» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
நாகர்கோவிலில் 15 டன் கழிவுகள் கொட்டப்பட்ட சம்பவம் : ஆட்சியர் ஆய்வு
சனி 21, டிசம்பர் 2024 9:06:31 PM (IST)
பறக்கை குளத்தின் கரையில் 15 டன் கேரள கழிவுகள் கொட்டப்பட்ட இடத்தினை குமரி மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகுமீனா, நள்ளிரவில் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
கன்னியாகுமரி மாவட்டம், பறக்கை குளத்தின் கரையில் கேரளாவிலிருந்து மருத்துவ கழிவுகள், இறைச்சி கழிவுகள் கொட்டப்பட்டதாக தகவல் அறிந்ததைத்தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகுமீனா, நேற்று (20.12.2024) நள்ளிரவு 11.30 மணிக்கு அக்குளக்கரையினை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு, தெரிவிக்கையில் - நாகர்கோவில் மாநகராட்சிக்குட்பட்ட வார்டு எண். 52 பறக்கையில் உள்ள பெரிய குளம் பகுதியில் சுமார் 15 டன் திடக்கழிவுகள் சிலரால் கொட்டப்பட்டது கண்டறியப்பட்டுள்ளது.
அந்த கழிவுகள் JCB இயந்திரம் மூலம் அகற்றப்பட்டு, வலம்புரிவிளை உரக்கிடங்கிற்கு கொண்டு செல்லப்பட்டு, தூய்மை பணியாளர்கள் மூலமாக மக்கும் குப்பைகள் மற்றும் மட்காத குப்பைகளாக தனித்தனியாக பிரிக்கப்பட்டதில் சுமார் 500 கிலோ அளவிலான பிளாஸ்டிக் கழிவுகள், 35 எண்ணம் சர்க்கரை நோயாளிகளால் பயன்படுத்தப்பட்ட இன்சுலின் ஊசிகள், டயப்பர்கள். இதர திடக்கழிவுகள் என்ற அளவில் உள்ளது.
புகார்தாரர் வாட்ஸ் மூலம் மருத்துவ கழிவுகளுக்கான ஆதாரமாக அனுப்பியுள்ள மருந்து ரசீதுகளின் புகைப்படங்கள் தனிநபரால் / சிலரால் சிகிட்சைகளுக்காக வாங்கப்பட்ட மருந்துகளுக்கான ரசீது அன்றி மருத்துவ கழிவுகள் அல்ல எனவும் நாகர்கோவில் மாநகராட்சியானது கேரள மாநிலத்திற்கு அருகில் அமைந்துள்ளதால் வழக்கமாகவே பொதுமக்கள் அதிக அளவில் கேரளாவிற்கு சென்று மருத்துவ சிகிட்சை பெறும் பழக்கம் உள்ளதால் அப்போது வாங்கப்பட்ட மருந்துக்களுக்கான ரசீதுகளாக இருக்கலாம் எனவும், தவிர வேறு எந்தவொரு மருத்துவ கழிவுகளும் இல்லை என்பதை தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகுமீனா, தெரிவித்தார்.