» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
திருவனந்தபுரம் - மங்களூர் தினசரி இரவு நேர ரயில் நாகர்கோவில் வருமா? பயணிகள் கோரிக்கை!
சனி 19, ஏப்ரல் 2025 9:07:05 AM (IST)
திருவனந்தபுரம் - மங்களூர் தினசரி இரவு நேர ரயில் நாகர்கோவில் வரை இயக்க வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கன்னியாகுமரி மாவட்டத்திலிருந்து பல்வேறு பணிகளுக்காக தினமும் நூற்றுக்கணக்கான பயணிகள் கேரளாவிற்கு சென்று வருகின்றனர். நமது மாவட்டத்தைச் சேர்ந்த பலர், குறிப்பாக மீனவர்கள் மற்றும் சாதாரண பாமர மக்கள், அங்குள்ள மீன்பிடித் தொழிலில் ஈடுபடுவதற்கான மங்களூருக்கு அடிக்கடி வந்து செல்கின்றனர். இவ்வாறு செல்லும் மீனவர்கள் தங்கள் தொழிலுக்கு தேவையான உபகரணங்களை கொண்டு செல்வதில் பெரும் பிரச்சனைகளை சந்திக்கின்றனர்.
மேலும், கேரளாவில் மலபார் பகுதிக்கு பொருத்தமான வேலையைத் தேடி பலர் அடிக்கடி வருகை தருகின்றனர். கன்னியாகுமரிக்கு வரும் சுற்றுலா பயணிகள் வயனாடு, மங்களூர், கூர்க்கு போன்ற பகுதிகளுக்கு நேரடி இரவு நேர ரயில் வசதி இல்லாமல் மிகவும் அவதிப்படுகின்றனர். கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலை தரிசித்து விட்டு மேற்கு கடற்கரை மார்க்கம் உள்ள கொல்லூர் மூகாம்பிகை கோயில், உடுப்பி, கும்பசேரி, தர்மஸ்தலா, கோகர்னா போன்ற புனித இடங்களுக்கு செல்லும் பக்தர்களுக்கு நேரடி ரயில் வசதி இல்லாமல் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகின்றனர்.
தற்போது குமரி மாவட்ட தலைநகரம் நாகர்கோவிலிருந்து இரண்டு மார்க்கமாக ரயில் இருப்புபாதைகள் பிரிந்து செல்கிறது. அதில் ஒன்று திருநெல்வேலி, மதுரை வழியாக செல்லும் பாதை மற்றொன்று திருவனந்தபுரம், எர்ணாகுளம் வழியாக செல்லும் பாதை ஆகும். இதில் திருநெல்வேலி வழியாக செல்லும் பாதையில் மாலையில் புறப்பட்டு இரவில் பயணம் செய்யுமாறு இரவுநேர ரயில்கள் உள்ளன. ஆனால் இந்த பாதையில் பகல் நேர ரயில்கள் மிகவும் குறைவு ஆகும்.
இதைப்போல் திருவனந்தபுரம் மார்க்கம் உள்ள பாதையில் அதிக அளவில் பகல் நேர ரயில்களும் மிகவும் குறைந்த அளவில் இரவு நேர ரயில்கள் இயங்கி வருகிறது. தற்போது திருவனந்தபுரம் வழியாக கேரளாவுக்கு செல்ல வேண்டுமானால் மொத்தம் ஐந்து தினசரி ரயில்கள் இயக்கப்படுகிறது. இதில் அதிகாலையில் செல்லும் பரசுராம் ரயிலில் பயணம் செய்தால் மட்டுமே முழு கேரளாவுக்கும் பயணிக்க முடியும். இந்த ரயிலை விட்டால் அடுத்த ரயிலாக காலையில் 9:05 மணிக்கு கன்னியாகுமரி - புனே ரயில் அடுத்து காலை 10:30 மணிக்கு கன்னியாகுமரி - பெங்களூர் ரயில் ஆகும்.
