» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

இன்றைய வீரர்களிடத்தில் உழைப்போ, அர்ப்பணிப்போ இல்லை - பல்வீந்தர் சிங் சாடல்!

வியாழன் 20, நவம்பர் 2025 5:05:36 PM (IST)

இன்றைய வீரர்களுக்கு அணுகுமுறையோ உழைப்போ, அர்ப்பணிப்போ இல்லை என்று இந்திய அணியின் ஜாம்பவான் பவுலர் பல்வீந்தர் சிங் சாந்து வேதனை தெரிவித்துள்ளார்.

கொல்கத்தா டெஸ்ட் போட்டியில் 124 ரன்களை எடுக்க முடியாமல் 93 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது ‘அதிர்ச்சியையும் தாண்டிய’ தாக்கத்தை ஏற்படுத்திய தோல்வி என்று கபில்ஸ் டெவில்ஸ் என்று அழைக்கப்பட்ட 1983 உலகக்கோப்பையை வென்ற இந்திய அணியின் பிரதான பவுலர் பல்வீந்தர் சிங் சாந்து வேதனை தெரிவித்துள்ளார்.

அதாவது இரண்டே இரண்டு ஸ்பின்னர்கள் இந்திய அணியின் கதையை முடித்து விட்டனர். நெருக்கமாக, மட்டைக்கு அருகில் பீல்டர்களைப் பார்த்தவுடனேயே இந்திய பேட்டர்களுக்கு அழுத்தம் கூடி விடுகிறது என்கிறார் சாந்து. மேலும் 1990-இங்கிலாந்து தொடருக்கு சச்சின் டெண்டுல்கர் எப்படி தயார்ப்படுத்திக் கொண்டார் என்ற உதாரணத்தையும் சாந்து எடுத்துக் காட்டியுள்ளார்.

மிட் டே என்ற ஆங்கில ஊடகத்தில் அவர் எழுதிய பத்தி ஒன்றில் கூறியிருப்பதாவது: 120 ரன்கள் இலக்கை விரட்டும் போது தென் ஆப்பிரிக்காவின் 2 ஸ்பின்னர்களிடம் இந்திய அணி தோல்வி கண்டது அதிர்ச்சியையும் கடந்த கொடுமை. என்னைப் பொறுத்தவரை நெருக்கமாக பீல்டர்களைக் கொண்டு நிறுத்தி ஸ்பின்னர்கள் வீசும் போதே இந்திய பேட்டர்கள் அழுத்தத்தை உணர்கின்றனர். இப்படிப்பட்ட அழுத்தச் சூழ்நிலைகளுக்கு இப்போதைய பேட்டர்கள் தயாராக இல்லை.

ஏனெனில் டி20 கிரிக்கெட்டுகள் பெருத்து விட்ட சூழ்நிலையில் பேட்டர்களின் தடுப்பாட்டத்திற்கு சவால் அளிக்கும் பந்து வீச்சை இவர்கள் எதிர்கொள்ள வாய்ப்பில்லாமல் போய்விட்டது. மேலும் இன்றைய கிரிக்கெட் வீரர்கள் உள்நாட்டுப் போட்டிகளிலும் அவ்வளவாக ஆடுவதில்லை. கடினமான உள்நாட்டுப் பிட்ச்களில் ஆடினால்தான் கடினமான சவாலான பிட்ச்களை எதிர்கொண்டு சமாளிக்க முடியும்.

1990 இங்கிலாந்து தொடருக்கு இந்திய அணியின் பெரிய வீரர்கள் எவ்வாறு தங்களைத் தயார்படுத்திக் கொண்டார்கள் என்பதை நான் அறிவேன். ஆர்சிஎஃப் மைதானத்தில் அப்போது பிட்சில் புற்கள் இருக்கும் அதனால் பந்துகள் பவுன்ஸ் ஸ்விங் ஆகும். அப்போது சச்சின் டெண்டுல்கர் என்னை அழைத்தார். நான் 7-8 வேகப்பந்து வீச்சாளர்களுடன் மைதானத்திற்கு உடனடியாகச் சென்றேன்.

ஒவ்வொரு நாளும் 2 மணி நேரம் பேட்டிங் பயிற்சி எடுப்பார். இதுதான் வேட்கை என்பது. இன்றைய வீரர்களுக்கு இதில் பாதி அணுகுமுறையோ உழைப்போ, அர்ப்பணிப்போ இல்லையே ஏன்?

மேலும் கடந்த தோல்விகளிலிருந்து நாம் பாடம் கற்றுக்கொள்வதில்லை. நியூஸிலாந்து நம் சொந்த மண்ணில் வந்து நம்மை ஒயிட் வாஷ் கொடுத்துவிட்டுச் சென்றனர். இப்போது இந்தப் பிட்சில் அதே தோல்வி. நம் வீரர்களின் திறமைகளைப் புரிந்து கொள்ளாத நிலையையே இது காட்டுகிறது. ஒரு பயிற்சியாளராக நான் கூறுகிறேன், பயிற்சியாளர் என்பவர் தன் அணியின் பலங்களை அறிந்திருப்பது அவசியம்.

ரோஹித் சர்மா, விராட் கோலி ஆகியோரின் இடத்தை இட்டு நிரப்பப் போவது யார் என்பது இன்னமும் நமக்கெல்லாம் தெரியவில்லை. அவர்கள் விரைவில் வெளியேறி விட்டதாகவே நான் கருதுகிறேன், இளம் வீரர்கள் மூத்த வீரர்களின் அண்மையில்தான் வளர்த்தெடுக்கப் பட முடியும். இவ்வாறு அந்தப் பத்தியில் அவர் கூறியுள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads






Tirunelveli Business Directory