» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு சீர்கெட்டு உள்ளது : எடப்பாடி பழனிசாமி பேச்சு

சனி 2, ஆகஸ்ட் 2025 8:57:53 AM (IST)


தமிழகத்தில் ஒட்டுமொத்தம் சட்டம் - ஒழுங்கு சீர்கெட்டு உள்ளது. சிறுமி முதல் மூதாட்டி வரை பாதுகாப்பு கிடையாது. என்று கோவில்பட்டியில் மக்களைக் காப்போம் தமிழகத்தை மீட்போம் பிரச்சாரத்தில் எடப்பாடி பழனிசாமி பேசினார். 

‘மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்’ என்ற பிரச்சாரப் பயணத்துக்காக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று இரவு தூத்துக்குடி மாவட்டத்துக்கு வந்தார். அவருக்கு தூத்துக்குடி மாவட்ட எல்லையில் வடக்கு மாவட்ட அதிமுக செயலாளர் கடம்பூர் செ.ராஜூ எம்.எல்.ஏ. தலைமையில் வரவேற்பு அளிக்கப்பட்டது. இரவு 10.15 மணிக்கு விளாத்திகுளம் பேருந்து நிலையம் முன்பு பிரச்சாரத்தை முடித்துக் கொண்டு அவர் கோவில்பட்டிக்கு வந்தார். தொடர்ந்து இன்று காலை அருள்தரும் செண்பகவல்லி அம்மன் கோயிலில் தரிசனம், தீப்பெட்டி, கடலை மிட்டாய் உற்பத்தியாளர்களுடன் கலந்துரையாடல் உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் எடப்பாடி பழனிசாமி பங்கேற்று பேசினார்.

பின்னர் மாலை 5.30 மணிக்கு கோவில்பட்டி பிரதான சாலையில் தீயணைப்பு நிலையம் அருகே இருந்து பயணியர் விடுதி முன்பு வரை ரோடு ஷோவில் பங்கேற்றார். தொடர்ந்து பயணியர் விடுதி முன்பு பிரச்சாரக் கூட்டம் தொடங்கி நடைபெற்றது. வடக்கு மாவட்ட கடம்பூர் செ.ராஜூ எம்.எல்,ஏ. தலைமை வகித்தார். இக்கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி பேசியது: ”திமுக ஆட்சி மக்கள் விரோத ஆட்சி. எப்போது இந்த ஆட்சி அகற்றப்படும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர். அடுத்த ஆண்டு நடைபெறும் தேர்தலில் திமுகவை வீழ்த்தி அதிமுக - பாஜக கூட்டணி வெற்றி பெற்று அதிமுக தலைமையில் ஆட்சி அமையும்.

எங்கள் கூட்டணியை பார்த்து ஸ்டாலின் பதறுகிறார். அவருக்கு நடுக்கம் வந்துவிட்டது. அவருக்கு ஆட்சி பறிபோய்விடும் என்ற பயத்தில் உள்ளார். திமுக நல்லது செய்த சரித்திரம் கிடையாது. கலெக்‌ஷன், கமிஷன், கரப்ஷன். அனைத்து துறைகளிலும் ஊழல். இன்றைக்கு லட்சம் லாவண்யம் மிகுந்த மாநிலம் தமிழகம்தான். அதிமுகவை பாஜக விழுங்கிவிடும் என ஸ்டாலின் மற்றும் அவரது கூட்டணி கட்சியினர் அவதூறு பிரச்சாரம் செய்கின்றனர். நாங்கள் எப்போது பாஜகவுடன் கூட்டணி வைத்தோமோ அப்போதே திமுக வீழ்ச்சியடைந்துவிட்டது.

