» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

கில் புதிய சாதனை: ஒரு நாள் தொடரை முழுமையாக வென்றது இந்திய அணி!

வியாழன் 13, பிப்ரவரி 2025 8:49:32 AM (IST)



இங்கிலாந்துக்கு எதிரான கடைசி ஒரு நாள் கிரிக்கெட் போட்டியிலும் வெற்றியை வசப்படுத்திய இந்திய அணி தொடரை 3-0 என்ற கணக்கில் முழுமையாக சொந்தமாக்கியது.

இந்தியா- இங்கிலாந்து அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி ஒரு நாள் கிரிக்கெட் போட்டி குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் பகல்-இரவு மோதலாக நேற்று நடந்தது. இந்திய அணியில் ரவீந்திர ஜடேஜா, முகமது ஷமிக்கு ஓய்வு அளிக்கப்பட்டது. பின்னங்காலில் ஏற்பட்ட லேசான வீக்கம் காரணமாக சுழற்பந்து வீச்சாளர் வருண் சக்ரவர்த்தி வெளியே உட்கார வேண்டியதானது. 

இவர்களுக்கு பதிலாக குல்தீப் யாதவ், வாஷிங்டன் சுந்தர், அர்ஷ்தீப்சிங் சேர்க்கப்பட்டனர். இங்கிலாந்து அணியில் ஒரே மாற்றமாக ஓவர்டானுக்கு பதிலாக டாம் பான்டன் இடம் பெற்றார். ‘டாஸ்’ வென்ற இங்கிலாந்து கேப்டன் ஜோஸ் பட்லர் இந்த முறை முதலில் பந்து வீசுவதாக அறிவித்தார். இதன்படி பேட்டிங்கை தொடங்கிய இந்திய அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக துணை கேப்டன் சுப்மன் கில்லும், கேப்டன் ரோகித் சர்மாவும் அடியெடுத்து வைத்தனர். முந்தைய ஆட்டத்தில் சதம் விளாசிய ரோகித் சர்மா இந்த ஆட்டத்தில் ஒரு ரன்னில் கேட்ச்சாகி ஏமாற்றம் அளித்தார்.

2-வது விக்கெட்டுக்கு சுப்மன் கில்லுடன், விராட்கோலி இணைந்தார். ஏதுவான பந்துகளை எல்லைக்கோட்டுக்கு தெறிக்கவிட்ட இவர்கள் மளமளவென ரன் சேகரித்தனர். 16.4 ஓவர்களில் இந்தியா 100-ஐ தொட்டது. கோலி தனது 73-வது அரைசதத்தை பூர்த்தி செய்தார். அணியின் ஸ்கோர் 122 ஆக உயர்ந்த போது, விராட் கோலி 52 ரன்னில் (55 பந்து, 7 பவுண்டரி, ஒரு சிக்சர்) அடில் ரஷித்தின் சுழலில் சிக்கினார். அடுத்து ஸ்ரேயாஸ் அய்யர், சுப்மன் கில்லுடன் கூட்டணி போட்டார். 

அணி வலுவான ஸ்கோரை நோக்கி பயணிப்பதற்கு உதவிய இவர்கள் எல்லா பந்து வீச்சையும் அடித்து நொறுக்கினர். நேர்த்தியான பேட்டிங்கை வெளிப்படுத்தி ரசிகர்களை கவர்ந்த சுப்மன் கில் பந்தை பவுண்டரிக்கு விரட்டி தனது 7-வது சதத்தை எட்டினார். இவர்கள் 3-வது விக்கெட்டுக்கு 104 ரன்கள் எடுத்த நிலையில் பிரிந்தனர். சுப்மன் கில் 112 ரன்னிலும் (102 பந்து, 14 பவுண்டரி, 3 சிக்சர்), ஸ்ரேயாஸ் அய்யர் 78 ரன்னிலும் (64 பந்து, 8 பவுண்டரி, 2 சிக்சர்) அடில் ரஷித்தின் சுழற்பந்து வீச்சில் ஆட்டமிழந்தனர்.

இதையடுத்து பின்வரிசையில் லோகேஷ் ராகுல் (40 ரன், 3 பவுண்டரி, ஒரு சிக்சர்), ஹர்திக் பாண்ட்யா (17 ரன்), அக்‌ஷர் பட்டேல் (13 ரன்), வாஷிங்டன் சுந்தர் (14 ரன்), ஹர்ஷித் ராணா (13 ரன்) ஆகியோரது இரட்டை இலக்கம் பங்களிப்பு அணி 350-ஐ தாண்டுவதற்கு உறுதுணையாக இருந்தது.

50 ஓவர் முடிவில் இந்திய அணி 356 ரன்கள் குவித்து ஆல்-அவுட் ஆனது. இந்த மைதானத்தில் இந்திய அணியின் அதிகபட்ச ஸ்கோர் இதுவாகும். இங்கிலாந்து தரப்பில் சுழற்பந்து வீச்சாளர் அடில் ரஷித் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இந்திய மண்ணில் அவரது சிறந்த பந்து வீச்சு இதுவாகும்.

