» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

வெற்றி நிச்சயம் திட்டம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

செவ்வாய் 1, ஜூலை 2025 4:58:05 PM (IST)



சென்னை, ஜவஹர்லால் நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்ற "நான் முதல்வன்" திட்டத்தின் மூன்றாண்டு வெற்றி விழாவில் கலந்து கொண்டு, "வெற்றி நிச்சயம்" திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

இதனைத் தொடர்ந்து முதல்வர் ஸ்டாலின் உரையாற்றினார். அவர் பேசுகையில், ”‘Success’! இதை நோக்கிதான் வாழ்க்கையில் எல்லோரும் உழைக்கிறோம்! அப்படி Successful மாணவர்களை உருவாக்கக்கூடிய ஒரு Successful திட்டத்திற்கான உண்மையான ‘Success Meet’ தான் இந்த வெற்றி விழா! அதுமட்டுமல்ல, "வெற்றி நிச்சயம்” என்று மற்றொரு புதிய முயற்சிக்கான தொடக்க விழாவும் கூட!

கடந்த ஆண்டு தில்லியில், நடந்த இந்தியத் திறன் போட்டியில் நம்முடைய தமிழ்நாட்டு மாணவர்கள் 87 பேர் - 61 பிரிவுகளில் கலந்துகொண்டு, 6 தங்கம் - 8 வெள்ளி - 9 வெண்கலம் - 17 சிறப்பு பதக்கங்கள் என்று 40 பதக்கங்களை வென்று, இந்திய அளவில் மூன்றாவது இடத்தை பிடித்தார்கள்! அடுத்த ஆண்டு ஷாங்காய் நகரில் ‘உலகத் திறன் போட்டிகள்’ நடைபெறப் போகிறது.

அதில் கலந்துகொள்ளும் போட்டியாளர்களை தேர்ந்தெடுப்பதற்கான ‘தமிழ்நாடு திறன் போட்டிகள் - 2025’ பதிவுகள் இன்றைக்கு தொடங்குகிறது! நான் முதல்வன் தளத்தில் பதிவுசெய்து, இந்தப் போட்டியில் வெற்றிபெற உங்களை வாழ்த்துகிறேன்!

இந்த வெற்றிகளுக்கான அடித்தளத்தை பள்ளிகளிலேயே நீங்கள் அமைக்க வேண்டும் என்றுதான் பள்ளி மாணவர்களின் அறிவாற்றலைக் கண்டறிந்து மெருகேற்றும் நான் முதல்வன் ஒலிம்பியாட் திட்டம் - பள்ளி மாணவர்களின் உயர்கல்விக்கு வழிகாட்டும் கல்லூரிக் கனவுத் திட்டம் - சமூக – பொருளாதார காரணங்களால் பள்ளிக்கல்விக்கு மேல் படிக்க முடியாத மாணவர்களின் உயர்கல்வியை உறுதிசெய்ய உயர்வுக்குப் படி திட்டம், கிராமப்புற மாணவர்களுக்கு திறன் பயிற்சி வழங்க சிகரம் தொடு திட்டம், கல்லூரிக்கு செல்லும் அரசுப்பள்ளி மாணவ – மாணவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கும் புதுமைப்பெண், தமிழ்ப்புதல்வன் – இப்படி பல்வேறு திட்டங்களை சிறப்பாக செயல்படுத்திக் கொண்டிருக்கிறோம்!

அந்த வரிசையில்தான், இன்றைக்கு, ‘வெற்றி நிச்சயம்’ திட்டத்தையும் தொடங்கி வைத்திருக்கிறேன்! இந்த திட்டத்தைப்பற்றி சொல்ல வேண்டும் என்றால், உலகத்தரம் வாய்ந்த முன்னணி பயிற்சி நிறுவனங்கள் மற்றும் தொழில்துறை நிறுவனங்களோடு இணைந்து, தமிழ்நாடு முழுவதும் இருக்கும் 18 முதல் 35 வயதுள்ள படித்த வேலையில்லாத இளைஞர்கள் படிப்பை பாதியிலேயே நிறுத்தியவர்களை கண்டறிந்து, அவர்களுக்கு குறுகிய கால திறன் பயிற்சிகள் வழங்க இருக்கிறது!

