» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
தூத்துக்குடியில் சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தம் பணிகள் துவக்கம்: ஆட்சியர் இளம்பகவத் ஆய்வு!
செவ்வாய் 4, நவம்பர் 2025 5:19:20 PM (IST)

தூத்துக்குடியில் சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தம் தொடர்பாக வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் வீடு வீடாக சென்று கணக்கெடுப்பு நடவடிக்கையில் ஈடுபடுவதை மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சியர் இளம்பகவத் பார்வையிட்டார்.
சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தம் 2026ஐ முன்னிட்டு தூத்துக்குடி மற்றும் ஒட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிகளில் நியமனம் செய்யப்பட்டுள்ள வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் வீடு வீடாக சென்று கணக்கெடுப்பு நடவடிக்கையில் ஈடுபடுவதை மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத், இன்று (04.11.2025) பார்வையிட்டு தெரிவித்ததாவது :
இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, இன்றையதினம் தூத்துக்குடி மாவட்டத்தில் சிறப்பு தீவிர வாக்காளர் திருத்தப் பணிகள் இன்று (04.11.2025) முதல் 04.12.2025 (வியாழக்கிழமை) வரை நடைபெறவுள்ளது. நமது மாவட்டத்தில் உள்ள ஆறு சட்டமன்ற தொகுதிகளிலும் இந்த சிறப்பு திருத்தப் பணிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன. இதற்கான படிவங்களை வாக்காளர்களுக்கு வழங்கும் பணியை இன்று காலையிலிருந்து அனைத்து வாக்குச் சாவடி நிலை அலுவலர்களும் வழங்கத் தொடங்கியுள்ளனர்.
இன்று தூத்துக்குடி சட்டமன்ற தொகுதியில் உள்ள 2,87,477 வாக்காளர்களுக்கும், ஒட்டப்பிடாரம் (தனி) சட்டமன்ற தொகுதியில் உள்ள 2,55,197 வாக்காளர்களுக்கும் படிவம் வழங்கப்பட்டு, சிறப்பு திருத்தப் பணிகள் நடைபெறுவதை நான் பார்வையிட்டேன். இந்த பணியில், நமது மாவட்டத்தில் இருக்கக்கூடிய 14 லட்சத்து 90 ஆயிரத்து 657 வாக்காளர்களுக்கும் S.I.R-க்கான படிவம் வழங்கப்பட உள்ளது.
இந்த படிவத்தை பெற்றுக்கொண்டு அதில் இருக்கக்கூடிய விவரங்களை பூர்த்தி செய்வதற்கான வழிவகைகளை அவர்களுக்கு சொல்லித் தருவோம். அதற்கான உதவிகளையும் அனைத்து வாக்குச் சாவடி நிலை அலுவலர்களும் செய்வார்கள். அது மட்டுமல்லாது, அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளை சேர்ந்த முகவர்களும் (Agents) உதவி செய்வதற்கு தேர்தல் ஆணையம் வழிவகை செய்துள்ளது.
எனவே, இந்த தகவல்களை எல்லாம் பூர்த்தி செய்ததற்கு பிறகு, அதை அனைத்து வாக்குச் சாவடி நிலை அலுவலர்களும் இப்படிவத்தை சேகரித்துக் கொள்வார்கள். ஒருவேளை வீட்டில் இல்லையென்றால், மூன்று முறை வீட்டிற்கு செல்வார்கள். எப்படியாவது ஒரு முறையாகிலும் அவர்களுக்குக் படிவத்தை வழங்கி அதனை பூர்த்தி செய்து பெறுவதற்கான முழு நடவடிக்கைகளிலும் ஈடுபட்டு வருகிறோம்.
