» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

அனைத்து கொடிக் கம்பங்களையும் அகற்ற வேண்டும் : ஆட்சியர் க.இளம்பகவத் அறிவிப்பு

புதன் 2, ஏப்ரல் 2025 8:07:24 PM (IST)

தூத்துக்குடி மாவட்டத்தில் நிரந்தரமாக நிறுவப்பட்டுள்ள அரசியல் கட்சி, சமூகம், மதம், சங்கம் சார்ந்த அனைத்து கொடிக் கம்பங்களையும் அகற்ற வேண்டும் என மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத் உத்தரவிட்டுள்ளார்.

சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை 27.01.2025 தேதிய உத்தரவில், தமிழகம் முழுவதும் தேசிய நெடுஞ் சாலைகள், மாநில நெடுஞ்சாலைகள், மாநகராட்சிகள், நகராட்சிகள், உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் இதர துறைகளுக்குச் சொந்தமான பொது இடங்கள் மற்றும் நிலங்களில் நிரந்தரமாக நிறுவப்பட்டுள்ள கொடிக் கம்பங்களை அனைத்து அரசியல் கட்சிகளும், சமூகம், மதம், சங்கம் போன்ற அனைத்து அமைப்புகளும் உத்தரவிடப்பட்ட நாளிலிருந்து 12 வார காலத்திற்குள் அகற்ற உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் எதிர்வரும் காலங்களில் அரசு நிலங்களில், நிரந்தரமாக புதிய கொடிக் கம்பங்கள் அமைப்பதற்கு அரசு அலுவலர்கள் அனுமதி வழங்கக்கூடாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தூத்துக்குடி மாவட்டத்தில் மேற்காணும் நீதிமன்ற உத்தரவினை நிறைவேற்றும் வகையில், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று (02.04.2025) அனைத்து அரசியல் கட்சிகள், சமூகம், மதம், சங்கம் சார்ந்த அமைப்புகளின் மாவட்ட அளவிலான நிர்வாகிகள் மற்றும் அரசுத்துறை அலுவலர்களின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. 

இக்கூட்டத்தில் மேற்கண்ட உயர்நீதிமன்ற உத்தரவினை நடைமுறைப்படுத்தும் வகையில், வருவாய், ஊரக வளர்ச்சி, மாநகராட்சி மற்றும் நகராட்சி நிர்வாகம், அனைத்து பேரூரட்சிகள், இந்து சமய அறநிலையத்துறை, நெடுஞ்சாலை, நீர்வளம், பொதுப்பணித்துறை, வனம், போக்குவரத்து மற்றும் பிற துறைகளின் கட்டுப்பாட்டில் உள்ள அரசு நிலங்களில் அமைக்கப்பட்டுள்ள கொடி மற்றும் கொடிக்கம்பங்களை அந்தந்த அரசியல் கட்சிகள் மற்றும் சமூகம், மதம், சங்கம் அமைப்பு நிர்வாகிகள் 10.04.2025 தேதிக்குள் தங்கள் சொந்த செலவில், எவ்வித சட்டம் மற்றும் ஒழுங்கு பிரச்சனையும் ஏற்படாத வகையில் அகற்றிட கேட்டுக் கொள்ளப்பட்டது.

மேலும் நீதிமன்றத்திற்கு இவ்வினம் தொடர்பாக தமிழக அரசு அறிக்கை தாக்கல் செய்ய வேண்டி இருப்பதால் அனைத்து அரசியல் கட்சிகள் மற்றும் சமூகம், மதம், சங்கம் அமைப்பு நிர்வாகிகள் ஒத்துழைப்பு வழங்கிட மாவட்ட நிர்வாகம் சார்பில் கேட்டுக் கொள்ளப்படுகிறது என மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத் தெரிவித்துள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Tirunelveli Business Directory