» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
குமரியிலிருந்து மதுரை, தி.மலை வழியாக திருப்பதிக்கு தினசரி ரயில் இயக்கக் கோரிக்கை!
செவ்வாய் 2, செப்டம்பர் 2025 11:17:02 AM (IST)
கன்னியாகுமரியிலிருந்து மதுரை, திருவண்ணாமலை வழியாக திருப்பதிக்கு தினசரி ரயில் இயக்க வேண்டும் என்று குமரி மாவட்ட பயணிகள் நலச்சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
திருப்பதி வெங்கடாசலபதி கோயில், ஆந்திரப் பிரதேசத்தின் சித்தூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது. சேஷாத்திரி, கருடாத்திரி, நீலாத்திரி, அஞ்சனாத்திரி, விருஷபாத்திரி, நாராயணாத்திரி, மற்றும் வெங்கடாத்திரி ஆகிய ஏழு மலைகளால் சூழப்பட்ட இத்தலம், ஏழுமலை என்றும், இங்கு வீற்றிருக்கும் மூலவர் ஏழுமலையான் என்றும் அழைக்கப்படுகிறார். இந்தியாவின் மிகப் பணக்கார கோயிலாகத் திகழும் திருப்பதி கோயிலில், பக்தர்களின் கூட்டம் எப்போதும் அலைமோதுகிறது.
தற்போது, திருப்பதியிலிருந்து சென்னை மற்றும் விழுப்புரம் தவிர, தமிழ்நாட்டின் வேறு எந்த நகரத்திற்கும் தினசரி தனி ரயில் சேவை இல்லை. ஒரு சில நெடுந்தூர ரயில்கள், கேரளாவிற்கு செல்லும் வழியில் சேலம் மற்றும் கோவை வழியாக இயக்கப்படுகின்றன. ஆனால், தமிழ்நாட்டிலிருந்து திருப்பதிக்கு அதிக அளவில் பக்தர்கள் செல்வதால், இது தமிழகத்தை புறக்கணிப்பதாகவே தோன்றுகிறது. எனவே, பக்தர்களின் வசதிக்காக கன்னியாகுமரியிலிருந்து மதுரை, திருவண்ணாமலை வழியாக திருப்பதிக்கு தினசரி ரயில் இயக்கப்பட வேண்டும்.
தற்போது, ராமேஸ்வரம்-திருப்பதி மற்றும் மன்னார்குடி-திருப்பதி ஆகிய இரு ரயில்கள் வாரத்தில் மூன்று நாட்கள் இயக்கப்படுகின்றன. இவற்றை தினசரி ரயில்களாக மாற்ற வேண்டும் என்று பல ஆண்டுகளாக கோரிக்கை வைக்கப்பட்டு வருகிறது. ஆனால், ரயில்வே துறை இதனை கவனத்தில் கொள்ளவில்லை.
நாகர்கோவில்-திருப்பதி ரயில் வரலாறு
2000-ம் ஆண்டு ரயில்வே பட்ஜெட்டில், நாகர்கோவிலிலிருந்து திருநெல்வேலி, மதுரை, திருச்சி, விழுப்புரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், மற்றும் திருத்தணி வழியாக திருப்பதிக்கு வாரத்தில் இரு நாட்கள் ரயில் அறிவிக்கப்பட்டடு இயக்கப்பட்டது. இந்த ரயில் பல ஆண்டுகளாக இயக்கப்பட்டு வந்தது. பின்னர், இது திருப்பதி-மும்பை ரயிலுடன் இணைக்கப்பட்டு, நாகர்கோவில்-திருப்பதி மற்றும் திருப்பதி-மும்பை என இரு ரயில்களாக இயக்கப்பட்டது. அதன் பிறகு, இரு ரயில்களும் இணைக்கப்பட்டு நாகர்கோவில்-மும்பை என்ற ஒற்றை ரயிலாக மாற்றப்பட்டது. ஆனால், 2013-ம் ஆண்டு முதல், இந்த ரயில் திருப்பதிக்கு செல்லாமல் ரேணிகுண்டா வழியாக இயக்கப்படுகிறது. இதனால், இந்த ரயிலின் அறிமுக நோக்கம் நிறைவேறாமல் உள்ளது.
கன்னியாகுமரியில் திருப்பதி கோயில்