பாஜக மதவாத கட்சி என அவதூறு ஸ்டாலின் பரப்புகிறார். மத்தியில் 3 முறை ஆட்சி அமைத்து பிரதமர் மோடி தலைமையில் சிறப்பாக செயல்பட்டு உலக நாடுகள் பாராட்டும் அளவில் பாஜக உள்ளது. 1999-ல் பாஜகவுடன் திமுக கூட்டணி வைத்து வெற்றி பெற்றது. அந்த அமைச்சரவையில் திமுகவைச் சேர்ந்த முரசொலி மாறன் அமைச்சராக இருந்தார். அவர் உடல்நிலை சரியில்லாமல் இருந்தாலும் பராவயில்லை என இலாக்கா இல்லாத அமைச்சராக வைத்து அழகுபார்த்த கட்சி பாஜக. முரசொலி மாறன் மறைந்தவுடன் அவரது இறுதி ஊர்வலத்தில் அப்போது பிரதமராக இருந்த வாஜ்பாய் பங்கேற்றனர். 

அடுத்த 15 நாட்களில் காங்கிரஸ் கூட்டணி வைத்து, அந்த அமைச்சரவையில் திமுக இடம் வாங்கிக் கொண்டது. பச்சைசோந்தி கூட கொஞ்சம் நேரம் கழித்துதான் நிறம் மாறும். ஆனால், திமுக உடனடியாக நிறம் மாறிவிடும். திமுக பாஜகவுடன் கூட்டணி வைத்தபோது, மதவாத கட்சியாக இல்லை. அதிமுக பாஜகவுடன் சேர்ந்தால் அவதூறு பரப்பி அரசியல் லாபம் தேடுகின்றனர். ஒவ்வொரு கட்சிக்கு ஒரு கொள்கை உள்ளது. 

ஆனால், திமுகவுக்கு கொள்கையே கிடையாது. அவர்களது கூட்டணியில் உள்ள கட்சியினருக்கும் கொள்கை கிடையாது. ஒத்த கொள்கையுடன் உள்ளோம் என அவர்கள் கூறுகின்றனர். அப்புறம் எதற்கு தனித்தனி கட்சி. திமுகவுடன் இணைந்துவிட வேண்டியது தானே. அதிமுக, பாஜகதான் திமுகவை எதிர்த்து மக்களை பிரச்சினைகளை முன்னிறுத்தி குரல் கொடுக்கிறது. போராட்டங்களை நடத்தி வருகிறது. மக்கள் பிரச்சினைகளுக்காக முதன்முதலாக குரல் கொடுப்பது அதிமுகதான். 

எங்களுக்கு துணை நிற்பது பாஜக. தமிழகத்தில் ஒட்டுமொத்தம் சட்டம் - ஒழுங்கு சீர்கெட்டு உள்ளது. ஒரு காலத்தில் ஸ்காட்லாந்து போலீஸுக்கு இணையான இருந்த தமிழக காவல் துறை, இன்றைக்கு திமுகவின் ஏவல் துறையாக செயல்பட்டு வருகிறது. காவல் துறையினருக்கே பாதுகாப்பு கிடையாது. இவர்கள் எப்படி மக்களை பாதுகாப்பார்கள். சென்னையில் கனிமொழி பங்கேற்ற பொதுக் கூட்டத்தில் பெண் காவலருக்கு சிலர் பாலியல் துன்புறுத்தல் கொடுத்துள்ளனர். சிறுமி முதல் மூதாட்டி வரை பாதுகாப்பு கிடையாது.

மத்திய அரசு நிதி ஒதுக்கவில்லை, திட்டங்கள் கொடுக்கவில்லையென ஸ்டாலின் அவதூறு பரப்புகிறார். 16 ஆண்டு காலம் மத்தியில் கூட்டணி ஆட்சியில் இருந்த திமுக அப்போது ஏன் தமிழகத்துக்கு தேவையான திட்டங்களை கொண்ட வரவில்லை. திமுக பொறுத்தவரை குடும்பத்துக்கு ஆட்சி அதிகாரம் வேண்டும். சட்டமன்றம், நாடாளுமன்றம் என கருணாநிதி குடும்பத்தை சேர்ந்தவர்கள் தான் பங்கு பெற வேண்டும். கட்சியிலும் அதே நிலை தான். குடும்ப ஆட்சிக்கு, வாரிசு அரசியலுக்கு, கருணாநிதி குடும்பத்தின் மன்னராட்சிக்கு முடிவு கட்டு தேர்தல் 2026 தேர்தலாகும்.