மாலை நேரத்தில் தினசரி ரயிலாக 05:45 மணிக்கு கன்னியாகுமரி – திப்ருகர் ரயில் அடுத்து இரவு 11:00 மணிக்கு சென்னை - குருவாயூர் ரயில் மட்டுமே உள்ளது. இந்த ரயில்கள் திருச்சூர் பாலக்காடு வரை மட்டுமே செல்லும். பொதுவாக இரவு நேர ரயில்கள் என்று இயக்கப்படும் ரயில்கள் எல்லாம் மாலை 4:00 மணி முதல் இரவு 10 மணி வரை ஒரு நகரத்தில் இருந்து புறப்படுமாறு இயக்கப்படும்.
ஏடு காட்டாக நாகர்கோவிலிருந்து மாலை சென்னை, கோவை, பெங்களூர், மதுரை, ராமேஸ்வரம் போன்ற பகுதிகளுக்கு இரவு நேர ரயில்கள் இயக்கப்படுகிறது. குமரி மாவட்டத்துக்கு 1979-ம் ஆண்டு முதல் ரயில்கள் வந்து இயங்கி வருகிறது. இத்தனை ஆண்டுகள் ஆகியும் திருவனந்தபுரம் கோட்டம் சார்பாக குமரி மாவட்ட பயணிகள் வசதிக்காக முழு கேரளா செல்லத்தக்க வகையில் ஒரு இரவு நேர தினசரி ரயிலை கூட இயக்க எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை.
குமரி மாவட்ட பயணிகள் மங்களுர் மற்றும் வட கேரளா பகுதிகளுக்கு செல்ல ஆம்னி பேருந்துகள், அரசு பேருந்து வசதி, விமான வசதி கிடையாது. இங்கு உள்ள பயணிகளுக்கு ரயில் வசதி மட்டுமே உள்ளது. திருவனந்தபுரத்திலிருந்து மங்களுர்க்கு செல்ல மூன்று தினசரி இரவு நேர ரயில்கள் ரயில்கள் தற்போது இயக்கப்பட்டு வருகிறது. குமரி மாவட்டத்தில் உள்ள பயணிகள் தற்போது பேருந்துகளில் திருவனந்தபுரம் சென்று விட்டு அங்கிருந்து புறப்படும் இந்த மூன்று ரயில்களிலும் வட கேரளா மற்றும் மங்களுர்க்கு பயணிக்கின்றனர்.
இவ்வாறு குமரி மாவட்ட பயணிகள் நேரடி ரயில் வசதி இல்லாத காரணத்தால் திருவனந்தபுரம் சென்று பயணிப்பதால் குமரி மாவட்டத்திலிருந்து பயணிக்கும் பயணிகளின் வருவாய் திருவனந்தபுரம் ரயில் நிலையத்துக்கு சென்று அங்கு வளர்ச்சிக்கு மறைமுகமாக உதவுகிறது. குமரி மாவட்ட பயணிகள் வேறு மார்க்கங்களில் பயணிக்க முடியாத காரணத்தால் இந்த மூன்று மங்களுர் ரயில்கள் வருவாய் குமரி மாவட்ட பயணிகள் மூலம் கிடைக்கும் வருவாய் கணிசமான அளவில் உள்ளது. திருவனந்தபுரம் - மங்களூர் ரயில்களில் ஒரு ரயிலை நீட்டிப்பு செய்வதால் கேரளா பயணிகளுக்கு எந்த ஒரு பாதிப்பும் இருக்கப்போவதில்லை.
கன்னியாகுமரியிலிருந்து நேரடியாக மங்களூருக்கு தினசரி இரவு நேர ரயில் வசதி செய்து தர வேண்டும் என்று முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் டென்னிஸ் அவர்கள் 1989-ம் ஆண்டு ரயில் பட்ஜெட் விவாதத்தில் பங்கேற்று தனது கருத்தை பதிவு செய்துள்ளார். அப்போது முதல் இதுவரை சுமார் 35 ஆண்டுகளாக கன்னியாகுமரியிலிருந்து மங்களுர்க்கு தினசரி இரவு நேர ரயில் இயக்க வேண்டும் என்ற கோரிக்கை நிறைவேறாமல் உள்ளது. திருவனந்தபுரத்திலிருந்து இயக்கப்படும் ரயில்களில் 47/48 என்ற எண் கொண்ட ரயில் சுமார் 30 வருடங்களுக்கு முன்பு கன்னியாகுமரியிலிருந்து இயக்கப்படுவதாக பல்வேறு தரப்பினர் தெரிவிக்கின்றனர்.