பின்னர் இமாலய இலக்கை நோக்கி களம் கண்ட இங்கிலாந்து அணிக்கு பென் டக்கெட்டும், பில் சால்ட்டும் முதல் விக்கெட்டுக்கு தடாலடியாக 60 ரன்கள் (6.2 ஓவர்) திரட்டினர். ஆனால் இதே உத்வேகத்தை அடுத்து வந்த வீரர்களால் எடுத்து செல்ல முடியவில்லை. டக்கெட் 34 ரன்னிலும், பில் சால்ட் 23 ரன்னிலும் அர்ஷ்தீப்சிங்கின் பந்து வீச்சில் விக்கெட்டை பறிகொடுத்தனர். மிடில் வரிசையில் யாரும் பெரிய இன்னிங்சை விளையாடவில்லை. டாம் பான்டன், அட்கின்சன் ஆகியோர் எடுத்த 38 ரன்களே அந்த அணியில் அதிகபட்சமாகும். எதிர்பார்க்கப்பட்ட ஜோ ரூட் (24 ரன்), கேப்டன் ஜோஸ் பட்லர் (6 ரன்) சோபிக்கவில்லை.

34.2 ஓவர்களில் இங்கிலாந்து அணி 214 ரன்னில் அடங்கியது. இதனால் இந்தியா 142 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ரன் வித்தியாசத்தில் இங்கிலாந்துக்கு எதிராக இந்தியாவின் 2-வது மிகப்பெரிய வெற்றியாக இது பதிவானது. அர்ஷ்தீப்சிங், ஹர்ஷித் ராணா, அக்‌ஷர் பட்டேல், ஹர்திக் பாண்ட்யா தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர். சுப்மன் கில் ஆட்டநாயகன் மற்றும் தொடர்நாயகன் (3 ஆட்டத்தில் 259 ரன்) விருதை தட்டிச் சென்றார்.

வெற்றியின் மூலம் இந்திய அணி ஒரு நாள் தொடரை 3-0 என்ற கணக்கில் முழுமையாக வசப்படுத்தியது. முன்னதாக நாக்பூர், கட்டாக்கில் நடந்த ஆட்டங்களிலும் இந்தியா எளிதில் வெற்றி பெற்றிருந்தது. இதே போல் 20 ஓவர் தொடரையும் இந்திய அணி 4-1 என்ற கணக்கில் வென்றது நினைவிருக்கலாம்.

 கில் புதிய சாதனை

சுப்மன் கில்லுக்கு ஆமதாபாத் மைதானம் ராசியானது. இங்கு ஏற்கனவே டெஸ்ட் (2023-ம் ஆண்டில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 128 ரன்) மற்றும் சர்வதேச 20 ஓவர் போட்டியில் (நியூசிலாந்துக்கு எதிராக 126 ரன்) சதம் அடித்துள்ள அவர் இப்போது ஒரு நாள் போட்டியிலும் சதம் கண்டுள்ளார். இதன் மூலம் குறிப்பிட்ட மைதானத்தில் மூன்று வடிவிலான போட்டியிலும் சதத்தை ருசித்த 5-வது வீரர் என்ற பெருமையை சுப்மன் கில் பெற்றார். 

இதற்கு முன்பு தென்ஆப்பிரிக்காவின் பாப் டு பிளிஸ்சிஸ் (ஜோகன்னஸ்பர்க் மைதானம்), குயின்டான் டி காக் (செஞ்சூரியன்) ஆஸ்திரேலியாவின் டேவிட் வார்னர் (அடிலெய்டு), பாகிஸ்தானின் பாபர் அசாம் (கராச்சி) ஆகியோர் இச்சாதனையை நிகழ்த்தியுள்ளனர்.

சுப்மன் கில்லுக்கு இது 50-வது ஒரு நாள் போட்டியாகும். தனது 50-வது ஒரு நாள் ஆட்டத்தில் செஞ்சுரி அடித்த முதல் இந்தியர் என்ற சிறப்பை பெற்றுள்ளார்.

25 வயதான சுப்மன் கில் இதுவரை ஒரு நாள் போட்டியில் 7 சதம், 15 அரைசதம் உள்பட 2,587 ரன்கள் சேர்த்துள்ளார். தனது முதல் 50 இன்னிங்சில் அதிக ரன் எடுத்த வீரர் இவர் தான். இதற்கு முன்பு தென்அப்பிரிக்காவின் அம்லா தனது முதல் 50 ஆட்டத்தில் 2,486 ரன்கள் எடுத்ததே அதிகபட்சமாக இருந்தது.

உடல்உறுப்பு தானம் விழிப்புணர்வில் கிரிக்கெட் வீரர்கள்

‘உடல்உறுப்பு தானம் செய்யுங்கள், உயிர்களை காப்பாற்றுங்கள்’ என்ற விழிப்புணர்வு பிரசாரத்தை இந்திய கிரிக்கெட் வாரியம் இந்த ஆட்டத்தின் மூலம் தொடங்கி இருக்கிறது. இதனை வலியுறுத்தும் வகையில் இரு அணி வீரர்களும் களம் இறங்கிய போது கையில் பச்சைநிற பட்டை அணிந்திருந்தனர். இந்த முன்னெடுப்பு தொடங்கிய4 மணி நேரத்தில் 22 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உடல்உறுப்பு தானம் விழிப்புணர்வு பிரசாரத்தில் இணைந்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Tirunelveli Business Directory