» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
தன் மகளை விட நன்றாக படித்த மாணவனை கொன்ற பெண்ணுக்கு ஆயுள் தண்டனை!
வெள்ளி 24, அக்டோபர் 2025 8:43:22 AM (IST)

தன் மகளை விட நன்றாக படித்த பொறாமையில் 8-ம் வகுப்பு மாணவனுக்கு விஷம் கொடுத்து கொலை செய்த பெண்ணுக்கு ஆயுள் தண்டனை விதித்து காரைக்கால் கோர்ட்டு தீர்ப்பளித்தது.
காரைக்கால் நேரு நகரை சேர்ந்தவர் ராஜேந்திரன். ரேஷன் கடை ஊழியர். இவரது மனைவி மாலதி. இவர்களுடைய மகன் பாலமணிகண்டன் (13) கோட்டுச்சேரியில் உள்ள தனியார் பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்தான். கடந்த 2.9.2022 அன்று பள்ளி ஆண்டு விழா ஒத்திகையில் கலந்துகொண்ட மாணவன் மதியம் வீட்டுக்கு சென்றான். அப்போது தாய் மாலதியிடம் பள்ளி காவலாளியிடம் என்ன குளிர்பானம் கொடுத்தீங்க? அதை குடித்ததில் இருந்து மயக்கமா வருது என கூறினான்.
ஆனால் மாலதி, நான் ஒன்றும் கொடுக்கவில்லை என கூறினார். சிறிது நேரத்தில் பாலமணிகண்டன் வாந்தி எடுத்தான். இதனால் பதறிப்போன மாலதி காரைக்கால் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று, பரிசோதித்த போது மாணவன் குடித்த குளிர்பானத்தில் விஷம் கலந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. தொடர்ந்து மாணவனுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி பாலமணிகண்டன் பரிதாபமாக உயிரிழந்தான்.
இது குறித்து மாலதி அளித்த புகாரின்பேரில் காரைக்கால் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். பள்ளியில் பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தபோது, பாலமணிகண்டனுடன் படிக்கும் சக மாணவியின் தாய் சகாயராணி விக்டோரியா (46) என்பவர் பள்ளி காவலாளியிடம் குளிர்பானம் கொடுத்து, அதனை பாலமணிகண்டனிடம் கொடுக்குமாறு கூறியது தெரியவந்தது.
இதையடுத்து நேருநகர் வீட்டில் இருந்த விக்டோரியாவை பிடித்து போலீசார் விசாரித்தபோது மாணவன் கொலைக்கான அதிர்ச்சி தகவல் தெரியவந்தது. தனது மகளை விட பாலமணிகண்டன் படிப்பு மற்றும் கலைநிகழ்ச்சிகளில் சிறப்பாக செயல்படுவதால் அவன் மீது சகாயராணிக்கு பொறாமை இருந்துள்ளது.
எனவே சம்பவத்தன்று சயனைடு மற்றும் எலி மருந்தை குளிர்பானத்தில் கலந்து, அதனை பள்ளி காவலாளி மூலம் பாலமணிகண்டனிடம் குடிக்க கொடுத்திருக்கிறார். அதனை குடித்த மாணவன், உடல்நலக்குறைவு ஏற்பட்டு பரிதாபமாக இறந்துபோனது விசாரணையில் தெரியவந்தது.
இதையடுத்து சகாயராணி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இந்த வழக்கு காரைக்கால் கோர்ட்டில் நடைபெற்று வந்தது. சாட்சிகள் விசாரணை முடிவடைந்த நிலையில் நேற்று தீர்ப்பு கூறப்பட்டது. மாணவன் கொலையில் சகாயராணி விக்டோரியா மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டதால் அவருக்கு ஆயுள் தண்டனை மற்றும் ரூ.20 ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி மோகன் உத்தரவிட்டார். இந்த தீர்ப்பை கேட்டு மாணவனின் பெற்றோர், மகனின் சாவுக்கு நீதி கிடைத்துவிட்டதாக கண்ணீர்மல்க தெரிவித்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

வெள்ள அபாய அளவை எட்டிய பேச்சிப்பாறை அணை : கரையோர மக்களுக்கு எச்சரிக்கை!
வெள்ளி 24, அக்டோபர் 2025 5:36:20 PM (IST)

தூத்துக்குடியில் குளம் போல மாறிய அரசுப் பள்ளி : பொதுப்பணித்துறை அதிகாரிகள் அலட்சியம்
வெள்ளி 24, அக்டோபர் 2025 5:15:54 PM (IST)

வங்கக்கடலில் புயல்: சென்னை உள்பட 3 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை!
வெள்ளி 24, அக்டோபர் 2025 4:48:53 PM (IST)

வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை பணிகள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை
வெள்ளி 24, அக்டோபர் 2025 4:17:41 PM (IST)

காற்றழுத்த தாழ்வு பகுதி புயலாக வலுவடைந்தது : சென்னையில் கனமழைக்கு வாய்ப்பு!
வெள்ளி 24, அக்டோபர் 2025 12:54:33 PM (IST)

தமிழ்நாட்டில் பள்ளிகளில் மாணவர் இடைநிற்றல் விகிதம் அதிகரிப்பு : யு.டி.ஐ.எஸ்.இ. தகவல்
வெள்ளி 24, அக்டோபர் 2025 11:55:14 AM (IST)




