» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை: தென்காசி கிறிஸ்தவ மதபோதகர் ஜான் ஜெபராஜ் கைது

திங்கள் 14, ஏப்ரல் 2025 8:33:22 AM (IST)



கோவையில் 2 சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் மூணாறில் பதுங்கி இருந்த கிறிஸ்தவ மதபோதகர் ஜான் ஜெபராஜை போலீசார் கைது செய்தனர்.

தென்காசி மாவட்டம் செங்கோட்டை தாலுகா வல்லம் அருகே உள்ள குமரன் நகரை சேர்ந்தவர் ஜான் ஜெபராஜ் (37). கிறிஸ்தவ மதபோதகரான இவர் கோவை ஜி.என்.மில்ஸ் பகுதியில் தங்கியிருந்து காந்திபுரம் கிராஸ்கட் சாலையில் ஆலயம் நடத்தி வந்தார். அத்துடன் தமிழக பகுதிகள் மட்டுமின்றி வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளுக்கு சென்று கிறிஸ்தவ பிரார்த்தனை கூட்டங்களை நடத்தி வந்தார்.

இந்த நிலையில் கடந்த ஆண்டு மே மாதம் 21-ந் தேதி ஜி.என்.மில்ஸ் பகுதியில் உள்ள ஜான் ஜெபராஜின் வீட்டில் ஒரு விருந்து நிகழ்ச்சி நடைபெற்றது. அந்த நிகழ்ச்சிக்கு 17 வயது சிறுமி மற்றும் அவருடைய தோழியான 14 வயது சிறுமி வந்து இருந்தனர். அப்போது ஜான் ஜெபராஜ் அந்த 2 சிறுமிகளுக்கும் பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. அத்துடன் அதை யாரிடமும் சொல்லக்கூடாது என்று மிரட்டியதாக தெரிகிறது.

ஆனாலும் பாதிக்கப்பட்ட சிறுமிகள் நடந்த சம்பவத்தை தங்களது பெற்றோரிடம் கூறி அழுதனர். இதை கேட்டு பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து அவர்கள் கோவை காட்டூரில் உள்ள மாநகர மத்திய மகளிர் போலீசில் புகார் செய்தனர். அதன்பேரில் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். இதை அறிந்த ஜான் ஜெபராஜ் தலைமறைவானார். 

இதையடுத்து அவரை பிடிக்க போலீஸ் கமிஷனர் சரவணசுந்தர் உத்தரவின்பேரில் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. அந்த தனிப்படையை சேர்ந்தவர்கள் நெல்லை, குமரி, தென்காசி மாவட்டங்களுக்கும், கர்நாடக மாநிலம் பெங்களூரு, மங்களூரு, மைசூரு உள்ளிட்ட பகுதிகளுக்கும் சென்று உள்ளூர் போலீசார் உதவியுடன் அவரை தேடி வந்தனர்.

அத்துடன் அவர் வெளிநாடுகளுக்கு தப்பிச்செல்ல முயற்சி செய்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதை தடுக்க அனைத்து விமான நிலையங்கள் மற்றும் துறைமுகங்களுக்கும் லுக்-அவுட் நோட்டீஸ் கொடுக்கப்பட்டது. அதில் ஜான் ஜெபராஜின் விவரம், புகைப்படம், அவருடைய பாஸ்போர்ட் எண், முகவரி, அவரை பிடித்தால் தொடர்பு கொள்ள வேண்டிய போலீஸ் அதிகாரிகளின் செல்போன் எண்கள் ஆகியவையும் கொடுக்கப்பட்டு இருந்தது. தொடர்ந்து தலைமறைவான அவரை போலீசார் வலைவீசி தேடி வந்தனர்.

அவர் யாரிடம் பேசிக்கொண்டு இருக்கிறார், அவரிடம் தொடர்பு வைத்து இருப்பவர்கள் யார்? என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தப்பட்டது. இந்த நிலையில் ஜான் ஜெபராஜ் கேரள மாநிலம் மூணாறு பகுதியில் உள்ள ஒரு சொகுசு விடுதியில் பதுங்கி இருப்பதாக தனிப்படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து கோவை ரேஸ்கோர்ஸ் போலீஸ் இன்ஸ்பெக்டர் அர்ஜூன் தலைமையிலான தனிப்படையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். பின்னர் அவர்கள் அங்குள்ள சொகுசு விடுதியில் பதுங்கி இருந்த ஜான் ஜெபராஜை நேற்று முன்தினம் மாலையில் அதிரடியாக கைது செய்தனர். தொடர்ந்து அவரை காரில் ஏற்றி கோவை காட்டூரில் உள்ள மகளிர் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.

பின்னர் அவரை கோவையில் உள்ள போக்சோ சிறப்பு கோர்ட்டு நீதிபதி நந்தினி தேவி(பொறுப்பு) முன்பு நேற்று காலை ஆஜர்படுத்தினர். அவர், வருகிற 25-ந் தேதி வரை மதபோதகர் ஜான் ஜெபராஜை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து போலீசார் ஜான் ஜெபராஜை பலத்த பாதுகாப்புடன் அழைத்துச்சென்று கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Tirunelveli Business Directory