பணமில்லையென கூறும் ஸ்டாலினுக்கு, கார் பந்தயம் நடத்த எங்கிருந்து பணம் வந்தது. இவர்கள் ஆட்சியில் இருக்க வேண்டுமா? கடலில் 2 கி.மீ. தூரத்தில் ரூ.82 கோடியில் எழுதாத போனாவை வைப்பதற்கு எங்கிருந்து பணம் வருகிறது. உங்களது டிரஸ்ட்டில் பணம் உள்ளது. அதை எடுத்து செலவு செய்யுங்கள். எழுதுற பேனாவை கருணாநிதியின் பிறந்த நாளில் கூட பள்ளி மாணவ, மாணவிகளுக்கு வழங்குங்கள்.

இப்போது உதயநிதியை படிப்படியாக கொண்டு வர முயற்சி செய்கின்றனர். திமுக ஆட்சி வந்து செய்த ஒரே சாதனை ஸ்டாலின் மகன் உதயநிதியை துணை முதல்வராக ஆக்கினது தான். வேறு எந்த சாதனையும் இல்லை. இந்த ஆட்சியில் என்ன நடக்கிறது என்றே தெரியவில்லை. இந்தியாவிலேயே கடன் வாங்குவதில் முதல் மாநிலமாக தமிழகம் உள்ளது. திமுக அரசு திவாலாகிவிட்டது. 4 ஆண்டுகளில் 4 லட்சத்து 38 ஆயிரம் கோடி கடன் வாங்கினால், எப்படி தமிழகம் மக்கள் திரும்ப செலுத்துவார்கள்.

தமிழகத்தில் அனைத்தும் விளம்பர மாடல். தற்போது உங்களுடன் ஸ்டாலின் என்கிறார். இவ்வளவு நாள் குடும்பத்துடன் இருந்துவிட்டு, 4 ஆண்டுகளுக்கு பின்னர் உங்களுடன் ஸ்டாலின் திட்டம் கொண்டு வந்துள்ளார். உங்களுடன் ஸ்டாலின், நலன் காக்கும் ஸ்டாலின் உள்ளிட்ட திட்டங்களை 4 ஆண்டு ஆட்சிக்கு பின்னர் கொண்டு வந்துள்ளனர்.

அதிமுக ஆட்சியில் அரசு மருத்துவமனையில் சிறந்த மருத்துவம் வழங்கப்பட்டது. திமுக ஆட்சியில் மருத்துவர், செவிலியர் இல்லை. மருந்துகளும் கிடையாது. கால்பந்து வீராங்கனைக்கு தவறான சிகிச்சை அளித்து கால் எடுக்கும் நிலை ஏற்பட்டது. ஆனால், அதிமுக ஆட்சியில் கைகள் இல்லாமல் வந்த இளைஞருக்கு செயற்கை கைகள் பொருத்த உதவி செய்தோம். 

அதிமுக ஆட்சி அமைந்தவுடன் முக்கியமாக தீபாவளி பண்டிகையையொட்டி பெண்களுக்கு அற்புதமாக சேலை வழங்கப்படும். 2026-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணி பெருவாரியாக வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும்” என்று பழனிசாமி பேசினார். இக்கூட்டத்தில், முன்னாள் அமைச்சர்கள் சி.விஜயபாஸ்கர், ஆர்.பி.உதயகுமார் மற்றும் ஆயிரக்கணக்கான அதிமுகவினர், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Tirunelveli Business Directory