திருப்பதி வெங்கடாசலபதியை தரிசிக்க தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் செல்கின்றனர். கூட்ட நெரிசல் காரணமாக, பக்தர்களுக்கு சுவாமி தரிசனத்திற்கு போதிய நேரம் கிடைப்பதில்லை. இதனை நிவர்த்தி செய்ய, திருமலை திருப்பதி தேவஸ்தானம் சார்பில், கன்னியாகுமரி விவேகானந்தபுரத்தில் 5½ ஏக்கர் நிலத்தில் வெங்கடாசலபதி கோயில் கட்டப்பட்டுள்ளது. இதற்கு முன், டெல்லி, பெங்களூரு, ரிஷிகேஷ் உள்ளிட்ட ஆறு இடங்களில் இதே தேவஸ்தானத்தால் கோயில்கள் கட்டப்பட்டு பராமரிக்கப்படுகின்றன.
தினசரி ரயில் இயக்கக் கோரிக்கை
கன்னியாகுமரியிலிருந்து திருநெல்வேலி, மதுரை, திருச்சி, விருத்தாச்சலம், விழுப்புரம், மற்றும் திருவண்ணாமலை வழியாக திருப்பதிக்கு தினசரி ரயில் இயக்க வேண்டும் என்று தென் மாவட்ட பயணிகள் மற்றும் பக்தர்கள் கோரிக்கை வைக்கின்றனர். தற்போது, விழுப்புரம் முதல் கன்னியாகுமரி வரை இருவழிப்பாதை பணிகள் முடிவடைந்து, ரயில்கள் வேகமாக இயக்கப்படுகின்றன. மேலும், நாகர்கோவிலில் புதிய பிட்லைன் வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதால், ரயில் பராமரிப்பு பிரச்சினைகளும் இருக்காது. இதுவே கன்னியாகுமரி-திருப்பதி தினசரி ரயில் இயக்குவதற்கு உகந்த நேரமாகும்.
இவ்வாறு கன்னியாகுமரி மாவட்டம் சார்ந்துள்ள தமிழ்நாடு மாநிலம் நகரங்கள் மார்க்கமாக ரயில்களை அறிவித்து நாகர்கோவில் ரயில் நிலையத்தில் உள்ள பிட்லைனில் பராமரிப்பு செய்யமால் போனால் கேரளா மார்க்கமாக செல்லும் ரயில்களை நாகர்கோவிலுக்கு பராமரிப்புக்கு என்று தள்ளிவிடுவார்கள் திருவனந்தபுரம் கோட்ட அதிகாரிகள். இவ்வாறு தான் கன்னியாகுமரி – திப்ருகர் தினசரி பராமரிப்பு , நாகர்கோவில் - ஷாலிமார் வாரம் ஓருமுறை பராமரிப்பு, கொச்சுவெலி -நிலாம்பூர் எக்ஸ் ரயில் நாகர்கோவில் - திருவனந்தபுரம் பயணிகள் ரயிலாக இயக்கி நாகர்கோவிலில் நான்கு நாட்கள் பராமரிப்பு செய்யப்படுகின்றது.
பிரம்மோற்சவ விழாவிற்கு சிறப்பு ரயில்
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஆண்டுதோறும் நடைபெறும் 9 நாள் பிரம்மோற்சவ விழா, இந்த ஆண்டு செப்டம்பர் 24 முதல் அக்டோபர் 2, 2025 வரை நடைபெறுகிறது. அக்டோபர் 1-ம் தேதி காலை 7 மணிக்கு தேர்த்திருவிழா (மரத் தேரோட்டம்), இரவு 7 மணிக்கு குதிரை வாகன வீதி உலா, மற்றும் அக்டோபர் 2-ம் தேதி காலை 6 முதல் 9 மணி வரை ஸ்ரீவாரி புஷ்கரணியில் சக்கர ஸ்நானம் (தீர்த்தவாரி) நடைபெறும். அதைத் தொடர்ந்து, இரவு 8:30 முதல் 10 மணி வரை கொடியிறக்க விழாவுடன் பிரம்மோற்சவம் நிறைவடையும்.
இந்த 9 நாள் பிரம்மோற்சவ விழாவை முன்னிட்டு, கன்னியாகுமரியிலிருந்து மதுரை, விருத்தாச்சலம், விழுப்புரம், திருவண்ணாமலை வழியாக திருப்பதிக்கு தினசரி சிறப்பு ரயில் இயக்கப்பட வேண்டும். இந்த ரயிலின் வருவாயைப் பொறுத்து, இதனை நிரந்தர தினசரி ரயிலாக அறிவித்து இயக்கலாம்.
தற்போது திருப்பதிக்கு இயக்கப்படும் ரயில்கள் விபரம்
நாகர்கோவிலிருந்து திருப்பதி மார்க்கம்
1. திருநெல்வேலி – பிலாஸ்பூர் வாராந்திர ரயில்(ரெனிகுண்டா); வழி திருவனந்தபுரம், எர்ணாகுளம்
