» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

என்ரிகா நிறுவனத்தின் 11 மது வகைகள் மீதான தடை ஒரே நாளில் நீக்கம்: டாஸ்மாக் உத்தரவு!

ஞாயிறு 16, ஆகஸ்ட் 2026 11:05:39 AM (IST)

tasmacrowkd.jpg

டாஸ்மாக் கடைகளில் 'என்ரிகா என்டர்பிரைசஸ்' நிறுவனத்தின் 11 மது வகைகளை விற்க விதிக்கப்பட்ட தடையை, ஒரே நாளில் மதுவிலக்குத் துறை விலக்கிக் கொண்டது.

தமிழக அரசால் நடத்தப்படும் டாஸ்மாக் கடைகளில் பல்வேறு நிறுவனங்களின் பீர் மற்றும் மது வகைகள் விற்பனை செய்யப்படுகின்றன. என்ரிகா என்டர்பிரைசஸ் நிறுவனத்தின் மது வகைகளில் செயற்கை சுவையூட்டும் பொருட்கள் கலக்கப்பட்டிருப்பதாகக் கூறி, அந்நிறுவனத்தின் 11 மது வகைகளின் விற்பனைக்கு டாஸ்மாக் மேலாண் இயக்குனர் நந்தகுமார் கடந்த 13-ஆம் தேதி தடை விதித்தார்.

உணவுப் பாதுகாப்பு ஆணையத்தின் கடிதத்தை அடிப்படையாகக் கொண்டு, என்ரிகா நிறுவனத்தின் 11 மது வகைகள் மீதான தடையை நீக்க மதுவிலக்குத் துறை ஆணையர் டாஸ்மாக் நிறுவனத்திற்குப் பரிந்துரை செய்தார். இதனைத் தொடர்ந்து, தடையை ஒரே நாளில் நீக்கியதற்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. 

அதிமுக தகவல் தொழில்நுட்ப அணி வெளியிட்ட அறிக்கையில், "விதித்த தடையை வெறும் 24 மணி நேரத்தில் நீக்கும் அளவிற்கு என்ன நடந்தது? பயமா, பதற்றமா அல்லது பின்னணி பேரமா?" எனக் கேள்வி எழுப்பியுள்ளது.

அமைச்சர் விக்னேஷ் விளக்கம்:

இச்சம்பவம் குறித்து மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சர் விக்னேஷ் அளித்துள்ள விளக்கத்தில்: இந்திய உணவுப் பாதுகாப்புத் தர நிர்ணய அதிகாரிகளின் முதற்கட்ட ஆய்வின் பேரிலேயே இந்த 11 மது வகைகளுக்குத் தடை விதிக்கப்பட்டது.

தற்போது அந்த ஆணையமே மீண்டும் ஆய்வு செய்து, "மதுவில் சேர்க்கப்படும் சுவையூட்டிகள் இயற்கையாக உருவாக்கப்படுபவைதான்; எனவே அந்நிறுவனத்திடம் இருந்து மது வகைகளைக் கொள்முதல் செய்யலாம்" எனக் கடிதம் அனுப்பியுள்ளது. அதன்பேரிலேயே தடை நீக்கப்பட்டது.

நாள்தோறும் ரூ. 50 கோடிக்கும் அதிகமாக விற்பனை செய்யும் உணவுச் சார்ந்த நிறுவனங்களை மத்திய அரசுதான் கண்காணிக்கும். மாநில அரசு மதுபானங்களில் உள்ள ஆல்கஹால் அளவை மட்டுமே ஆய்வு செய்ய முடியும். ஆன்லைன் விற்பனை மூலமாக மது வாங்குவோருக்குச் சரியாக மது வழங்காத பணியாளர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.


மக்கள் கருத்து

சந்திரன்Aug 16, 2026 - 12:03:47 PM | Posted IP 162.1*****

சாவுறவன் சீக்கிரம் சாகனும் அப்பதான் புது புது ஆட்கள் கிடைப்பார்கள்

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Tirunelveli Business Directory