» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு
ஐ.பி.எல். போட்டியில் இருந்து மேக்ஸ்வெல் விலகல்!
புதன் 3, டிசம்பர் 2025 8:28:27 AM (IST)
அடுத்த ஆண்டுக்கான ஐ.பி.எல். போட்டியில் இருந்து ஆஸ்திரேலிய அணியின் ஆல்-ரவுண்டர் மேக்ஸ்வெல் விலகி இருக்கிறார்.
10 அணிகள் இடையிலான 19-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் தொடர் இந்தியாவில் அடுத்த ஆண்டு (2026) மார்ச் முதல் மே மாதம் வரை நடக்கிறது. இந்த போட்டிக்கான வீரர்கள் மினி ஏலம் அபுதாபியில் வருகிற 16-ந் தேதி நடக்கிறது.இந்த நிலையில் ஆஸ்திரேலிய ஆல்-ரவுண்டர் கிளென் மேக்ஸ்வெல் இந்த ஆண்டுக்கான ஏலப்பட்டியலில் தனது பெயரை பதிவு செய்யவில்லை என்று இன்ஸ்டாகிராம் மூலம் தெரிவித்துள்ளார். இதன் மூலம் 2026-ம் ஆண்டுக்கான ஐ.பி.எல். தொடரை தவற விடும் அவர், அதற்கான காரணம் குறித்து எதுவும் குறிப்பிடவில்லை.
கடந்த ஆண்டு பஞ்சாப் கிங்ஸ் அணியால் ரூ.4.2 கோடிக்கு வாங்கப்பட்ட மேக்ஸ்வெல்லை அந்த அணி நிர்வாகம் கழற்றி விட்டது. தற்போதைய விலகலால் மேக்ஸ்வெல்லின் ஐ.பி.எல். கிரிக்கெட் பயணம் முடிவுக்கு வருகிறது.
2012-ம் ஆண்டு முதல் ஐ.பி.எல். தொடரில் தொடர்ந்து விளையாடி வரும் 37 வயது மேக்ஸ்வெல் 2019-ம் ஆண்டை தவிர்த்து எல்லா சீசன்களிலும் களம் கண்டார். 4 அணிக்காக விளையாடி இருக்கும் அவர் மொத்தம் 141 ஆட்டங்களில் ஆடி 2,819 ரன்கள் எடுத்துள்ளார். 41 விக்கெட்டுகள் வீழ்த்தி இருக்கிறார். அவருடைய விலை ஏறுமுகமாக இருந்தாலும், ஒரு சில சீசன்களை (2014, 2011) தவிர்த்து மற்ற வருடங்களில் எதிர்பார்ப்புக்கு ஏற்ப செயல்படவில்லை.
குறிப்பாக கடந்த இரு ஆண்டுகளில் (2024, 2025) முறையே 52, 42 ரன் மட்டுமே எடுத்து பெருத்த ஏமாற்றம் அளித்தார். கடந்த சீசனில் கைவிரலில் ஏற்பட்ட எலும்பு முறிவால் பாதியில் விலகிய மேக்ஸ்வெல்லுக்கு பதிலாக சேர்க்கப்பட்ட மிட்செல் ஓவனை (ஆஸ்திரேலியா) தக்கவைத்த பஞ்சாப் அணி நிர்வாகம் மேக்ஸ்வெல்லை கண்டு கொள்ளவில்லை. இதனால் இந்த முறை தன்னை எந்த அணியும் ஏலத்தில் எடுக்காத நிலை உருவாகலாம் என்பதை உணர்ந்து அவர் ஒதுங்கி இருக்கலாம் என்று கருதப்படுகிறது.
ஏற்கனவே பாப் டு பிளிஸ்சிஸ் (தென்ஆப்பிரிக்கா), மொயீன் அலி (இங்கிலாந்து) ஆகியோர் பாகிஸ்தான் சூப்பர் லீக் விளையாடுவதற்காக ஐ.பி.எல்.லை தவிர்த்து இருக்கின்றனர். கொல்கத்தா அணிக்காக ஆடி வந்த ஆல்-ரவுண்டர் ஆந்த்ரே ரஸ்செல் (வெஸ்ட்இண்டீஸ்) ஓய்வை அறிவித்த கையோடு அந்த அணியின் உதவி பயிற்சியாளராக ஒப்பந்தமாகி உள்ளார்.
இதற்கிடையே, ஐ.பி.எல். போட்டி ஏலத்துக்கு மொத்தம் 1,355 வீரர்கள் தங்களது பெயரை பதிவு செய்துள்ளனர். இதில் கேமரூன் கிரீன், லிவிங்ஸ்டன், ரச்சின் ரவீந்திரா, ரவி பிஷ்னோய், வெங்கடேஷ் அய்யர், ஹசரங்கா, பதிரானா உள்ளிட்ட 45 வீரர்களின் அடிப்படை விலை ரூ.2 கோடியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
ஏலத்தில் பதிவு செய்துள்ள வீரர்களின் பட்டியல் 10 அணிகளுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அத்துடன் தங்களுக்கு விருப்பமான வீரர்கள் குறித்து ஒவ்வொரு அணிகளும் வருகிற 5-ந் தேதிக்குள் தெரிவிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதன் பிறகு ஏலப்பட்டியல் இறுதி செய்யப்படும். இந்த ஏலத்தில் மொத்தம் 31 வெளிநாட்டவர் உள்பட 77 வீரர்களை அணிகள் வாங்க இருக்கின்றன.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

விஜய் ஹசாரே தொடரில் 15 ஆண்டுகளுக்குப் பின் விராட் கோலி.!
புதன் 3, டிசம்பர் 2025 12:46:19 PM (IST)

சையத் முஷ்டாக் அலி தொடரில் அதிரடி சதம் : வைபவ் சூர்யவன்ஷி வரலாற்று சாதனை!
செவ்வாய் 2, டிசம்பர் 2025 5:11:10 PM (IST)

கோலி அபார சதம்: தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதலாவது ஒரு நாள் போட்டியில் இந்திய அணி போராடி வெற்றி!
திங்கள் 1, டிசம்பர் 2025 8:38:55 AM (IST)

மகளிர் ஐபிஎல் 2026 அட்டவணை வெளியீடு: முதல் போட்டியில் மும்பை-பெங்களூரு மோதல்!
சனி 29, நவம்பர் 2025 5:20:14 PM (IST)

யு-17 உலகக் கோப்பை கால்பந்து போட்டி : போர்ச்சுகல் அணி சாம்பியன்!
சனி 29, நவம்பர் 2025 11:38:37 AM (IST)

கவுகாத்தியில் அபார வெற்றி: இந்திய மண்ணில் வரலாறு படைத்த தென் ஆப்பிரிக்கா!
புதன் 26, நவம்பர் 2025 12:48:38 PM (IST)


