» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

புதுச்சேரியில் திமுக கூட்டணியில் பிளவு: தனித்துப் போட்டியிட திருமாவளவன் முடிவு

செவ்வாய் 24, மார்ச் 2026 10:52:06 AM (IST)

புதுச்சேரியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனித்துப் போட்டியிடும் என்று அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் அறிவித்துள்ளார். 

புதுச்சேரி மாநிலத்தில் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி கடந்த பல ஆண்டுகளாக அங்கம் வகித்து சட்டப்பேரவைத் தேர்தல்களை சந்தித்து வருகிறது. 2001 ஆம் ஆண்டு இரண்டு தொகுதிகளில் திமுக தலைமையிலான -கூட்டணியில் போட்டியிட்டோம். கடந்த 2021 ஆம் ஆண்டு தேர்தலில் உழவர்கரை பொதுத் தொகுதியை மட்டுமே காங்கிரஸ் ஒதுக்கியது. கூட்டணிக்கு நெருக்கடி வரக்கூடாது என்ற வகையில் அப்போது அதனை ஏற்றுக்கொண்டு போட்டியிட்டோம். ஆனால், கூட்டணிக் கட்சிகளின் ஒத்துழைப்பு கிடைக்கவில்லை. எனினும், சுமார் 6 ஆயிரம் வாக்குகளுக்கு மேலாக பெற்றோம்.

தற்போது நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி 3 தொகுதிகளைக் கோரியிருந்தது. நீண்ட இழுபறிக்குப் பின்னர் வேட்புமனுத் தாக்கல் முடிந்த பிறகே காங்கிரஸ் கட்சிக்கும் திமுகவுக்கும் இடையிலான தொகுதி எண்ணிக்கை முடிவு செய்யப்பட்டுள்ளது. கூட்டணியில் அதிக இடங்களில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சி மற்ற கூட்டணிக் கட்சிகளுக்குத் தொகுதிகளை ஒதுக்க முன் வரவில்லை. திமுக தரப்பிலிருந்து ஒரு தொகுதியை விசிகவுக்கு ஒதுக்க முன்வந்துள்ளது. இருந்த போதிலும் வேட்பு மனு தாக்கல் முடிந்த பிறகும் கூட அது எந்தத் தொகுதி என்பது இன்னும் உறுதியாகவில்லை.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, சிபிஐ வேட்பு மனு தாக்கல் செய்துள்ள தொகுதிகள் அனைத்திலும் காங்கிரஸ் கட்சியும் வேட்புமனு தாக்கல் செய்துள்ளது. விசிக'வுக்கு இதுவரை எந்தத் தொகுதி என்பதே தெரியாத நிலையில் எமது கட்சி நிர்வாகிகள் தேவையற்ற மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர்.

எனவே, விசிக சார்பில் தற்போது வேட்புமனுத் தாக்கல் செய்துள்ள ஊசுடு, நெட்டப்பாக்கம் மற்றும் உழவர்கரை ஆகிய மூன்று தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிட முடிவு செய்துள்ளோம். நாங்கள் போட்டியிடாத மற்ற தொகுதிகளில் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவு அளிக்கப்படும் . இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads



Tirunelveli Business Directory