» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
தமிழகத்தைப் பொற்காலமாக மாற்றியது திராவிட மாடல் ஆட்சி தான்: சத்யராஜ் உருக்கம்!
சனி 6, ஜூன் 2026 11:34:53 AM (IST)
தமிழகத்தைப் பொற்காலமாக மாற்றியது திராவிட மாடல் ஆட்சி தான்; கொளத்தூர் தொகுதியில் மு.க.ஸ்டாலின் வெற்றி பெறாதது தமக்கு மிகுந்த வேதனை அளிப்பதாக கருணாநிதி பிறந்த நாள் விழாவில் நடிகர் சத்யராஜ் பேசினார்.
சென்னை கிழக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பிறந்த நாள் விழா, முன்னாள் அமைச்சர் பி.கே.சேகர்பாபு தலைமையில் மிக பிரம்மாண்டமாக நடைபெற்றது. இந்த விழாவில் சிறப்பு அழைப்பாளராகக் கலந்துகொண்டு நடிகர் சத்யராஜ் பேசியதாவது: "நான் பொதுவாக எல்லாவற்றையும் கிண்டலாகவும், நக்கல் நையாண்டியுடனும் விளையாட்டாக எடுத்துக் கொள்ளும் ஒரு நபர் என்பதை நீங்கள் சினிமாவில் பார்த்திருப்பீர்கள். ஆனால், கொளத்தூர் தொகுதியில் தலைவர் மு.க.ஸ்டாலின் ஜெயிக்காமல் போனதை என்னால் அப்படி எளிதாக எடுத்துக் கொள்ள முடியவில்லை; அது மிகவும் கஷ்டமாக இருக்கிறது. இப்படிப்பட்ட ஒரு சிறந்த தலைவரைத் தோற்கடித்து விட்டோமே என்று மக்கள் பட்டுத் திருந்தினால் தான் புத்தி வரும்," என்று சத்யராஜ் பேசிக் கொண்டிருந்தபோதே, அவரை அறியாமல் கண்கள் கலங்கி, நா தழுதழுத்தது. உடனடியாகத் தனது கறுப்புக் கண்ணாடியை மீறி வந்த கண்ணீர்த்துளிகளை அவர் மேடையிலேயே துடைத்துக் கொண்டார்.
தொடர்ந்து பேசிய அவர், தற்போதைய திராவிட மாடல் ஆட்சிக் கோட்பாடுகள் குறித்தும், மாற்று அரசியல் குறித்தும் கறாரான விமர்சனங்களை முன்வைத்தார்: "தமிழகத்தைப் பொற்காலமாக மாற்றியது திராவிட மாடல் ஆட்சி தான். மு.க.ஸ்டாலின் கொண்டு வந்த நலத்திட்டங்களுக்கும், வளர்ச்சித் திட்டங்களுக்கும் வெறும் பெயரை மட்டும் மாற்றினாலே உங்களுக்கு நல்ல பெயர் கிடைத்துவிடும். அதை விடுத்து அத்திட்டங்களை முற்றிலும் மாற்ற நினைத்தால் கண்டிப்பாகச் சரிப்பட்டு வராது.
மாற்றம் வேண்டும் என்று நினைப்பவர்கள் என்ன மாதிரியான மாற்றம் என்பதைச் சிந்தித்துச் சீர்தூக்கிப் பார்க்க வேண்டும். திராவிடக் கருத்தான சமூக நீதிக்கு நேர்மாறான கருத்தியல் ஆர்.எஸ்.எஸ். மற்றும் பா.ஜ.க.வின் சனாதனம் ஆகும். அது பிடிக்கவில்லை என்றால் அங்கு ஓட்டுப் போடுங்கள். அதைவிட வேகமான கருத்தியல் வேண்டுமென்றால் கம்யூனிஸ்டுகளைச் சேர்க்கலாம், பட்டியல் இனத்தவர் விடுதலைக்கு வி.சி.க.வை ஜெயிக்க வைக்கலாம்.
தமிழ்நாடு முதல்வர், என்னுடைய அன்பு தம்பி விஜய் கட்சி ஆரம்பிக்கும் போது தனது கொள்கைத் தலைவர்கள் பெரியார், அம்பேத்கர் என்றும், திராவிடமும் தமிழ் தேசியமும் எனது இரண்டு கண்கள் என்றும் கூறினார். அப்படியென்றால் அதுவும் ஒரு தி.மு.க. தான், ஒரு அ.தி.மு.க. தான். இங்குத் தலைவர்களும் நபர்களும் மட்டும்தான் மாறுகிறார்கள். மக்கள் இதை யோசிக்க வேண்டாமா? ஓட்டுப் போட்டுவிட்டீர்கள், இனிமேலாவது கேள்வி கேட்டுப் பழகுங்கள்."
சட்டசபையில் நடைபெறும் விவாதங்கள் மற்றும் உதயநிதி ஸ்டாலின் எதிர்கொள்ளும் கேள்விகள் குறித்து சத்யராஜ் பேசுகையில், "சட்டசபையில் உதயநிதி ஸ்டாலின் எதிரில் இருந்து கேள்வி கேட்டுப் பிரிக்கிறார்கள். நீங்கள் இருவரும் சினிமாவில் ஒன்றாக இருந்த நண்பர்கள் தானே. நாளைக்கு இந்த கேள்வியைக் கேட்கப்போகிறேன் என்று முதலிலேயே தொலைபேசியில் தெரிவித்து இருந்தால், அவர் பதிலைத் தயார் செய்து கொண்டு வருவார். திடீரென்று கேட்டால் அவர் எப்படிப் பதில் சொல்வார்? டுவிட்டரில்தான் (X) பதில் சொல்லியாக வேண்டும். அவர் சட்டசபையில் அமைதியாக இருந்துவிட்டு, நன்றி தெரிவிக்கும் கூட்டத்தில் ஆக்ரோஷமாகப் பேசுகிறார்," என்றார்.
தனது உரையின் நிறைவாக, "கொளத்தூரில் தலைவர் மு.க.ஸ்டாலின் தோற்ற அடுத்த நாள் நன்றி தெரிவிக்கச் சென்ற கூட்டத்தில் மக்கள் அனைவரும் அழுதனர். எங்கே தவறு நடந்தது என்று தெரியவில்லை. பராசக்தி படத்தில் வருவது போலக் கவர்ச்சி நடனம் பார்க்கப் போய், இருப்பதையெல்லாம் அடித்துக் கொண்டு சென்றுவிட்டார்கள். இனிமேல் மீண்டும் தி.மு.க. ஆட்சி வந்துதான் அதைச் சரி செய்ய வேண்டும். கலைஞரின் 104-வது பிறந்த நாளுக்கே தமிழ்நாடு முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் வந்துவிடுவார். அவரது தலைமையில் தான் கலைஞரின் 104-வது பிறந்த நாள் விழா மிகச் சிறப்பாக நடக்கும்," என்று சத்யராஜ் மிக உறுதியுடன் பேசி முடித்தார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

