» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு
விஜய் ஹசாரே தொடரில் 15 ஆண்டுகளுக்குப் பின் விராட் கோலி.!
புதன் 3, டிசம்பர் 2025 12:46:19 PM (IST)
15 ஆண்டுகளுக்குப் பின்னர் மீண்டும் விஜய் ஹசாரே தொடரில் விளையாட விராட் கோலி விருப்பம் தெரிவித்துள்ளதாக தில்லி கிரிக்கெட் சங்கம் உறுதிபடுத்தியுள்ளது.
இந்திய அணியின் முன்னாள் கேப்டன்களும், மூத்த வீரர்களுமான ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி இருவரும் கடந்தாண்டு (2024) இந்திய அணி டி20 உலகக் கோப்பையை வென்ற பிறகு, சர்வதேச டி20 போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்றனர்.அதன்பின், இந்தாண்டில் இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கு முன்பாக டெஸ்ட்டில் இருந்து இருவரும் விடைபெற்றனர். டி20, டெஸ்ட் போட்டிகளிலிருந்து ஓய்வை அறிவித்துவிட்டபோதிலும், இருவரும் இந்திய அணிக்காக தொடர்ந்து 2027 ஆம் ஆண்டு ஒருநாள் உலகக் கோப்பைத் தொடர் வரை, ஒருநாள் போட்டிகளில் விளையாடுவார்கள் எனக் கூறப்படுகிறது.
விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா இருவரும் இன்னும் இரண்டு ஆண்டுகள் வரை விளையாடுவது சாத்தியமில்லாதது. அவர்கள் தங்கள் திறனை வெளிப்படுத்தாவிட்டால் இருவரையும் கட்டாய ஓய்வுபெற அறிவுறுத்தப்படுவார்கள் எனவும் பிசிசிஐயின் நம்பத்தகுந்த வட்டாரங்களின் தகவல்கள் வெளியாகின.
அதைத்தொடர்ந்து ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் ரோஹித் சர்மா ஒரு அரைசதம் மற்றும் ஒரு சதம் விளாசினார். விராட் கோலி முதலிரண்டு போட்டிகளில் டக் அவுட் ஆன நிலையில், மூன்றாவது போட்டியில் 74 ரன்கள் குவித்தார்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக நடைபெற்ற முதலாவது ஒருநாள் போட்டியில் துவக்கம் முதலே அதிரடி காட்டிய விராட் கோலி, 135 ரன்கள் குவித்து ஆட்டநாயகன் விருதையும் தனதாக்கினார்.
இந்த நிலையில், இந்திய அணி வீரர்கள் கட்டாயம் உள்ளூர் போட்டிகளில் விளையாட வேண்டும் என்று கடந்த சில ஆண்டுகளாகவே இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) அறிவுறுத்தி வருகிறது.
அதன் ஒருபகுதியாக, உள்ளூர் ஒருநாள் கிரிக்கெட் தொடரான விஜய் ஹசாரே கோப்பையில் விளையாட ரோஹித் சர்மா விருப்பம் தெரிவித்திருந்த நிலையில், இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலியும், விஜய் ஹசாரே தொடரில் விளையாடுவதற்கு விருப்பம் தெரிவித்துள்ளதாகத் தில்லி கிரிக்கெட் சங்கம் தெரிவித்துள்ளது.
விஜய் ஹசாரே கோப்பை தொடரில் தில்லி அணிக்காக விராட் கோலி விளையாடுவார் என்று தில்லி கிரிக்கெட் சங்கத் தலைவர் ரோஹன் ஜேட்லி உறுதிபடுத்திள்ளார். இந்தியாவில் நடத்தப்படும் முதல்தர கிரிக்கெட் தொடர்களில் மிக முக்கியமான ஒரு நாள் தொடரான விஜய் ஹசாரே கோப்பை, டிச. 24 ஆம் தேதி தொடங்கி ஜன. 18 வரை நடைபெறவிருக்கிறது.
டிச. 24 ஆம் தேதி லீக் சுற்றுப் போட்டிகள் தொடங்கி, ஜன.8 ஆம் தேதி வரையும், அதனைத் தொடர்ந்து காலிறுதிப் போட்டிகள் ஜன. 12 ஆம் தேதியும், அரையிறுதிப் போட்டிகள் ஜன. 15 ஆம் தேதியும் இறுதிப்போட்டி ஜன. 18 ஆம் தேதி நடைபெற இருக்கிறது.
இந்தத் தொடரில் தமிழ்நாடு, மும்பை, தில்லி, கொல்கத்தா, கர்நாடகம், கேரளம் உள்பட 32 அணிகள் நான்கு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு போட்டிகளில் பங்கேற்கவுள்ளன.
தில்லி அணி, தனக்கான லீக் சுற்றில் ஆந்திரம் (டிச. 24), குஜராத் (டிச.26), சௌராஷ்டிரம் (டிச.29), ஒடிசா (டிச.31), சர்வீசஸ் (ஜன. 3), ரயில்வேஸ் (ஜன.6) மற்றும் ஹரியாணா (ஜன. 8) ஆகிய அணிகளுடன் விளையாடுகிறது.
ஜன. 11 ஆம் தேதி தொடங்கும் நியூசிலாந்திற்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இந்தியா விளையாடுகிறது. தொடர் தொடங்குவதற்கு 2-3 நாள்களுக்கு முன்பு அவர் இந்திய முகாமில் இணைவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், அவர் 2025-26 விஜய் ஹசாரே டிராபியில் பல போட்டிகளில் விளையாட அதிக வாய்ப்புள்ளது.
டிச. 6 ஆம் தேதி தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான தொடர் முடிந்ததும், விராட் கோலி லண்டன் செல்லவிருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இருப்பினும், அவர் ஆந்திரம், குஜராத், ரயில்வேஸ் அணிகளுக்கு எதிரான போட்டியில் விளையாடுவார் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
விஜய் ஹசாரே கோப்பை தொடரில் தில்லி அணிக்காக 2008 மற்றும் 2010 ஆம் ஆண்டுகளில் 12 போட்டிகளில் விளையாடிய விராட் கோலி, 68.39 என்ற சராசரியுடன் 763 ரன்களைக் குவித்துள்ளார். அதிலும், குறிப்பிடத்தக்க விஷயமாக 2008 - 2009 ஆம் ஆண்டில் 7 போட்டிகளில் விளையாடிய விராட் கோலி 534 ரன்கள் குவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது..
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