ஒரு மாதம் இந்த பணிகள் தொடர்ந்து நீடிக்கும். ஒரு மாதம் நிறைவு பெற்றதற்கு பிறகு, வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும். அந்த வரைவு வாக்காளர் பட்டியலில் யார் யாரெல்லாம் இதில் இருக்கிறார்கள், இல்லை என்ற விவரங்கள் எல்லாம் அதில் முழுமையாக தெரிய வரும். இதில், படிவம் பூர்த்தி செய்து கொடுத்தவர்களில், ஏதாவது படிவங்களில் கேள்வி எழுப்ப வேண்டும் என்று வாக்குப்பதிவு அலுவலர் (E.R.O) கருதும், அந்த நேர்வுகளில் மட்டும் அவர்களுக்கு ஒரு நோட்டீஸ் வழங்குவார்கள்.
அவர்களுடைய பெயர்களை நீக்கலாமா, வேண்டாமா என்பது குறித்து கருத்து கேட்பதற்காக நோட்டீஸ் வழங்குவார்கள். அதற்கான ஆவணங்கள், விளக்கங்களை எல்லாம் சொன்னார்கள் என்றால், அதை ஏற்றுக்கொண்டு, அதற்கு தகுந்த மாதிரியான முடிவுகளை வாக்குப்பதிவு அலுவலர்கள் எடுப்பார்கள். தற்போது தேர்தல் ஆணையம் நமக்கு உத்தரவிட்டுள்ள பணி இது ஆகும்.
அந்த பணிகளை ஒவ்வொரு தொகுதியில் இருக்கக்கூடிய வாக்குப்பதிவு அலுவலர்கள் (ELECTORAL REGISTRATION OFFICERS) முன்னின்று, அவர்களுடைய தலைமையின் கீழ் ஒவ்வொரு தொகுதிக்கும் உதவி வாக்குப்பதிவு அலுவலர்கள் (ASSISTANT ELECTORAL REGISTRATION OFFICERS), வட்டாட்சியர்கள் மற்றும் உதவி ஆணையர் நிலையிலான அலுவலர்கள் செயல்படுகிறார்கள். அவர்களுக்கு கீழ் கண்காணிப்பாளர்களும், அவர்களுக்கு கீழ் ஒவ்வொரு வாக்குச்சாவடிக்கும் ஒவ்வொரு வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் இருக்கிறார்கள். ஆகவே, அந்த பணிகள் எல்லாம் முழுமையாக இன்று தொடங்கப்பட்டு, எல்லா இடங்களிலும் நடைபெற்று வருகிறது.
எவ்வளவு படிவங்கள் வழங்கப்படுகின்றன, எவ்வளவு படிவங்கள் மூலம் வாக்காளர்கள் சேர்ந்திருக்கின்றனர்? என்ற விவரங்கள் எல்லாம் இணையதளம் மூலம் கண்காணிப்பதற்கான சாப்ட்வேர் அப்ளிகேஷன்ஸ் இந்திய தேர்தல் ஆணையம் வழங்கியிருக்கிறது. அதன்படி நாம் அதை வழங்குவதற்கு ஏற்பாடு செய்திருக்கிறோம்.
இப்பணிகளின் மூலம் இந்திய தேர்தல் ஆணையம் சொல்லியிருக்கக்கூடிய வழிமுறைகளின்படி மூன்று விதமான வாக்காளர்கள் இதில் கண்டறியப்பட வாய்ப்பிருக்கிறது. இறந்து போன வாக்காளர்கள், இடம் பெயர்ந்த வாக்காளர்கள் அல்லது ஆப்சென்டி வாக்காளர்கள் அல்லது டபுள் என்ட்ரி வாக்காளர்கள் என இந்த மாதிரியான வாக்காளர்கள் எல்லாம் இதில் கண்டறிவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன.
இந்த படிவத்தை பூர்த்தி செய்து கொடுக்கின்ற பொழுது, இதில் அதிக நபர்கள் இடம் பெயர்ந்த வாக்காளர்கள் இருக்கும்பட்சத்தில், அவர்களை கண்டறிந்து, அவர்களுக்கு நமது மாவட்டத்தில் ஓட்டு இங்கு இருக்கிறது? அல்லது வேற இடத்தில் இருக்கிறதா? என்பதை கண்டறிந்து அதன் மீது மேல் நடவடிக்கை எடுப்பதற்கான ஒரு வழிவகை இதன்மூலம் கிடைக்கும். நமது மாவட்டத்தில் 1600-க்கும் மேல் வாக்குச் சாவடிகள் இருக்கின்றன.
