» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

முன்னெச்சரிக்கை நடவடிக்கையுடன் பயிர்களை பயிரிட வேண்டும் : ஆட்சியர் க.இளம்பகவத்.

வியாழன் 18, செப்டம்பர் 2025 4:35:38 PM (IST)



விவசாய பெருமக்கள் பருவமழை காலகட்டத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையுடன் பயிர்களை பயிரிட வேண்டும் என்று தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத் தெரிவித்தார். 

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இன்று (18.09.2025) மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத்.   தலைமையில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில்  ஆட்சியர் தெரிவித்ததாவது : விவசாயிகளின் குறைகளை களையும் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் இன்றையதினம் நடைபெறுகிறது. தென்மேற்கு பருவமழை தீவிரமாக பெய்து வருவதுடன் வடகிழக்கு பருவமழையும் தீவிரமாக அமையும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. 

விவசாய பெருமக்கள் முக்கியமாக இந்த காலகட்டத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையுடன் பயிர்களை பயிரிட வேண்டும். விவசாயத்தை பொறுத்தவரையில் பருவமழைக்கு ஏற்ற முறையில் பயிரிடப்படுகிறது. வேளாண்மைக்கான காலநிலை காரணிகளை தேர்வு செய்ய வேண்டும். குறிப்பாக அதிகமாக மழையினால் பாதிக்கப்படக்கூடிய பயிர் வகைகளை பயிரிடுவதை தவிர்க்கலாம். பருவமழை தாக்கத்திற்கு முன்பு பயிர்களை அறுவடை செய்யலாமா? அல்லது கால தாமதமாக பயிர்களை பயிரிட்டு பருவமழையை தவிர்க்கலாமா? என்பதை சிந்திக்க வேண்டும். 

நமக்கு டிசம்பர் மாதத்தில் பெய்கின்ற பருவமழையை கணக்கீட்டு பயிர்களை பாதுகாப்பது குறித்து சிந்திக்கலாம். இயல்பாக திட்டமிடுகின்ற  பருவமழையை காட்டிலும் அதிகமாக பெய்கின்ற பொழுது டிசம்பர் மாதத்தில் எந்த அளவிற்கு பாதிப்பு இருக்கும்? அல்லது பருவமழையால் பாதிக்கப்படுமா? பாதிக்கப்படாதா? என்பவற்றையெல்லாம் கணக்கீடு செய்து நீங்கள் விவசாயம் செய்ய வேண்டும். இந்த ஆண்டுக்கான மழை தமிழ்நாடு முழுவதும் அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக 2023 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் நாம் பெரிய அளவிலான வெள்ளத்தை சந்தித்தோம். 

அதுபோன்ற சூழ்நிலைகள் வராதபடிக்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளான வெள்ளத் தடுப்பு பணிகளை பொதுப்பணித்துறை, நீர்வளத்துறை மற்றும் ஊரக வளர்ச்சித் துறை உள்ளிட்ட பிற துறைகளுடன் இணைந்து திட்டமிடுதல் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. எந்தப்பகுதியிலும் குளங்களின் கரைகள் உடையாத வகையில் நடவடிக்கைகள் எடுக்க முன்கூட்டி திட்டமிடப்பட்டு வருகிறது.

எங்கெல்லாம் இதுபோன்ற சிக்கல்கள் நிலவுகின்றதோ, அதனை விவசாயிகள் குறிப்பிடுகின்ற பொழுது, அவற்றில் தனிக்கவனம் செலுத்தி, குளங்கள் மற்றும் நீர்நிலைகளில் முழுமையாக வெள்ளப்பெருக்கு போன்ற சூழ்நிலைகள் ஏற்படாமல் அவற்றை பாதுகாப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும். 

இதற்காக விவசாய சங்கங்கள் தங்களுக்குள் கலந்தாலோசனை செய்து, எந்தப் பகுதியில் உள்ள குளங்கள் இதுபோன்ற சிக்கல்களில் உள்ளதோ அந்தப்பகுதியில் உள்ள உதவி பொறியாளர், உதவி செயற்பொறியாளர் ஆகியோர்களிடம் தகவல் தெரிவிக்கும்பட்சத்தில், அதற்கான தடுப்பு பணிகளை மேற்கொள்வதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும். அனைவரும் சேர்ந்து இதனை எதிர்கொள்ளுகின்ற பொழுது, இதுபோன்ற பெரிய வெள்ளம் மற்றும் மழையினை எதிர்கொள்ள முடியும். இந்த ஆண்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பயிர்களை பாதுகாப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். பாரம்பரிய நெல் மற்றும் அரிசி பயன்படுத்துதல் இந்த காலகட்டத்தில் அதிகரித்துள்ளது. 

பாரம்பரிய அரிசி போன்ற பொருட்களை வாங்கி பயன்படுத்திக் கொள்ள வேண்டும். பாரம்பரிய மற்றும் இயற்கை முறையில் விவசாயம் செய்கின்ற விவசாயிகள் தங்களுக்குள் நெட்வொர்க் அமைப்பினை ஏற்படுத்திக் கொண்டு சந்தைப்படுத்துதலை மென்மேலும் விரிவுப்படுத்திக் கொள்ள வேண்டும். அதற்கான முயற்சிகளுக்கு உதவி செய்வதற்காக வேளாண் துறை சார்ந்த அலுவலர்களை அணுகலாம். எனவே, பாரம்பரிய அரிசி போன்ற பொருட்களை வாங்கி பயன்படுத்திக் கொண்டு, தொடர்ந்து அதற்காக ஆதரவளிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத்,   தெரிவித்துள்ளார்.

இக்கூட்டத்தில் இணை இயக்குநர் (வேளாண்மை) பெரியசாமி, இணை பதிவாளர் (கூட்டுறவு சங்கங்கள்) ராஜேஷ், உதவி ஆட்சியர் (பயிற்சி) தி.புவனேஷ் ராம்,  செயற்பொறியாளர் (கீழ்தாமிரபரணி மற்றும் கோரம்பள்ளம் வடிநிலக் கோட்டம்) தங்கராஜ், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) மோகன்தாஸ் சௌமியன், அரசு அலுவலர்கள் மற்றும் விவசாய பெருமக்கள் பலர் கலந்து கொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads






Tirunelveli Business Directory