» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

இலங்கை அதிபரின் கச்சத்தீவு குறித்த பேச்சு இருநாட்டு உறவுக்கு எதிரானது : முத்தரசன்

செவ்வாய் 2, செப்டம்பர் 2025 11:32:38 AM (IST)

இலங்கை அதிபரின் கச்சத்தீவுப் பயணம், மற்றம் அவரது பேச்சு தமிழக மீனவர்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பையும், பதற்றத்தையும் உருவாக்கியுள்ளது என்று இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் இரா.முத்தரசன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் "இலங்கை அதிபர் அனுரகுமார திசநாயகே கச்சத்தீவுக்கு இருநாள் பயணம் மேற்கொண்டு, அங்கு கடற்படை அதிகாரிகளுடன் கச்சத்தீவு தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நடத்தியுள்ளார். இதனைத் தொடர்ந்து "கச்சத்தீவு இலங்கைக்கு உரியது, அதை யாருக்கும் விட்டுக் கொடுக்க முடியாது” என கூறியுள்ளார். அனுர குமாராவின் இந்தப் பேச்சு இந்தியா - இலங்கை நல்லுறவுக்கு வலுச்சேர்க்காது. மாறாக இந்தியாவை குறிப்பாக தமிழ்நாட்டு மக்களை ஆத்திரமூட்டும் செயலாக அமைந்துள்ளது.

கச்சதீவு மீட்கப்பட வேண்டும் என தமிழ்நாடு அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றது. தமிழ்நாட்டின் கோரிக்கை நியாயமானது என்பதை அரை நூற்றாண்டுக்கும் மேலான அனுபவம் உணர்த்தியுள்ளது. தமிழ்நாட்டின் கடலோரப் பகுதிகளிலிருந்து கடலுக்கு மீன் பிடிக்க செல்லும் தமிழக மீனவர்கள் மீது, இலங்கை கடற்படையினரும், கடல் கொள்ளையர்களும் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றனர்.அண்மைக்காலமாக தாக்குதல் நடத்துவதுடன் தமிழக மீனவர்களை கைது செய்து, அவர்கள் வசமிருக்கும் மீன்கள், வலைகள், படகுகள் உள்ளிட்ட உபகரணங்களை பறிமுதல் செய்து, இலங்கை அரசு உரிமை கொண்டாடுவதும் அதிகரித்து வருகிறது.

இந்த நிலையில் இலங்கை அதிபர் அனுர குமார திசநாயகே "இந்திய மீனவர்கள், இலங்கை கடல் பகுதிக்குள் மீன் பிடித்து சிக்கினால், அவர்களை எளிதாக விட மாட்டோம். பிடிபடும் படகுகளை திருப்பித் தர மாட்டோம். அது இலங்கைக்கே சொந்தமாகும்" என்று கூறியிருப்பது அதிகார ஆணவத்தின் உச்சமாகும். இலங்கை அதிபரின் கச்சத்தீவுப் பயணம், கச்சத்தீவு மற்றும், தமிழக மீனவர்கள் குறித்த அவரது அணுகுமுறை தமிழக மீனவர்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பையும், பதற்றத்தையும் உருவாக்கியுள்ளது என்பதை மத்திய அரசின் வெளியுறவுத்துறை அமைச்சகம் கருத்தில் கொள்ள வேண்டும்.

இலங்கை அரசால் கைது செய்யப்பட்டுள்ள மீனவர்களை நிபந்தனையின்றி விடுதலை செய்யவும், அவர்களிடம் பறிமுதல் செய்யப்பட்ட பொருள்களை சேதாரம் இல்லாமல் திருப்பி வழங்கவும், இந்திய மீனவர்கள், குறிப்பாக தமிழக மீனவர்களின் வாழ்வாதரம் பாதுகாக்கப்படவும், கச்சத்தீவு மீட்கப்பட்டு இந்தியாவின் கடல் பரப்பியல் எல்லை உரிமை நிலை நாட்டப்படவும் ஒன்றிய அரசு பொருத்தமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ்நாடு மாநிலக் குழு மத்திய அரசை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads






Tirunelveli Business Directory