ஐ.பி.எல். போட்டியில் இருந்து மேக்ஸ்வெல் விலகல்!
புதன் 3, டிசம்பர் 2025 8:28:27 AM (IST)

சையத் முஷ்டாக் அலி தொடரில் அதிரடி சதம் : வைபவ் சூர்யவன்ஷி வரலாற்று சாதனை!
செவ்வாய் 2, டிசம்பர் 2025 5:11:10 PM (IST)

கோலி அபார சதம்: தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதலாவது ஒரு நாள் போட்டியில் இந்திய அணி போராடி வெற்றி!
திங்கள் 1, டிசம்பர் 2025 8:38:55 AM (IST)

மகளிர் ஐபிஎல் 2026 அட்டவணை வெளியீடு: முதல் போட்டியில் மும்பை-பெங்களூரு மோதல்!
சனி 29, நவம்பர் 2025 5:20:14 PM (IST)

யு-17 உலகக் கோப்பை கால்பந்து போட்டி : போர்ச்சுகல் அணி சாம்பியன்!
சனி 29, நவம்பர் 2025 11:38:37 AM (IST)

கவுகாத்தியில் அபார வெற்றி: இந்திய மண்ணில் வரலாறு படைத்த தென் ஆப்பிரிக்கா!
புதன் 26, நவம்பர் 2025 12:48:38 PM (IST)