இந்த ரயிலை திருவனந்தபுரம் கோட்ட அதிகாரிகள் திருவனந்தபுரத்துடன் நிறுத்தி விட்டனர். இதற்கு மாற்று ஏற்பாடாக இதுவரை எந்த ரயில் வசதியும் செய்யப்படவில்லை. இந்த கால கட்டத்தில் குமரி மாவட்ட ரயில் பயணிகளுக்கு ரயிலை பற்றிய போதிய விழிப்புணர்வு இல்லாத காரணத்தால் திருவனந்தபுரம் கோட்ட ரயில்வே அதிகாரிகள் குமரி மாவட்டத்துக்கு எதிராக செயல்பட்டனர். இந்த கண்ணனூர் ரயில் 2005-ம் ஆண்டு நிதிநிலை அறிக்கையில் மங்களூர் வரை நீட்டிப்பு செய்து 16347/16348 எண் கொண்ட ரயிலாக திருவனந்தபுரம் - மங்களுர் மார்க்கத்தில் தற்போது இயக்கப்பட்டு வருகிறது.
மதுரை கோட்டத்தில் இயங்கிவந்த திருச்சியிலிருந்து திருநெல்வேலி வரை இயக்கப்பட்டு வந்த இன்டர்சிட்டி ரயில் திருவனந்தபுரம் கோட்டத்தில் உள்ள கேரளாவின் தலைநகர் திருவனந்தபுரத்தில் நீட்டிப்பு செய்யப்பட்டது. இதைப்போன்ற திருவனந்தபுரம் - சென்னை அனந்தபுரி ரயில் கேரளா பயணிகளுக்காக வேண்டி கொல்லம் வரை நீட்டிப்பு செய்யப்பட்டது. திருநெல்வேலி – தாம்பரம் அந்தோதையா ரயில் நாகர்கோவில் வரை நீட்டிப்பு செய்யப்பட்டது.
இவ்வாறு மதுரை கோட்டத்தில் உள்ள ரயில்கள் திருவனந்தபுரம் கோட்டத்தில் நீட்டிப்பு செய்யப்பட்டதை போன்று திருவனந்தபுரத்திலிருந்து இயக்கப்படும் மங்களூரு ரயில்களில் மாவேலி ரயிலை திருநெல்வேலி வரை நீட்டிப்பு செய்ய வேண்டும் என்று நெல்லை மாவட்ட பயணிகள் கோரிக்கை வைக்கின்றனர்.
திருவனந்தபுரத்திலிருந்து மங்களுர்க்கு இயக்கப்படும் மூன்று ரயில்களில் திருவனந்தபுரம் - மங்களூர் 16347/16348 எக்ஸ்பிரஸ் ரயிலை நாகர்கோவில் அல்லது கன்னியாகுமரி வரை நீட்டித்து இயக்க வேண்டும். இவ்வாறு இந்த ரயிலை நீட்டித்து இயக்க முடியாத நிலை இருந்தால் கன்னியாகுமரியிலிருந்து மங்களுர்க்கு புதிய தினசரி ரயில் அறிவித்து இயக்க வேண்டும் என்று குமரி மாவட்ட பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடியில் கோடை கால விளையாட்டு பயிற்சி முகாம் : ஆட்சியர் தகவல்!
சனி 19, ஏப்ரல் 2025 5:12:02 PM (IST)

என்னுடைய ரசிகர்கள் மட்டுமல்ல.. த.வெ.கவின் விர்ச்சுவல் வாரியர்ஸ்: விஜய் பேச்சு
சனி 19, ஏப்ரல் 2025 4:44:50 PM (IST)

தமிழக மக்களின் அவுட் ஆஃப் கன்ட்ரோல் ஆக ஸ்டாலின் உள்ளார்: தமிழிசை விமர்சனம்!
சனி 19, ஏப்ரல் 2025 4:32:20 PM (IST)

தமிழகத்தில் இரட்டை இலைக்கு மேலே தாமரை மலர்ந்தே தீரும்: நயினார் நாகேந்திரன் நம்பிக்கை
சனி 19, ஏப்ரல் 2025 4:18:14 PM (IST)

மனசாட்சி உள்ள எவரும் விஸ்வகர்மா திட்டத்தை ஏற்க மாட்டார்கள் : முதல்வர் மு.க.ஸ்டாலின்
சனி 19, ஏப்ரல் 2025 3:45:56 PM (IST)

தமிழ்நாட்டில் 10% இட ஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்த வேண்டும்: வானதி சீனிவாசன் வலியுறுத்தல்
சனி 19, ஏப்ரல் 2025 12:42:11 PM (IST)
