» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
குருவாயூர் எக்ஸ்பிரஸில் நகை வியாபாரியிடம் 1½ கிலோ தங்க நகைகள் கொள்ளை!
ஞாயிறு 17, மே 2026 11:33:58 AM (IST)
கேரளாவிலிருந்து நெல்லை நோக்கி வந்த குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரயிலில், தூங்கிக் கொண்டிருந்த நகை வியாபாரியைக் குறிவைத்து, அவரிடமிருந்த 1 கிலோ 400 கிராம் எடையுள்ள தங்க நகைகளைப் பையுடன் கொள்ளையடித்துச் சென்ற மர்ம நபரை போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டம் ஒல்லூர் பகுதியைச் சேர்ந்தவர் ஜோஸ் (52). இவர் திருநெல்வேலி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள பிரபல நகைக்கடைகளில் இருந்து தங்கக் கட்டிகளை வாங்கிச் சென்று, அவற்றை நேர்த்தியான நகைகளாக வடிவமைத்து மீண்டும் அந்தந்த கடைகளுக்கே கொண்டு வந்து ஒப்படைக்கும் தொழில் செய்து வருகிறார். அதன்படி, நெல்லைக் கடைகளில் ஆர்டர் செய்யப்பட்ட நகைகளை வடிவமைத்து முடித்த ஜோஸ், நேற்று முன்தினம் இரவு 11.15 மணிக்கு குருவாயூரில் இருந்து நெல்லை வழியாகச் சென்னை செல்லும் குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரயிலில் ஏறியுள்ளார்.
அவரிடம் கடைகளில் ஒப்படைப்பதற்காக 1 கிலோ 400 கிராம் எடையுள்ள புதிய தங்க நகைகள் அடங்கிய கைப்பை இருந்தது. ரயில் நேற்று அதிகாலை 7.00 மணி அளவில் கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறை ரயில் நிலையத்தை வந்தடைந்தது. அதுவரை ரயிலில் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த ஜோஸ், திடீரென கண்விழித்துப் பார்த்தபோது தனது அருகில் வைக்கப்பட்டிருந்த விலைமதிப்பற்ற நகைப் பை காணாமல் போயிருப்பது கண்டு நெஞ்சுதுடித்தார்.
உடனடியாக ரயிலின் பெட்டி முழுவதும் தேடியபோது, மர்ம நபர் ஒருவன் ஜோஸின் பையுடன் குழித்துறை ரயில் நிலைய மேடையில் அதிவேகமாக இறங்கித் தப்பியோடுவதைக் கண்டுள்ளார். ஜோஸ் சத்தமிட்டபடி ரயிலில் இருந்து இறங்கி அந்த நபரைப் பிடிக்க முயன்றார். ஆனால், அதற்குள் அந்த மர்ம நபர் ரயில் நிலையக் கூட்ட நெரிசலைப் பயன்படுத்தி மின்னலாக மறைந்துவிட்டார். 1½ கிலோ தங்க நகைகள் கொள்ளைச் சம்பவம் குறித்து ஜோஸ் உடனடியாகக் குழித்துறை ரயில்வே காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
ரயில்வே போலீசார், உடனடியாக மார்த்தாண்டம் சட்டம்-ஒழுங்கு போலீசாருக்கும் தகவல் அளித்தனர்.அதனைத் தொடர்ந்து, தனிப்படை போலீசார் குழித்துறை ரயில் நிலையம் மற்றும் மார்த்தாண்டம் நகரின் முக்கிய எல்லைப் பகுதிகளில் அதிரடித் தேடுதல் வேட்டையில் இறங்கியுள்ளனர். மேலும், ரயில் நிலையப் பிளாட்பாரங்கள் மற்றும் வெளிப்பகுதிகளில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை முழுமையாகக் கைப்பற்றிப் போலீசார் தீவிரமாக ஆய்வு செய்து வருகின்றனர்.
ஜோஸ் பெருமளவிலான நகைகளுடன் ரயிலில் வருவதை முன்கூட்டியே மோப்பம் பிடித்து, திருச்சூரிலிருந்து மர்ம நபர் எவரேனும் அவரைப் பின்தொடர்ந்து வந்து இந்த கைவரிசையைக் காட்டினாரா? அல்லது ரயிலில் ஜோஸ் ஏறியபோது அவரது உடைமைகளை நோட்டமிட்டுச் சமயம் பார்த்து அக்கும்பல் திருடியதா? என்ற பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணையை முடுக்கிவிட்டுள்ளனர். ஓடும் ரயிலில் தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் தென் மாவட்ட ரயில் பயணிகளிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

போதைப்பொருட்களை வைத்திருந்த இளைஞர் கைது: போலீசாரை மிரட்டித் தற்கொலை முயற்சி!
சனி 13, ஜூன் 2026 8:17:56 AM (IST)

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் ஜூன் மாத உண்டியல் வருமானம் ₹4.20 கோடி
சனி 13, ஜூன் 2026 8:12:13 AM (IST)

தூத்துக்குடி மாவட்டத்தில் கூட்டுறவுத்துறை அமைச்சர் வி.காந்திராஜ் ஆய்வு!
வெள்ளி 12, ஜூன் 2026 8:10:10 PM (IST)

ராஜினாமா செய்த 4 எம்எல்ஏக்களுக்கு நோட்டீஸ்: 7 நாளில் விளக்கம் அளிக்க சபாநாயகர் உத்தரவு
வெள்ளி 12, ஜூன் 2026 5:26:53 PM (IST)

திமுக அரசின் சாதனைகள் மீது சோஃபா மாடல் அரசு ஸ்டிக்கர் ஒட்டுகிறது: உதயநிதி ஸ்டாலின் காட்டம்!
வெள்ளி 12, ஜூன் 2026 4:19:26 PM (IST)

திமுக தோல்விக்கு அமைச்சர்களும், அதிகாரிகளுமே காரணம்? மு.க.ஸ்டாலினிடம் அறிக்கை தாக்கல்!
வெள்ளி 12, ஜூன் 2026 4:00:12 PM (IST)


