» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

தனியார் உணவகத்தில் ஏசி வெடித்து விபத்து ஊழியர் பலி - 5 பேர் படுகாயம்!!

செவ்வாய் 19, மே 2026 10:28:44 AM (IST)

தஞ்சையில், தனியார் உணவகத்தில் ஏசி வெடித்து விபத்துக்குள்ளானதில் ஊழியர் உயிரிழந்தார். மேலும் 5 பேர் படுகாயம் அடைந்தனர். 

தஞ்சை மேரீஸ் கார்னர் பகுதியில் உள்ள தனியார் உணவகத்தில் ஏசி எந்திரத்திற்கு கேஸ் நிரப்பியபோது ஏற்பட்ட அழுத்தத்தினால் சிலிண்டர் பயங்கர சத்தத்துடன் வெடித்துச் சிதறியது. இந்த கோர விபத்தில் உணவக ஊழியர் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மேலும், ஏசி மெக்கானிக் மற்றும் 3 ஆன்லைன் டெலிவரி ஊழியர்கள் உட்பட 5 பேர் பலத்த காயமடைந்தனர்.

தஞ்சை மேரீஸ் கார்னர் பகுதியில் உள்ள ஒரு தனியார் கட்டிடத்தின் தரைத்தளத்தில் உணவகம் ஒன்று செயல்பட்டு வருகிறது. நேற்று மாலை இந்த உணவகத்தின் சமையல் கூடத்தில் இருந்த ஏசி எந்திரத்தில் திடீரென பழுது ஏற்பட்டுள்ளது. இதையடுத்து ஏசியைச் சரிசெய்வதற்காக, நாஞ்சிக்கோட்டை சாலையைச் சேர்ந்த ஏசி மெக்கானிக் கணேசன் (வயது 43) என்பவர் வரவழைக்கப்பட்டார்.

கணேசன் ஏசி எந்திரத்திற்கு கேஸ் நிரப்பும் பணியில் ஈடுபட்டிருந்தபோது, எதிர்பாராத விதமாகச் சிலிண்டரில் ஏற்பட்ட கடுமையான காற்றழுத்தம் காரணமாக ஏசி எந்திரத்தில் இருந்த சிலிண்டர் பயங்கர சத்தத்துடன் வெடித்துச் சிதறியது.

சிலிண்டர் வெடித்த அதிர்வினால் அந்த உணவகக் கட்டிடத்தின் ஜன்னல்கள் மற்றும் கதவுகளில் இருந்த கண்ணாடிகள் அனைத்தும் சுக்குநூறாக உடைந்து நொறுங்கின. ஏசி எந்திரத்தின் இரும்புப் பாகங்கள் நாலாபுறமும் வெடித்துச் சிதறியதில், அருகில் இருந்த மற்ற ஏசி எந்திரங்களும் முற்றிலும் சேதமடைந்தன. வெடிச்சத்தம் பல மீட்டர் தூரத்திற்கு எதிரொலித்ததால் அப்பகுதி பொதுமக்கள் பெரும் பீதியடைந்து சம்பவ இடத்தில் திரண்டனர்.

இந்த விபத்தில் ஏசி மெக்கானிக் கணேசன் பலத்த காயங்களுடன் தூக்கி வீசப்பட்டார். அப்போது ஏசி பழுதுபார்க்கும் பணியை அருகில் நின்று கண்காணித்துக் கொண்டிருந்த உணவக ஊழியர்களான பொன்னாவரை பகுதியைச் சேர்ந்த ஜோதி மகன் ரவிராஜ் (வயது 27), திருவையாறு அருகே குழிமாத்தூரைச் சேர்ந்த சவேரியார் மகன் அருண்குமார் (வயது 26) ஆகியோர் மீது இரும்புப் பாகங்கள் பாய்ந்து படுகாயமடைந்தனர்.

மேலும், உணவகத்திற்கு வெளியே ஆர்டர்களுக்காகக் காத்திருந்த ஆன்லைன் உணவு டெலிவரி நிறுவன ஊழியர்களான மானோஜிப்பட்டியைச் சேர்ந்த கலியபெருமாள் மகன் கதிரேசன் (வயது 24), செங்கிப்பட்டியைச் சேர்ந்த துரைசாமி மகன் பிரேம் (வயது 26) மற்றும் ரெட்டிப்பாளையத்தைச் சேர்ந்த லட்சுமணன் மகன் அஜித்குமார் (வயது 22) ஆகியோரும் இந்த வெடிவிபத்தில் சிக்கிப் படுகாயமடைந்தனர்.

விபத்து குறித்துத் தகவல் அறிந்ததும் தீயணைப்பு வீரர்கள் மற்றும் தஞ்சை தெற்கு காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மீட்புப் பணியில் ஈடுபட்டனர். படுகாயமடைந்த 6 பேரையும் மீட்டு சிகிச்சைக்காகத் தஞ்சை மருத்துவக்கல்லூரி அரசு மருத்துவமனைக்கு அவசரமாக அனுப்பி வைத்தனர். எனினும், அங்கு தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த உணவக ஊழியர் ரவிராஜ், சிகிச்சை பலனின்றி இன்று பரிதாபமாக உயிரிழந்தார். மற்ற 5 பேருக்கும் தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

விபத்து நடந்த இடத்திற்குத் தஞ்சை டவுண் டிஎஸ்பி சோமசுந்தரம், இன்ஸ்பெக்டர் சுதா மற்றும் போலீசார் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர். இச்சம்பவம் குறித்துத் தஞ்சை தெற்கு போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையே, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை முரசொலி எம்பி மற்றும் விஜய் சரவணன் எம்எல்ஏ ஆகியோர் நேரில் சந்தித்து நலம் விசாரித்ததுடன், அவர்களுக்குத் தரமான சிகிச்சை அளிக்குமாறு மருத்துவர்களிடம் கேட்டுக்கொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Tirunelveli Business Directory