» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

பங்குச்சந்தையில் முதலீடு செய்யாதீர்: தற்கொலைக்கு முன் உருக்கமான வீடியோ வெளியிட்ட தொழிலதிபர்!

புதன் 1, ஜூலை 2026 12:06:54 PM (IST)

தர்மபுரியில் ரியல் எஸ்டேட் மற்றும் பங்குச்சந்தை தொழிலில் ஏற்பட்ட கடுமையான நஷ்டம் மற்றும் கடன் சுமை காரணமாக, தொழிலதிபர் ஒருவர் தனது மனைவி மற்றும் மகளைக் கொலை செய்துவிட்டு, தேசிய நெடுஞ்சாலையில் லாரி முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தர்மபுரி-சேலம் தேசிய நெடுஞ்சாலையில் அதியமான்கோட்டை அருகே முண்டாசுபுறவடை கிராமச் சாலையில் நின்றுகொண்டிருந்த நபர் ஒருவர், நேற்று திடீரென அவ்வழியாக வந்த லாரியின் குறுக்கே பாய்ந்தார். இதில் லாரி ஏறியதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அதியமான்கோட்டை காவல்துறையினர் நடத்திய விசாரணையில், உயிரிழந்தவர் தர்மபுரி அன்னசாகரம் பகுதியைச் சேர்ந்த சந்தோஷ் (45) என்பதும், ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்த இவர், முன்னாள் எம்பி செந்தில்குமாரின் உதவியாளராகப் பணியாற்றிய திமுக பிரமுகர் என்பதும் தெரியவந்தது.

விபத்து விபரத்தைத் தெரிவிப்பதற்காகக் காவல்துறையினர் தர்மபுரி கோட்டை கோவில் அருகேயுள்ள சந்தோஷின் அடுக்குமாடி குடியிருப்பு வீட்டிற்குச் சென்றனர். வீடு வெளிப்புறமாகப் பூட்டப்பட்டிருந்த நிலையில், உள்ளே தொலைக்காட்சி (டிவி) சத்தம் அதிகமாகக் கேட்டுள்ளது. இதனால் சந்தேகமடைந்த காவல்துறையினர் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது, சந்தோஷின் மனைவி சரண்யா (36) மற்றும் மகள் சாத்விகா (14) ஆகிய இருவரும் ரத்த வெள்ளத்தில் சடலமாகக் கிடந்துள்ளனர். இருவரின் உடல்களையும் மீட்ட காவல்துறையினர் பிரேதப் பரிசோதனைக்காகத் தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

காவல்துறையினரின் முதற்கட்ட விசாரணையில், ரியல் எஸ்டேட் தொழிலில் ஏற்பட்ட நஷ்டத்தை ஈடுகட்ட சந்தோஷ் பங்குச்சந்தையிலும் (Share Market) முதலீடு செய்துள்ளார். அதிலும் வருமானம் கிடைக்காததால் பலரிடம் கடன் வாங்கியுள்ளார். கடன் தொல்லை அதிகமானதால் மனமுடைந்த சந்தோஷ், நேற்று காலை பள்ளியிலிருந்து தனது மகள் சாத்விகாவை வீட்டிற்கு அழைத்து வந்துள்ளார். பின்னர் சுத்தியலால் மகளின் தலையில் அடித்தும், மனைவி சரண்யாவின் கழுத்தை நெரித்தும் கொலை செய்துள்ளார். அதன்பின் வீட்டைப் பூட்டிவிட்டுச் சென்று லாரி முன் பாய்ந்து தற்கொலை செய்துள்ளார்.

மரணத்திற்கு முன் வெளியிட்ட உருக்கமான வீடியோ:

தற்கொலை செய்துகொள்வதற்கு முன்பாக சந்தோஷ் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், "நான் யாரையும் ஏமாற்றவில்லை. என் மனைவி மற்றும் மகளை மகாராணி போல வசதியாக வாழ வைத்தேன். இதற்கு மேல் அவர்களை என்னால் கஷ்டப்படுத்த முடியாது. அதனால் அவர்களை என்னுடன் அழைத்துச் செல்கிறேன். எங்கள் இறப்பிற்கு யாரும் காரணமில்லை. ரியல் எஸ்டேட் கடன் காரணமாகப் பங்குச்சந்தையில் முதலீடு செய்து ஏமாந்தேன். யாரும் தயவுசெய்து பங்குச்சந்தையில் முதலீடு செய்ய வேண்டாம். உறவினர்களும் நண்பர்களும் என்னை மன்னித்து விடுங்கள்" என உருக்கமாகப் பேசியுள்ளார். இச்சம்பவம் குறித்து அதியமான்கோட்டை காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Tirunelveli Business Directory