» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

தமிழ்நாட்டில் பள்ளிகளில் மாணவர் இடைநிற்றல் விகிதம் அதிகரிப்பு : யு.டி.ஐ.எஸ்.இ. தகவல்

வெள்ளி 24, அக்டோபர் 2025 11:55:14 AM (IST)

தமிழ்நாட்டில் 2024-25-ம் ஆண்டு பள்ளிகளில் மாணவர் இடைநிற்றல் விகிதம் அதிகரித்துள்ளதாக மத்திய கல்வி அமைச்சகத்தின் ஆய்வில் தெரியவந்துள்ளது.

தமிழ்நாட்டில் 37,626 அரசு பள்ளிகள், 8,254 அரசு உதவி பெறும் பள்ளிகள், 11,890 தனியார் பள்ளிகள், 165 இதர பள்ளிகள் என மொத்தம் 57 ஆயிரத்து 935 பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. இந்த பள்ளிகளில் ஒரு கோடியே 25 லட்சத்து 18 ஆயிரத்து 167 மாணவ-மாணவிகள் படித்து வருகிறார்கள். ஒட்டுமொத்த இந்தியாவில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் 100 சதவீதம் மாணவர் சேர்க்கை விகித இலக்கை அடைய மத்திய அரசு பாடுபட்டு வருகிறது.

தமிழ்நாடு அரசின் பள்ளிக்கல்வித் துறையும் அதே முனைப்பை காட்டுகிறது. மத்திய அரசு 2030-ம் ஆண்டுக்குள் இடைநிற்றல் இல்லாமல் 100 சதவீதம் மாணவர் சேர்க்கை என்ற இலக்கை எப்படியாவது எட்டிப்பிடித்து விட வேண்டும் என்ற முயற்சியில் மத்திய அரசு பணியாற்றி வரும் சூழலில், குழந்தைகளின் பள்ளி இடைநிற்றல் தொடர்ந்து ஒரு தடையாகவே இருந்து வருகிறது.

இந்திய அளவில் தொடக்கப்பள்ளிகளில் (1 முதல் 5-ம் வகுப்பு வரை) 0.3 சதவீதமும், நடுநிலைப் பள்ளிகளில் (6 முதல் 8-ம் வகுப்பு வரை) 3.5 சதவீதமும், உயர்நிலைப் பள்ளிகளில் (9, 10-ம் வகுப்புகள்) 11.5 சதவீதமும் இடைநிற்றல் விகிதம் இருந்து வருகிறது. இது கடந்த 2024-25-ம் ஆண்டுக்கான மத்திய கல்வி அமைச்சகத்தின் கீழ் வரக்கூடிய ஒருங்கிணைந்த மாவட்ட தகவல் அமைப்பு (யு.டி.ஐ.எஸ்.இ.) வெளியிட்ட தகவலில் இடம் பெற்று இருக்கிறது.

அந்த பட்டியலில், தமிழ்நாட்டில் தொடக்கப்பள்ளிகளில் 2.7 சதவீதமாக இருக்கிறது. நடுநிலைப்பள்ளியில் 2.8 சதவீதமாகவும், உயர்நிலைப்பள்ளியில் 8.5 சதவீதமாகவும் உள்ளது. மற்ற மாநிலங்களை ஒப்பிடும்போது இடைநிற்றல் விகிதத்தில் தமிழ்நாடு ஓரளவுக்கு முன்னேற்றம் என்று பார்த்தாலும், அதற்கு முந்தைய ஆண்டுடன் (2023-24) பார்க்கையில் இடைநிற்றல் விகிதம் அதிகரித்திருப்பதை பார்க்க முடிகிறது.

கடந்த 2023-24-ம் ஆண்டு மத்திய அரசின் புள்ளி விவரங்களில் தமிழ்நாடு தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் இடைநிற்றல் விகிதம் ‘பூஜ்ஜியம்' என்ற நிலையிலும், உயர்நிலைப்பள்ளிகளில் 7.7 சதவீதமாகவும் இருந்தது. இதனை அடிப்படையாக கொண்டு இடைநிற்றலே இல்லை என பள்ளிக்கல்வித் துறை சொல்லி வந்தது. 

ஆனால் 2024-25-ம் ஆண்டு புள்ளி விவரத்தில் இடைநிற்றல் விகிதம் அதிகரித்து இருக்கிறது. இடைநிற்றல் விகிதத்தை பொறுத்தவரையில், ஒரு ஆண்டு குறைவதும், அதற்கு அடுத்த ஆண்டு இடைநிற்றல் விகிதம் அதிகரிப்பதும் தமிழ்நாட்டில் தொடருகிறது. அந்த வரிசையில் 2023-24-ம் ஆண்டு குறைந்து, 2024-25-ம் ஆண்டு அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது. 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads






Tirunelveli Business Directory