» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

சாலை விபத்தில் வருவாய் கோட்டாட்சியர் உயிரிழப்பு: முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல்!

வியாழன் 19, ஜூன் 2025 5:15:37 PM (IST)



திருச்சி அருகே சாலை விபத்தில் முசிறி வருவாய் கோட்டாட்சியர் உயிரிழந்த சம்பவத்திற்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

திருச்சி அருகே அரசு பேருந்தும் காரும் மோதி விபத்துக்குள்ளானது. விபத்தில் முசிறி கோட்டாட்சியர் ஆரமுது தேவசேனா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். ஓட்டுநர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தகவல் அறிந்ததும், திருச்சி மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல்துறை அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். சாலை விபத்தில் வருவாய் கோட்டாட்சியர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி மாவட்டம் கடியாக்குறிச்சி அருகே நடந்த சாலை விபத்தில் முசிறி வருவாய் கோட்டாட்சியர் ஆரமுத தேவசேனா உயிரிழந்தார். அவரது மறைவுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும், அவரது குடும்பத்தினருக்கு அரசு ஊழியர்களுக்கான காப்பீட்டு தொகை ரூ.1 கோடி பெற்று வழங்கப்படும் எனவும், பொது நிவாரண நிதியில் இருந்து ரூ.10 லட்சம், குடும்ப பாதுகாப்பு நிதியில் இருந்து ரூ.5 லட்சம் வழங்கவும் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இதுகுறித்து முதல்வர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கம் வட்டம், மேக்குடி கிராமம், கரூர்-திருச்சி தேசிய நெடுஞ்சாலை, கடியாக்குறிச்சி பேருந்து நிறுத்தம் அருகில் முசிறி வருவாய் கோட்டாட்சியர் ஆரமுத தேவசேனா அவர்கள் இன்று (19.06.2025) காலை 11.45 மணியளவில் TN 45 G 1798 என்ற பதிவெண் கொண்ட நான்கு சக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்தபோது, எதிரே திருச்சியிலிருந்து திருப்பூர் நோக்கி சென்றுகொண்டிருந்த அரசுப்பேருந்து மோதியதில் முசிறி வருவாய் கோட்டாட்சியரின் நான்குசக்கர வாகனம் நிலைதடுமாறி அருகில் பழுது பார்ப்பதற்காக நின்று கொண்டிருந்த ஜேசிபி வாகனம் மீது எதிர்பாதாராதவிதமாக மோதி விபத்துக்குள்ளானதில் முசிறி வருவாய் கோட்டாட்சியர் ஆரமுத தேவசேனா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் என்ற துயரகரமான செய்தியைக் கேட்டு மிகுந்த அதிர்ச்சியும், வேதனையுமடைந்தேன்.

முசிறி வருவாய் கோட்டாட்சியர் திருமதி.ஆரமுத தேவசேனா அவர்களின் உயிரிழப்பு வருவாய்த் துறைக்கும், அவரது குடும்பத்தினருக்கும் ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும். ஆரமுத தேவசேனா அவர்களை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், அவரது உறவினர்கள் மற்றும் அவருடன் பணிபுரிபவர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

ஆரமுத தேவசேனா அவர்களின் குடும்பத்தினருக்கு தமிழ்நாடு அரசு அண்மையில் அறிவித்த அரசு அலுவலர்களுக்கான காப்பீட்டுத் தொகை ரூபாய் ஒரு கோடி பெற்று வழங்கப்படும். மேலும், அவரது குடும்பத்தினருக்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து பத்து லட்சம் ரூபாய் மற்றும் குடும்ப பாதுகாப்பு நிதியிலிருந்து ஐந்து லட்சம் ரூபாய் வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Tirunelveli Business Directory