2. நாகர்கோவல் - மும்பை வாரம்(ரெனிகுண்டா) இருமுறை வழி மதுரை, திருச்சி
3. கன்னியாகுமரி – மும்பை தினசரி வழி திருவனந்தபுரம், எர்ணாகுளம்
4. நாகர்கோவில் -காச்சுகுடா வாராந்திர ரயில் வழி மதுரை, நாமக்கல்
5. நாகர்கோவில் - ஷாலிமர் வாராந்திர ரயில் வழி திருவனந்தபுரம், எர்ணாகுளம்
6. கன்னியாகுமரி - ஸ்ரீவைஷ்னதேவிகத்ரா வாராந்திர ரயில் வழி திருவனந்தபுரம், எர்ணாகுளம்
7. கன்னியாகுமரி – திப்ருகர் வாராந்திர ரயில் (ரெனிகுண்டா வரை) வழி திருவனந்தபுரம், எர்ணாகுளம்
திருநெல்வேலியிருந்து திருப்பதி மார்க்கம்
1. திருநெல்வேலி - ஸ்ரீவைஷ்னதேவிகத்ரா வாராந்திர ரயில் வழி மதுரை, திருச்சி
2. திருநெல்வேலி – பிலாஸ்பூர் வாராந்திர ரயில்(ரெனிகுண்டா); வழி திருவனந்தபுரம், எர்ணாகுளம்
3. நாகர்கோவில் - மும்பை வாரம் இருமுறை (ரெனிகுண்டா) வழி மதுரை, திருச்சி
4. நாகர்கோவில் -கச்சிகுடா வாராந்திர ரயில் வழி மதுரை, நாமக்கல்
மதுரையிலிருந்து திருப்பதி மார்க்கம்
1. ராமேஸ்வரம் - ஓக்கா வாராந்திர ரயில்
2. நாகர்கோவல் - மும்பை வாரம்(ரெனிகுண்டா) இருமுறை வழி மதுரை, திருச்சி
3. மதுரை – காச்சுகுடா வாராந்திர ரயில் (பக்காலா வழியாக செல்லும்)
4. நாகர்கோவில் -காச்சுகுடா வாராந்திர ரயில் வழி மதுரை, நாமக்கல்
5. மதுரை – குர்லா மும்பை வாராந்திர ரயில் (ரெனிகுண்டா)
6. ராமேஸ்வரம் - திருப்பதி வாரம் மூன்று நாட்கள்
7. திருநெல்வேலி - ஸ்ரீவைஷ்னதேவிகத்ரா வாராந்திர ரயில் வழி மதுரை, திருச்சி
இந்த ரயில்களில் ராமேஸ்வரம் - திருப்பதி ரயில் மட்டுமே திருப்பதி பக்தர்கள் பயன்பாட்டிற்காக வாரம் மூன்று முறை இயக்கப்படும் ரயில் ஆகும். மற்ற ரயில்கள் அனைத்தும் நீண்ட துர ரயில்களாக இருப்பதால் நாய்க்கு பிஸ்கட் போட்டது போல் சுமார் 25 முதல் 50 இருக்கைகள் மட்டுமே திருப்பதிக்கு கோட்டாவாக ஒதுக்கீடு உள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நாட்டில் அமைதி நிலைத்து, ஒற்றுமை மலரட்டும்: விஜய் வசந்த் எம்.பி., வாழ்த்து!
வியாழன் 4, செப்டம்பர் 2025 12:34:05 PM (IST)

மதுரை-குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரயில் பகுதி நேர ரத்து: தெற்கு ரயில்வே அறிவிப்பு
வியாழன் 4, செப்டம்பர் 2025 12:18:59 PM (IST)

வரலாறு காணாத ஜிஎஸ்டி வரி குறைப்பு: மத்திய அரசுக்கு நயினார் நாகேந்திரன் நன்றி
வியாழன் 4, செப்டம்பர் 2025 12:05:54 PM (IST)

திருச்செந்தூர் கோயிலில் பிரேக் தரிசனம் முறை: செப்.11க்குள் ஆட்சேபணைகள் தெரிவிக்கலாம்!
வியாழன் 4, செப்டம்பர் 2025 10:36:03 AM (IST)

அமெரிக்க உணவு பொருட்களை புறக்கணிக்க முடிவு: தமிழக ஓட்டல் உரிமையாளர்கள் அறிவிப்பு
புதன் 3, செப்டம்பர் 2025 3:52:34 PM (IST)

குடியரசுத் தலைவர் முர்மு தமிழகம் வருகை : ஆளுநர், துணை முதல்வர், அமைச்சர்கள் வரவேற்பு
புதன் 3, செப்டம்பர் 2025 3:41:23 PM (IST)
