» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

தூத்துக்குடி வ.உ.சி., - பெல்ஜியம் ஆண்ட்வெர்ப் துறைமுகங்கள் இடையே சர்வதேச ஒப்பந்தம்!

சனி 11, ஜூலை 2026 4:28:30 PM (IST)

vocportBeljium.jpg

இந்தியா - ஐரோப்பிய கடல்சார் கூட்டுறவை வலுப்படுத்தும் நோக்கில், தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகம், பெல்ஜியம் நாட்டின் ஆண்ட்வெர்ப்-புரூக்ஸ் சர்வதேச போர்ட் மற்றும் ஏபெக் (APEC) பயிற்சி மையத்துடன் 3 ஆண்டு காலப் புரிந்துணர்வு ஒப்பந்தத்தை மேற்கொண்டுள்ளது.

இந்தியா - ஐரோப்பிய நாடுகளுக்கு இடையேயான கடல்சார் கூட்டுறவை வலுப்படுத்தும் நோக்கில், தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுக ஆணையம், பெல்ஜியம் நாட்டின் ஆண்ட்வெர்ப்-புரூக்ஸ் சர்வதேச போர்ட் மற்றும் ஏபெக் ஆண்ட்வெர்ப்-பிளாண்டர்ஸ் போர்ட் பயிற்சி மையத்துடன் வரலாற்றுச் சிறப்புமிக்க புரிந்துணர்வு ஒப்பந்தத்தை (MoU) மேற்கொண்டுள்ளது.

09.07.2026 அன்று நடைபெற்ற நிகழ்வில், வ.உ. சிதம்பரனார் துறைமுக ஆணையத் துணைத் தலைவர் ராஜேஷ் சௌந்தரராஜன், ஐஏஎஸ், ஆண்ட்வெர்ப்-புரூக்ஸ் சர்வதேச போர்ட் மற்றும் ஏபெக் பயிற்சி மைய நிர்வாக இயக்குனர் கிறிஸ்டோஃப் வாட்டர்ஷூட் ஆகியோர் இப் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் முறைப்படி கையெழுத்திட்டனர். இந்தியத் துணைக் கண்டத்திற்கான மண்டல ஒருங்கிணைப்பாளர் டேமியன் குரோட்டேர்ஸ், ஆண்ட்வெர்ப் போர்ட் இந்தியப் பிரதிநிதி தல்ஜித் சிங் கோலி மற்றும் துறைமுகத்தின் உயர் அதிகாரிகள் முன்னிலையில் இப் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.

இவ்வொப்பந்தத்தின் முக்கிய நோக்கம், துறைமுக செயல்பாடுகளைத் டிஜிட்டல் மயமாக்குதல், பசுமைத் துறைமுகக் கட்டமைப்பு மற்றும் ஊழியர்களுக்கான திறன் மேம்பாட்டுப் பயிற்சிகளை வழங்குவதாகும். இந்த 3 ஆண்டு கால ஒப்பந்தம், வ.உ.சி. துறைமுகத்தின் சூரிய மற்றும் காற்றாலை மின்சாரம், பசுமை ஹைட்ரஜன், பசுமை அம்மோனியா மற்றும் பசுமை மெத்தனால் உற்பத்தி உள்ளிட்ட உள்கட்டமைப்புத் திட்டங்களுக்குப் பெரும் பக்கபலமாக அமையும்.

ஒப்பந்தத்தைத் தொடர்ந்து தூத்துக்குடி வந்த பெல்ஜியம் நாட்டுப் பிரதிநிதிகள் குழுவினருக்குத் துறைமுகத்தின் சாதனைகள் மற்றும் டிஜிட்டல் தொழில்நுட்ப மாற்றங்கள் குறித்து விரிவான விளக்கக்காட்சி அளிக்கப்பட்டது. பின்னர் அக் குழுவினர் துறைமுகத்திலுள்ள பசுமை ஹைட்ரஜன் முன்னோடி ஆலை, அமையவுள்ள பசுமை மெத்தனால் பங்கிங் தளம் மற்றும் வ.உ.சி. போர்ட் ஹெரிடேஜ் மியூசியம் ஆகியவற்றைப் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

பாரம்பரியம், கண்டுபிடிப்பு, செயல்பாட்டுத் திறன் மற்றும் உலகளாவிய ஒத்துழைப்பின் கூட்டு வடிவமாக இக் கூட்டாண்மை விளங்கும் என ஆண்ட்வெர்ப்-புரூக்ஸ் நிர்வாக இயக்குனர் கிறிஸ்டோஃப் வாட்டர்ஷூட் தெரிவித்துள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடி சிஓபி26 (COP26) மாநாட்டில் பிரகடனப்படுத்திய 'பஞ்சாமிர்த' தூய்மை எரிசக்தி இலக்குகளை அடைவதற்கும், உலகளாவிய கடல்சார் நுழைவாயிலாகத் தூத்துக்குடி துறைமுகத்தை மாற்றுவதற்கும் இச் சர்வதேசக் கூட்டுறவு மிக முக்கியக் காரணியாக இருக்கும் என வ.உ. சிதம்பரனார் துறைமுக ஆணையத் தலைவர் சுசாந்த குமார் புரோஹித், ஐஆர்எஸ்இஇ, தனது அதிகாரப்பூர்வச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார். இத் தகவல்கள் தூத்துக்குடி வி.ஓ.சிதம்பரனார் துறைமுக ஆணையம் வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வச் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Tirunelveli Business Directory