும் அறைகள் தரை தளத்தில் இருந்தால் முதல் தளத்திற்கு மாற்ற உத்தரவிடப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு புதிய புத்தகங்கள், நோட்டுகள் விரைவில் வழங்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.