» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு
சாம்பியன்ஸ் டிராபி: பாகிஸ்தான் செல்ல இந்திய அணி மறுப்பு!
வியாழன் 11, ஜூலை 2024 4:11:22 PM (IST)
அடுத்தாண்டு பாகிஸ்தானில் நடைபெறவுள்ள சாம்பியன்ஸ் டிராபி தொடரில் விளையாட அந்நாட்டுக்கு செல்ல இந்திய அணி மறுத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
மினி உலகக் கோப்பை எனப்படும் சாம்பியஸ் டிராபி 2025 தொடரை நடத்துவதற்கான உரிமத்தை பாகிஸ்தான் பெற்றுள்ளது. கடந்த 2017 சாம்பியன்ஸ் டிராபியில் இந்தியாவை வீழ்த்தி பாகிஸ்தான் அணி கோப்பை வென்று நடப்பு சாம்பியனாக உள்ளது. இந்நிலையில் அடுத்தாண்டு மார்ச் மாதம் நடைபெறவுள்ள இந்த தொடருக்கான மாதிரி அட்டவணையை ஐசிசியிடம் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் சமர்பித்திருந்தது.
அதில், இந்தியா - பாகிஸ்தான் மோதும் போட்டி மார்ச் 1ஆம் தேதி லாகூரில் நடத்த திட்டமிடப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், ஆசியக் கோப்பை தொடரில் இந்திய அணியில் போட்டிகளை இலங்கையில் நடத்தியது போலவே, சாம்பியன்ஸ் டிராபி தொடரையும் நடத்த வேண்டும் என்று பிசிசிஐ கோரிக்கை விடுத்துள்ளது.
மேலும், இதுகுறித்து இம்மாத கடைசியில் கொழும்புவில் நடைபெறவுள்ள ஐசிசி கூட்டத்தில் ஆலோசிக்கப்படும் என்று தெரிகிறது. சர்வதேச தொடர்களை தவிர, இந்தியாவும் பாகிஸ்தானும் 2012-க்கு பிறகு இருதரப்பு போட்டிகளில் விளையாடவில்லை. 2008-ஆம் ஆண்டுக்கு பிறகு பாகிஸ்தானுக்கு இந்திய அணி பயணம் மேற்கொள்ளவில்லை.
எல்லைப் பிரச்னைகள் முடியும் வரை பாகிஸ்தானுடன் இந்திய அணி இருதரப்பு போட்டிகளில் விளையாடாது என்று கடந்தாண்டு மத்திய அமைச்சர் அனுராக் தாக்குர் தெரிவித்திருந்தார். கடந்தாண்டு நடைபெற்ற ஆசியக் கோப்பை போட்டிகளை பாகிஸ்தான் நடத்திய நிலையில், அந்நாட்டுக்கு செல்ல இந்தியா மறுத்ததால், இந்திய அணி விளையாடிய போட்டிகள் மட்டும் இலங்கையில் நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.