ஒவ்வொரு வாக்குச்சாவடிக்கும் ஒரு வாக்குச்சாவடி பணியாளர் மற்றும் ஒவ்வொரு 15 பேருக்கும் ஒரு கண்காணிப்பாளர் இருக்கிறார்கள். 2200-க்கும் மேற்பட்ட பணியாளர்கள் இந்த பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும், இதில் குளறுபடிகள் நடப்பதற்கான வாய்ப்புகள் மிக குறைவு. ஏனென்றால், நாம் படிவங்களை எல்லாம் முழுமையாகக் கொடுத்து, அந்த படிவங்களை பூர்த்தி செய்வதற்கான முழுமையான பயிற்சிகளையும் வாக்குச் சாவடி நிலை அலுவலர்களுக்கு வழங்கப்பட்டிருக்கிறது. இதில் மிக முக்கியமாக பங்களிக்கக்கூடிய அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினுடைய ஏஜென்டுகள் அனைவருக்கும் இந்தப் பயிற்சி அளிக்கப்பட்டிருக்கிறது.
எனவே, அவர்களும் அந்தப் பணிகளில் முழுமையாக ஈடுபட்டு, படிவங்களை பூர்த்தி செய்து கொடுப்பதற்கான எல்லா விதமான உதவிகளையும் செய்வதற்கு, அவர்களும் தயாராகி வருகிறார்கள். பெரும்பாலான வாக்காளர்கள் உடனடியாக இந்தப் படிவங்களை எல்லாம் பூர்த்தி செய்து, வாக்குச்சாவடி நிலை அலுவலர்களிடம் கொடுத்து விடுவார்கள் என்று எதிர்பார்க்கிறோம்.
தற்பொழுது படிவங்களை வாக்காளர்களிடம் கொடுத்து அதனை பூர்த்தி செய்து வாங்குகிறோம். அதன் பின்னர், கணினியில் பதிவு செய்ய, டிஜிட்டலைசேஷன் பணிகள் நடைபெறும். இச்சிறப்பு தீவிர திருத்தப் பணியின் போது வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுக்கு வாக்காளர்கள் முழு ஒத்துழைப்பு வழங்கமாறு மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத், தெரிவித்தார்.
இந்நிகழ்வில் தூத்துக்குடி மாநகராட்சி ஆணையாளர் சி.ப்ரியங்கா, உதவி ஆட்சியர் (பயிற்சி) தி.புவனேஷ் ராம், ஒட்டப்பிடாரம் வாக்காளர் பதிவு அலுவலர் / உதவி ஆணையர் (கலால்) கல்யாணகுமார், வட்டாட்சியர்கள் திருமணி ஸ்டாலின் (தூத்துக்குடி), சண்முகவேல் (ஒட்டப்பிடாரம்), தேர்தல் துணை வட்டாட்சியர் ஜெயராஜ் (தூத்துக்குடி) மற்றும் துறைச் சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

வாக்குரிமையை பாதுகாக்க வேண்டியது நம் கடமை: விஜய் வசந்த் எம்.பி அறிக்கை
செவ்வாய் 4, நவம்பர் 2025 9:25:05 PM (IST)

ஜாய் கிரிசில்டா குழந்தைக்கு நான்தான் தந்தை: ஒப்புக்கொண்டார் மாதம்பட்டி ரங்கராஜ்!
செவ்வாய் 4, நவம்பர் 2025 5:53:48 PM (IST)

முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார் அதிமுக எம்எல்ஏ மனோஜ் பாண்டியன்!
செவ்வாய் 4, நவம்பர் 2025 12:34:39 PM (IST)

கோவை பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் அதிகபட்ச தண்டனை: முதல்வர் ஸ்டாலின் உறுதி
செவ்வாய் 4, நவம்பர் 2025 12:14:42 PM (IST)

தமிழகத்தில் 10, 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை: அன்பில் மகேஷ் வெளியிட்டார்
செவ்வாய் 4, நவம்பர் 2025 11:34:19 AM (IST)

கோவையில் மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கு: 3 பேரை சுட்டுப் பிடித்த போலீசார்
செவ்வாய் 4, நவம்பர் 2025 10:30:11 AM (IST)




