» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

ஆடை உற்பத்தியில் புதுமையைப் புகுத்த வேண்டும் : நெசவாளர்களுக்கு ஆட்சியர் பிரதாப் வேண்டுகோள்

வெள்ளி 7, ஆகஸ்ட் 2026 5:53:02 PM (IST)



இன்றைய சுழலுக்கு ஏற்றவாறு புதிய வண்ண அலங்காரங்களுடன் கூடிய ஆடைகளை உற்பத்தி செய்ய நெசவாளர்கள் முன்வர வேண்டும்" என்று கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப் தெரிவித்துள்ளார்.

கன்னியாகுமரி மாவட்டக் கைத்தறித் துறை சார்பில், 12-வது தேசிய கைத்தறி தினத்தை முன்னிட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இன்று (07.08.2026) கைத்தறி கண்காட்சி மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. இக்கண்காட்சியினைக் குத்துவிளக்கேற்றித் தொடங்கி வைத்த மாவட்ட ஆட்சியர், அரங்குகளில் வைக்கப்பட்டிருந்த புதிய இரக ஆடைகளைப் பார்வையிட்டார்.

தொடர்ந்து நெசவாளர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி மாவட்ட ஆட்சியர் பேசியதாவது: "இந்திய வரலாற்றில் முக்கியத்துவம் வாய்ந்த சுதேசி இயக்கம் 1905-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 7-ஆம் தேதி தொடங்கப்பட்டது. உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவிக்கவும், நெசவாளர்களைச் சிறப்பிக்கவும் 2015-ஆம் ஆண்டு முதல் ஆகஸ்ட் 7 தேசிய கைத்தறி தினமாகக் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. விவசாயத்திற்கு அடுத்து மிகப்பெரிய வேலைவாய்ப்பை வழங்கும் தொழிலாகக் கைத்தறித் தொழில் விளங்குகிறது.

தமிழ்நாடு முதலமைச்சர் நெசவாளர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தப் பல்வேறு நலத்திட்டங்களையும் கடனுதவிகளையும் வழங்கி வருகிறார். கூலி உயர்வு, மூலப்பொருட்களின் விலை உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளுக்குத் தொடர்ச்சியாகத் தீர்வுகள் காணப்பட்டு வருகின்றன.

ஓணம், நவராத்திரி, தீபாவளி, பொங்கல் பண்டிகைக் காலங்களிலும், சுற்றுலாத் தலங்களிலும் கைத்தறிப் பொருட்களை விற்பனை செய்யச் சிறப்பு அங்காடிகளை (Stalls) மாவட்ட நிர்வாகம் அமைத்துத் தரும். சந்தைப் போட்டியை எதிர்கொள்ளப் பாரம்பரிய டிசைன்களுடன் புதிய மாடல்களையும் புதுமையான வடிவமைப்பு கலைகளையும் புகுத்த வேண்டும். இதற்குத் தேவையான தொழில்நுட்ப உதவிகளையும் கடனுதவிகளையும் வழங்க அரசும் மாவட்ட நிர்வாகமும் தயாராக உள்ளது.

இளைஞர்கள் தற்போது பாரம்பரியக் கைத்தறி உடைகளை அணிய ஆர்வம் காட்டி வருகின்றனர். பொதுமக்கள் அனைவரும் முடிந்தபோதெல்லாம் கைத்தறி ஆடைகளை அணிந்து நெசவாளர்களுக்கு ஆதரவளிக்க வேண்டும்"* எனப் பேசினார்.

இவ்விழாவில் 'முத்ரா கடனுதவித் திட்டத்தின்' கீழ் 14 நெசவாளர்களுக்குத் தலா ₹50,000 வீதம் மொத்தம் ₹7 லட்சம் கடனுதவியும், 'சேமிப்பு மற்றும் பாதுகாப்புத் திட்டத்தின்' கீழ் 8 நெசவாளர்களுக்கு ₹5.92 லட்சம் தொகையினையும் ஆட்சியர் வழங்கினார். மேலும், 4 வயது முதிர்ந்த மூத்த நெசவாளர்களுக்குப் பொன்னாடை போர்த்திச் சிறப்பு கௌரவம் செய்யப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் பயிற்சி உதவி ஆட்சியர் ர.மோனிகா, இ.ஆ.ப., கைத்தறித் துறை உதவி இயக்குநர் ஜெயசுதா, நாகர்கோவில் வருவாய் கோட்டாட்சியர் செந்தில்வேல்முருகன், ஹுசூர் மேலாளர் முருகன், முன்னோடி வங்கி உதவி அலுவலர் கார்த்திக், கைத்தறி அலுவலர் இராம்கண்ணன் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் மற்றும் நெசவாளர்கள் பலர் கலந்துகொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Tirunelveli Business Directory