» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

விஜய் மீது பொறாமை? ஸ்டாலினை சந்தித்தது ஏன்? விமர்சனங்களுக்கு ரஜினி விளக்கம்!

ஞாயிறு 17, மே 2026 8:10:37 PM (IST)

தேர்தல் முடிவுகளுக்குப் பின் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினைச் சந்தித்ததில் எவ்வித அரசியல் உள்நோக்கமும் இல்லை என்று நடிகர் ரஜினிகாந்த் விளக்கம் அளித்துள்ளார்.

சென்னை போயஸ் கார்டனில் உள்ள தனது இல்லத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறுகையில், ""ஸ்டாலின் சாருக்கும் எனக்கும் இடையிலான நட்பு அரசியலுக்கு அப்பாற்பட்டது. அவர் எனது நீண்டகால நண்பர். ஜனநாயகத்தில் தேர்தல் வெற்றி தோல்வி என்பது மிகவும் சகஜமானதுதான். இருப்பினும், இந்தத் தேர்தலில் கொளத்தூர் தொகுதியில் ஸ்டாலின் சார் தோல்வி அடைந்தது எனக்குச் தனிப்பட்ட முறையில் சங்கடமாக இருந்தது. அதனால், ஒரு நண்பன் என்ற முறையில் அவருக்கு ஆறுதல் கூறவே நேரில் சென்று பார்த்தேன்.

அதை விடுத்து, விஜய் முதல்வர் ஆகக்கூடாது, அதிகாரத்திற்கு வரக்கூடாது அதைத் தடுக்கவே நான் அங்கு சென்றேன் என்றும், இரு பெரிய கட்சிகள் இணைய வேண்டும் எனப் பேசப்பட்டதாகவும் பரவிய செய்திகளில் உண்மையில்லை. அந்தச் சூழலில் அப்படியெல்லாம் பேச முடியாது, அப்படித் தரம் தாழ்ந்து பேசக்கூடிய நபர் ரஜினிகாந்த் அல்ல." என்று திட்டவட்டமாகக் கூறினார்.

"விஜய் மீது எனக்கு ஏன் பொறாமை?":

புதிய முதலமைச்சர் விஜய் குறித்துத் தனக்கு பொறாமை இருப்பதாக எழுந்த விமர்சனங்களை முற்றிலும் மறுத்த ரஜினிகாந்த், "நான் அரசியலிலேயே இல்லை. அப்படி இல்லாத சூழலில் தம்பி விஜய் மீது எனக்கு ஏன் பொறாமை வரப்போகிறது? எனக்கும் விஜய்க்கும் இடையே ஒரு தலைமுறை இடைவெளி உள்ளது. நான் விஜய்க்கும், விஜய் எனக்கும் போட்டியிடுவது இருவருக்குமே நல்லது இல்லை என்பதை முன்பே சொல்லியிருக்கிறேன். சிறு வயதில் இருந்தே அவரை நான் பார்த்து வருகிறேன். அவர் முதல்வர் ஆவதில் எனக்கு எப்படிப் பொறாமை வரும்?" என்று கேள்வி எழுப்பினார்.

தொடர்ந்து முதலமைச்சர் விஜய்யின் அரசியல் எழுச்சியைப் பாராட்டிப் பேசிய அவர்: "விஜய் மிகவும் இளம் வயதில் தமிழகத்தின் முதலமைச்சர் ஆகியுள்ளார். சினிமாத்துறையில் இருந்து வந்து தனியொரு ஆளாக, இரு பெரிய திராவிடக் கட்சிகளுக்கு எதிராக நின்று அவர் பெற்றுள்ள இந்த வெற்றி, முந்தைய காலங்களில் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர், என்.டி.ஆர் ஆகியோர் செய்த சாதனைகளை விடப் பெரியது; அது எனக்கு மிகுந்த ஆச்சரியத்தைத் தந்தது.

தமிழக மக்கள் விஜய் மீது மிகுந்த எதிர்பார்ப்புடன் வாக்களித்துள்ளனர். அந்த எதிர்பார்ப்பை அவர் நிச்சயம் நிறைவேற்றுவார் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு. அவருக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள். சினிமா புகழ், இளைஞர்கள் மற்றும் மகளிரால் தமிழகத்தில் 60 ஆண்டுகளுக்குப் பிறகு ஏற்பட்டுள்ள மிகப்பெரிய வரலாற்று மாற்றம் இது." என்று ரஜினிகாந்த் குறிப்பிட்டார்.

தொண்டர்களுக்கு ரஜினி அறிவுரை: மேலும், "நான் சம்பிரதாயத்திற்காகச் சென்று யாரையும் சந்திப்பவன் அல்ல என்பதால் விஜய்யை இன்னும் நேரில் சந்திக்கவில்லை. இருப்பினும், புதிய அரசுக்குத் தங்களது திட்டங்களைச் செயல்படுத்தக் குறைந்தது இரண்டு ஆண்டுகளாவது மக்கள் அவகாசம் கொடுக்க வேண்டும். அதேபோல, விஜய்யின் தொண்டர்கள் மிகக் கவனமாகச் செயல்பட வேண்டும். ஏனெனில், அவர்கள் செய்யும் சிறு தவறும் கூட முதலமைச்சர் விஜய்யைத் தான் பாதிக்கும்" என்றும் ரஜினிகாந்த் அறிவுறுத்தினார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Tirunelveli Business Directory