» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

கும்பகோணம் பள்ளித் தீ விபத்தில் உயிர் தப்பிய மாணவி சாதனை: உதவி இயக்குநராக நியமனம்!

வெள்ளி 19, ஜூன் 2026 8:10:26 AM (IST)



தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் கடந்த 2004-ஆம் ஆண்டு தனியார் பள்ளியில் ஏற்பட்ட தீ விபத்தில் 94 மாணவ-மாணவிகள் உடல் கருகி பலியான சோகம் பலரது நெஞ்சை விட்டும் இன்னும் அகலவில்லை. இந்தத் தீ விபத்தில் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய ஜெனிபர் என்ற மாணவி, தற்போது டிஎன்பிஎஸ்சி குரூப்-1 தேர்வில் வெற்றி பெற்று, ஊரக வளர்ச்சித் துறையில் உதவி இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார்.

தீ விபத்து நடைபெற்ற சமயத்தில் தஞ்சாவூர் மாவட்ட கலெக்டராக இருந்தவர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன் (தற்போது தமிழ்நாடு மின்சார வாரியத் தலைவர்). அப்போது மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் அவரது சிறப்பான செயல்பாடுகளைக் கண்டு வியந்த ஜெனிபர், அவரைத் தன் வாழ்வின் முன்மாதிரியாகக் கொண்டு படித்துச் சாதித்துள்ளார்.

தற்போது அரசுப் பணி நியமன ஆணை பெற்றுள்ள ஜெனிபர், தனது சகோதரருடன் சென்று மின்வாரியத் தலைவர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணனை நேரில் சந்தித்து ஆணைக்காட்டி வாழ்த்துப் பெற்றுள்ளார். இந்தச் சந்திப்பு குறித்த புகைப்படங்களைத் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன் தனது ‘இன்ஸ்டாகிராம்’ சமூக வலைத்தளப் பக்கத்தில் பகிர்ந்து மிகுந்த நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார்.

நடுத்தரக் குடும்பத்தில் பிறந்து சாதித்துள்ள ஜெனிபர் தனது பேட்டியில் கூறியிருப்பதாவது: "கும்பகோணம் தீ விபத்தில் நாங்கள் தப்பித்து வந்த போது, எங்களுக்கு டாக்டர் ராதாகிருஷ்ணன் சார்தான் பாடப்புத்தகங்கள், பள்ளிக் கட்டணம் உள்ளிட்ட நிறைய உதவிகளைச் செய்து கொடுத்தார். அவருடைய செயல்பாடுகளை ஒரு வாரம் அருகில் இருந்து கவனித்தோம். அதிகாரத்தில் இருந்தால் மக்களுக்கு எவ்வளவு சேவைகள் செய்யலாம், மக்களுடைய வாழ்க்கைத்தரத்தை எப்படி மாற்றலாம் என்பதை அவரிடமிருந்து கற்றுக் கொண்டேன். அவரை முன்மாதிரியாக வைத்தே தற்போது இந்த நிலையை அடைந்துள்ளேன்.

ஊரக வளர்ச்சித் துறை உதவி இயக்குநர் என்பது நல்ல பதவிதான், இதன் மூலம் கிராம மக்களுக்கு நிறையச் சேவை செய்ய முடியும். எனினும், சிவில் சர்வீசஸ் தேர்வு எழுதி, அதில் சாதித்து ஐஏஎஸ் அதிகாரியாகி மக்களுக்குச் சேவை செய்ய வேண்டும் என்பதுதான் என்னுடைய இறுதி இலக்கு" எனத் தெரிவித்துள்ளார். தீ விபத்தின் சோகம் ஆறாத வடுவாகப் பலரது மனங்களில் இருக்கும் வேளையில், அதிலிருந்து மீண்டு வந்து சாதித்துள்ள ஜெனிபரின் இந்த வெற்றி ஒட்டுமொத்த தமிழகத்திற்கும் பெரும் ஆறுதலாகவும், நம்பிக்கையூட்டும் விதமாகவும் அமைந்துள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Tirunelveli Business Directory