இதற்கான பயிற்சித் தொகையையும் நம்முடைய திராவிட மாடல் அரசே ஏற்க இருக்கிறது! மாற்றுத்திறனாளிகள், பழங்குடியினர், இலங்கைத் தமிழர்கள், மீனவ இளைஞர்கள், சிறுபான்மையினர், நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு இளைஞர்கள் மற்றும் தூய்மைப் பணியாளர்கள் என்று சமூக மற்றும் பொருளாதார ரீதியாக பின்தங்கிய வகுப்பினர்கள் அனைவருக்கும் அரசின் நலத்திட்ட பயனாளிகளின் குடும்ப உறுப்பினர்கள் வழியாக கண்டறிந்து இந்தத் திட்டத்தில் முன்னுரிமை அளிக்கப்பட்டு, 12 ஆயிரம் ரூபாய் வரை ஊக்கத்தொகையாக வழங்கப்படும்!

அதுமட்டுமல்ல, தொலைதூர மாவட்டங்களிலிருந்து, பயிற்சி பெற விரும்பும் மாணவர்களுக்கு, உணவுடன் கூடிய இருப்பிட வசதியும், தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் மூலமாக வழங்கப்படும்! இந்த திட்டத்தில் சேர - ‘ஸ்கில் வாலட்’ என்ற செயலியை உருவாக்கியிருக்கிறோம்! இந்த ஆப்-இல், எந்த கம்பெனியில் வேலைவாய்ப்பு இருக்கிறது? அதற்கு என்ன பயிற்சி என்று எல்லா தகவல்களும் இருக்கும்!

இப்படி, தமிழ்நாட்டையே உயர்த்தும் உன்னதமான திட்டமாக இருக்கின்ற காரணத்தினால், ‘நான் முதல்வன் திட்டம்’ என் நெஞ்சுக்கு நெருக்கமான திட்டமாக இருக்கிறது! இன்றைக்கு பணி நியமனம் பெற்றுள்ள மாணவர்களுக்கும் - நமக்கு துணை நிற்கும் தொழில் நிறுவனங்களுக்கும் - மாணவர்களான உங்களுக்கும் - ஆசிரியர்களுக்கும் என்னுடைய வாழ்த்துகளை நான் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்! மாணவர்களான நீங்கள் வளர வேண்டும்; வளர்த்தெடுக்க வேண்டும் என்றுதான் ஏராளமான திட்டங்களை நாங்கள் இன்றைக்கு செயல்படுத்திக் கொண்டிருக்கிறோம்!

கல்லூரி மாணவர்களுக்கு இந்தாண்டு முதல் லேப்டாப் வழங்க இருக்கிறோம்! நான் உங்களிடம் கேட்டுக்கொள்வது, கல்வியை இறுகப்பற்றிக் கொள்ளுங்கள்; உங்களுக்கு சப்போர்ட் செய்ய நான் இருக்கிறேன்! நம்முடைய திராவிட மாடல் அரசு இருக்கிறது;

நாங்கள் உருவாக்கி தரக்கூடிய வாய்ப்புகள் எல்லாவற்றையும் நீங்கள் பயன்படுத்தி, நான் முதல்வன் திட்டம் மூலமாக இன்னும் பல முதல்வர்கள் உருவாகவேண்டும்! உங்கள் வெற்றியை பார்த்து, உங்களைப் பெற்றவர்கள் எவ்வளவு மகிழ்ச்சியும், பெருமையும் அடைவார்களோ, அதே அளவு மகிழ்ச்சியையும், பெருமையையும் நானும் அடைகிறேன்” என்றார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Tirunelveli Business Directory