» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு
உலகக் கோப்பை வெற்றியுடன் விடைபெற்றார் டிராவிட்!
ஞாயிறு 30, ஜூன் 2024 9:12:28 AM (IST)
இந்திய கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளராக ராகுல் டிராவிட்டின் பதவிக்காலம், டி20 உலகக் கோப்பை வெற்றியுடன் நிறைவு பெற்றது.
இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக ராகுல் டிராவிட் கடந்த 2021-ம் ஆண்டு நவம்பர் மாதம் முதல் இருந்து வருகிறார். அவரது பதவி காலம் இந்த 20 ஓவர் உலகக் கோப்பை போட்டியுடன் முடிவுக்கு வருகிறது. டிராவிட்டின் பயிற்சியில் கீழ் இந்திய அணி 2023-ம் ஆண்டு நடந்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப், 50 ஓவர் உலகக் கோப்பை ஆகியவற்றில் இறுதிப்போட்டியில் தோல்வி கண்டிருந்தது.
இந்த நிலையில் ராகுல் டிராவிட் பயிற்சியாளராக தனது கடைசி உலகக் கோப்பை போட்டியை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளார். வீரராகவோ, கேப்டனாகவோ உலகக் கோப்பையை கையில் ஏந்தி சாதிக்க முடியாத ராகுல் டிராவிட் ஒரு பயிற்சியாளராக தனது உலகக் கோப்பை ஏக்கத்தை தணித்து இருக்கிறார்.
20 ஓவர் உலகக் ேகாப்பை கிரிக்கெட் இறுதி ஆட்டத்தில் 76 ரன்கள் சேர்த்து ஆட்டநாயகனாக ஜொலித்த இந்திய நட்சத்திர வீரர் விராட்கோலி, சர்வதேச 20 ஓவர் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக உடனடியாக அறிவித்தார். கோப்பையை கையில் ஏந்த வேண்டும் என்று விரும்பினேன். அது நடந்து விட்டது. இதுவே இந்திய அணிக்காக நான் ஆடிய கடைசி 20 ஓவர் போட்டி என்று கூறினார். 35 வயதான கோலி 20 ஓவர் கிரிக்கெட்டில் இதுவரை 125 ஆட்டங்களில் ஆடி ஒரு சதம், 38 அரைசதம் உள்பட 4,188 ரன்கள் குவித்துள்ளார்.