ஜெர்மன் நிறுவனத்துடன் பசுமை எரிசக்தி வர்த்தகம் : தூத்துக்குடி வ.உ.சி துறைமுகம் புதிய சாதனை
சனி 6, ஜூன் 2026 5:40:06 PM (IST)

கொலை வழக்குகளில் சிறப்பாக பணிபுரிந்த காவல் துறையினருக்கு எஸ்பி அபிஷேக் குப்தா பாராட்டு!
சனி 6, ஜூன் 2026 4:59:13 PM (IST)

அதிமுக முன்னாள் அமைச்சர்கள் 4 பேர், முன்னாள் எம்எல்ஏக்கள் 10 பேர் தவெகவில் இணைந்தனர்!
சனி 6, ஜூன் 2026 4:08:18 PM (IST)

தவெகவில் இணைந்த கடம்பூர் ராஜூவுக்குக் கடும் எதிர்ப்பு : அதிமுகவினர் கண்டன ஆர்ப்பாட்டம்!
சனி 6, ஜூன் 2026 3:16:27 PM (IST)

நார்வே செஸ் தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற இந்தியர்: வரலாறு படைத்தார் பிரக்ஞானந்தா!
சனி 6, ஜூன் 2026 11:19:04 AM (IST)

திருச்செந்தூர் கோயில் முறைகேடுகளை விசாரிக்க 6 பேர் குழு : அமைச்சர் ரமேஷ் உத்தரவு
சனி 6, ஜூன் 2026 9:10:18 AM (IST)


