» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
நடுக்கடலில் தத்தளித்த மாலத்தீவு சரக்குக் கப்பல்: கடலோரக் காவல் படை விரைந்து மீட்பு!
செவ்வாய் 30, ஜூன் 2026 8:21:22 AM (IST)

திருச்செந்தூர் அருகே நடுக்கடலில் சென்றபோது மாலத்தீவு சரக்குக் கப்பலில் ஏற்பட்ட பழுதைக் கடலோரக் காவல் படையினர் துரிதமாகச் செயல்பட்டுக் கட்டுப்படுத்தி, கப்பலையும் அதன் பணியாளர்களையும் பத்திரமாக மீட்டுள்ளனர்.
தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்தில் இருந்து மாலத்தீவுக்கு கடந்த ஜூன் 27-ஆம் தேதி ‘எம்.வி.சித்தா’ என்ற சிறிய வகை சரக்குக் கப்பல் புறப்பட்டுச் சென்றது. இக்கப்பலில் கார்கள், ஈச்ச மரங்கள் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் ஏற்றப்பட்டிருந்தன. இக்கப்பல் திருச்செந்தூர் அருகே நடுக்கடலில் சென்றபோது, பலத்த காற்று காரணமாகக் கப்பலில் இருந்த பொருட்களை மூடி வைத்திருந்த தார்ப்பாய் காற்றில் பறந்துபோனது. அதே நேரத்தில், கப்பலின் கீழ் பகுதியில் சில இடங்களில் ஓட்டை விழுந்து தண்ணீர் கப்பலுக்குள் நுழையத் தொடங்கியது.
இதனைத் தொடர்ந்து கப்பலின் கேப்டன், அவசர உதவி கோரி தூத்துக்குடி கடலோரக் காவல் படைக்குத் தகவல் அனுப்பினார். உடனடியாகத் தூத்துக்குடி கடலோரக் காவல் படையின் ரோந்துக் கப்பலான ‘அதுல்யா’ சம்பவ இடத்திற்கு விரைந்தது. கடலோரக் காவல் படையைச் சேர்ந்த சிறப்புக் குழு மற்றும் மீட்பு நிபுணர்கள் கப்பலில் ஏறி அவசரப் பழுதுபார்ப்புப் பணிகளை மேற்கொண்டனர்.
மேலும் சரக்குக் கப்பலுக்குள் புகுந்த தண்ணீரை வெளியேற்றும் பணியும் உடனடியாகத் தொடங்கப்பட்டதால், கப்பலுக்குள் நீர் புகுவது முற்றிலும் கட்டுப்படுத்தப்பட்டது. எனினும் கப்பலில் முழுமையான பழுதுபார்ப்புப் பணிகளை மேற்கொள்ளும் பொருட்டு, அந்தச் சரக்குக் கப்பல் மீண்டும் தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்திற்குப் பத்திரமாகக் கொண்டு வரப்பட்டது.
அங்கு கப்பலில் பராமரிப்புப் பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கப்பலில் ஏற்பட்ட ஓட்டை மேலும் விரிசலடைவதற்குள் கண்டுபிடிக்கப்பட்டதாலும், கடலோரக் காவல் படையினர் விரைந்து செயல்பட்டதாலும் கப்பல் மூழ்கும் அபாயம் தவிர்க்கப்பட்டு, பணியாளர்கள் மற்றும் கடல் சுற்றுச்சூழல் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடி மாவட்ட புதிய செய்தி மக்கள் தொடர்பு அலுவலராக பெ.சா. கருப்பண ராஜவேல் பொறுப்பேற்பு!
வியாழன் 2, ஜூலை 2026 12:34:29 PM (IST)

தவெக ஆட்சியைத் தரைமட்டமாக்க திமுக சதி : ஸ்டாலின் மீது சண்முகம் பரபரப்பு குற்றச்சாட்டு!
வியாழன் 2, ஜூலை 2026 12:23:48 PM (IST)

ஸ்பா சென்டர் நடத்த ரூ.20,000 மாமூல் வாங்கிய 2 பெண் போலீஸ் அதிகாரிகள் அதிரடி கைது!
வியாழன் 2, ஜூலை 2026 12:13:36 PM (IST)

தூத்துக்குடியில் தொடரும் கஞ்சா வேட்டை: மேலும் 3 பேர் அதிரடி கைது - 6 கிலோ கஞ்சா பறிமுதல்!
வியாழன் 2, ஜூலை 2026 11:28:27 AM (IST)

தமிழ்நாடு மாடல் வாஷிங் மெஷின் குட்கா கறைகளைக் கூட நீக்குமா? - கனிமொழி கேள்வி!
வியாழன் 2, ஜூலை 2026 11:01:55 AM (IST)

தவெக ஆட்சியைக் கவிழ்க்க மு.க.ஸ்டாலின் திட்டம்: அமைச்சர் நிர்மல் குமார் குற்றச்சாட்டு!
வியாழன் 2, ஜூலை 2026 10:48:41 AM (IST)


