» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

வரதட்சனை கொடுமையால் இளம்பெண் தற்கொலை : கணவர், மாமனார், மாமியார் கைது!

வியாழன் 7, ஆகஸ்ட் 2025 12:22:36 PM (IST)

திருப்பூரில் வரதட்சனை கொடுமையால் இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட வழக்கில் அவரது கணவர், மாமனார் மற்றும் மாமியாரை போலீசார் கைது செய்தனர்.

திருப்பூர் கே.செட்டிப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் குப்புசாமி. தொழில் அதிபர். அவருடைய மனைவி சுகந்தி. இவர்களது மகள் பிரீத்தி (வயது 26). இவருக்கும், ஈரோடு மாவட்டம் வீரப்பன் சத்திரத்தை சேர்ந்த என்ஜினீயரான சதீஸ்வர் (30) என்பவருக்கும் கடந்த 11 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது.

திருமணத்தின்போது பிரீத்திக்கு 120 பவுன் நகை, சொகுசு கார், ரூ.25 லட்சம் வரதட்சணையாக பெற்றோர் கொடுத்ததாக கூறப்படுகிறது. கணவர் மற்றும் மாமியாருடன் ஏற்பட்ட தகராறில் பிரீத்தி கோபித்துக்கொண்டு, கடந்த மாதம் 11-ந்தேதி தனது பெற்றோர் வீட்டுக்கு வந்தார்.

பிரீத்தியின் பெற்றோர், சின்னக்கரையில் உள்ள சொத்தை சமீபத்தில் விற்பனை செய்துள்ளனர். இதில் பிரீத்தியின் பங்காக ரூ.50 லட்சம் வந்துள்ளது. அந்த பணத்தை சதீஸ்வர், தனக்கு கொடுக்குமாறு மனைவியிடம் தொடர்ந்து கேட்டதாக தெரிகிறது. இதனால் பிரீத்தி மனம் உடைந்த நிலையில், கடந்த சில நாட்களாக பெற்றோர் வீட்டில் சோகமாக இருந்தார்.

இந்தநிலையில் நேற்று முன்தினம் மாலை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் பிரீத்தி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். வரதட்சணை கொடுமையால் பிரீத்தி தற்கொலை செய்து கொண்டதாக குடும்பத்தினர், உறவினர்கள் குற்றம்சாட்டினர். அதோடு பிரீத்தியின் உடலை வாங்க குடும்பத்தினர், உறவினர்கள் மறுத்தனர். வரதட்சணை புகார் தெரிவிக்கப்பட்டதை தொடர்ந்து திருப்பூர் ஆர்.டி.ஓ. மோகனசுந்தரம், பிரீத்தியின் குடும்பத்தினரிடம் விசாரணை நடத்தினார். 

வரதட்சணை கொடுமை செய்த கணவர், குடும்பத்தினரை கைது செய்ய வேண்டும் என்று தற்கொலை செய்த பெண்ணின் தாய்மாமா தியாகராஜ் வலியுறுத்தி இருந்தார். இந்நிலையில் வரதட்சணை கொடுமையால் தற்கொலை செய்து கொண்ட பிரீத்தியின் கணவர் சதீஸ்வர், மாமனார் விஜயகுமார் மற்றும் மாமியார் உமாவை நல்லூர் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பிரீத்தியின் கணவர் குடும்பத்தினர் கைது செய்யப்பட்டதை தொடர்ந்து, அவரது உடலை வாங்க பெற்றோர் சம்மதம் தெரிவித்துள்ளனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Tirunelveli Business Directory